You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'வலிமை' மோஷன் போஸ்டர்: அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் உடைந்தது ஏன்?
'வலிமை' படத்துக்கான ஷூட் ஹைதராபாத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. இதர வேலைகள் மீதம் இருக்கும் நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே வெளியாகியிருக்கிறது 'வலிமை' படத்தின் முதல் பார்வை. இது எப்படி இருக்கிறது?
'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பிறகு ஹெச். வினோத் அஜித் கூட்டணி மீண்டும் இணையும் படம் 'வலிமை'. படம் குறித்தான அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. போனி கபூர் படத்தை தயாரிக்க, அஜித், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, 'காலா' ஹீமா குரேஷி உள்ளிட்ட பலரும் இதில் நடிக்கின்றனர். இசை - யுவன் ஷங்கர் ராஜா.
தள்ளிப்போன முதல் பார்வை
கடந்த ஆண்டு நடிகர் அஜித் பிறந்தநாளின் போதே, முதல் பார்வை வெளியிட திட்டமிட்டு தயாரிப்பாளர் தரப்பு அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், அப்போது கொரோனா முதல் அலையின் தீவிரம் காரணமாக அது தள்ளிப்போனது. இந்த ஆண்டும் அஜித் பிறந்தநாளில் வெளியிட திட்டமிட்டு இரண்டாம் அலை காரணமாக தேதி தள்ளிப்போனது.
அரசியல்வாதிகள் முதல் விளையாட்டு வீரர்கள் வரை 'வலிமை அப்டேட்' கேட்டே ஓய்ந்து போனார்கள் அஜித் ரசிகர்கள். இது சமூகவலைதளங்களிலும் வைரல் ஆனது.
இந்த நிலையில்தான் அம்மா செண்டிமெண்ட் பாடல், நடிகர் அஜித்திற்கான ஓப்பனிங் பாடல் என ரசிகர்களுக்கு ஏற்றது போல இசை அசத்தலாக வந்திருக்கிறது என அப்டேட் கொடுத்தார் படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. படத்தில் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி ஆக்ஷன் அதிரடி காட்சிகள் அசத்தலாக வந்திருக்கின்றன எனவும், சத்தியமூர்த்தி எனும் போலீஸ் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார் எனவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில்தான் இரண்டாம் அலையின் தீவிரம் குறைந்து படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகளோடு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து, படத்தின் மீதமிருக்கும் காட்சிகள் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் தற்போது தொடங்கியுள்ளன. தற்போது படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து வருகிறது.
வெளியான முதல் பார்வை
இந்த மாதம் 15ம் தேதி அன்று நிச்சயம் 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டருடன் முதல் பார்வை வெளியாகும் என சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. பொதுவாக, அஜீத் படங்களைப் பொருத்தவரை முன்கூட்டியே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடாமல் பட அப்டேட்டுகள் கொடுப்பதுதான் வழக்கம். அந்த வகையில், இன்று முழுக்க சமூக வலைதளங்களில் 'வலிமை' முதல் பார்வை வெளியாகிறது எனும் செய்தி ட்ரெண்டிங்கில் இருந்தது.
அஜித்தின் வியாழக்கிழமை செண்டிமெண்ட் என்ன ஆனது?
முன்பே கேள்விப்பட்டதுபோல படத்தில் அதிரடி காட்சிகளுக்கு பஞ்சமில்லை என்பதை மோஷன் போஸ்டர் உறுதி செய்திருக்கிறது. பைக் பந்தயத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் அஜித். படத்தில் அதற்கான காட்சிகள் இருக்கின்றன என்பதற்கான புகைப்படங்கள் முன்பே சமூக வலைதளங்களில் வெளியாயின. அதனை படத்தில் இயக்குநர் ஹெச். வினோத் நன்றாக பயன்படுத்தி இருக்கிறார் என்பது மோஷன் போஸ்டரின் முதல் காட்சியிலேயே தெரிகிறது.
முழு ஜெர்கின், தலைக்கவசத்தோடு அஜித் நிற்க அதிலிருந்து அடுத்தடுத்த ஆக்ஷன் காட்சிகளோடு நகர்கிறது 'வலிமை' மோஷன் போஸ்டர். இதோடு 'Power is a state of mind' என்ற வரியோடு 'வலிமை' மோஷன் போஸ்டர் அஜித் ரசிகர்களுக்கான பட்டாசாக வெளிப்படுகிறது.
யுவன் பின்னணி இசையோடு வெளியாகியிருக்கும் இந்த மோஷன் போஸ்டரில் படத்தின் வெளியீடு 2021 என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் தியேட்டர், சேட்டிலைட் உரிமம் மற்றும் மற்றவை என படத்தின் வணிகத்தை 200 கோடிக்கும் மேல் முடித்திருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர் .
பொதுவாகவே, படத்தின் எந்த அறிவிப்பும் வியாழக்கிழமை இருக்கும்படி பார்த்து கொள்வார் அஜித். ஆனால், தற்போது ரசிகர்கள் இரண்டு வருடங்களுக்கும் மேலாக காத்திருப்பதாலும், முன்கூட்டியே தயாரான மோஷன் போஸ்டர் மற்றும் முதல்பார்வை படக்குழுவுக்கும் திருப்தியாக இருந்ததாலும் இதற்கு மேலும் தாமதிக்க வேண்டாம் என்று வெளியிட்டிருக்கிறார்கள்.
'வலிமை' அப்டேட்- வானதி ட்வீட்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டபோது 'நான் வென்றால் 'வலிமை' அப்டேட் வாங்கித் தருவேன்' என சொல்லியிருந்தார் வானதி சீனிவாசன்.
தற்போது 'வலிமை' முதல் பார்வை வெளியாகியிருக்கும் நிலையில் 'நான் வெற்றி பெற்றவுடன் 'வலிமை' அப்டேட் வந்து விட்டது' என ட்வீட் செய்துள்ளார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்