You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீமான் vs லிங்குசாமி: மீண்டும் வெடித்த 'பகலவன்' கதை சர்ச்சை
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
கடந்த 2013-ல் 'பகலவன்' கதை தொடர்பாக இயக்குநர்கள் லிங்குசாமிக்கும் சீமானுக்கும் இடையில் எழுந்த பிரச்னைக்கு அப்போதே சுமூக தீர்வு எட்டப்பட்ட நிலையில் பின்பு மீண்டும் தற்போது சலசலப்பு எழுந்துள்ளது. என்ன பிரச்னை? இதற்கான முடிவு என்ன?
கடந்த 2013ல் இயக்குநர் சீமான் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அந்த கடிதத்தில் இயக்குநர் லிங்குசாமி நடிகர் சூர்யாவை வைத்து இயக்க இருக்கும் கதை தன்னுடைய 'பகலவன்' கதை சாயலில் இருப்பதாகவும், இந்தக் கதையைப் பத்து வருடங்களுக்கு முன்பே நடிகர்கள் விஜய் மற்றும் விக்ரமிடம் சொல்லியிருப்பதாகவும் அதன் பிறகு நடிகர் 'ஜெயம்' ரவியிடம் சொல்லி அவர் கதைக்கும் கால்ஷீட் கொடுத்ததாகவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனால், 'பகலவன்' சாயலில் இருக்கும் கதையை லிங்குசாமி எடுத்தால் அதனால் தாம் பாதிக்கப்படுவதாகவும் அந்த கதையை இயக்குநர் லிங்குசாமி கைவிட வேண்டும் எனவும் அந்த கடிதத்த்தில் சீமான் தெரிவித்திருந்தார்.
இயக்குநர் லிங்குசாமி சொல்வது என்ன?
இயக்குநர் சீமான் கடிதத்திற்கு பதில் சொல்லும் விதமாக இயக்குநர் லிங்குசாமி, தாம் இந்தக் கதையை நடிகர் சூர்யாவிற்கு ஆறுமாதத்திற்கு முன்பே சொல்லி படப்பிடிப்பிற்கான திட்டங்களும் முடிந்து விரைவில் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், படத்தை கைவிடுவதால் நான் மட்டுமில்லாமல், மொத்த படக்குழுவும் பாதிக்கப்படுவோம் என இயக்குநர்கள் சங்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், இயக்குநர் சீமானின் 'பகலவன்' கதை தமக்குத் தெரியாது எனவும் அந்த கதைக்கும் தன்னுடைய கதைக்கும் எந்தவிதமான தொடர்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இயக்குநர்கள் சங்கத்தின் முடிவு என்ன?
இயக்குநர்கள் இருவர் தரப்பையும் கேட்டறிந்ததனர். அதன் அடிப்படையில் இருவரும் ஒருவர் கதையை அறிந்தவர்கள் அல்ல தற்செயலாக கதைச் சாயல் நடந்துள்ளது என இயக்குநர் விக்ரமன் தலைமையிலான இயக்குநர்கள் சங்கத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டது.
அதன் அடிப்படையில், நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் படத்தில் இந்த கதையை பயன்படுத்தாமல் வேறு கதையை உருவாக்க இயக்குநர் லிங்குசாமி ஒப்பு கொண்டார். அப்படி உருவானதுதான் 'அஞ்சான்' கதை.
அதேபோல, தமிழ் தவிர வேறு மொழிகளில் லிங்குசாமி கதையை எடுக்க தமக்கு ஆட்சேபனை இல்லை எனவும் இருவரும் அவரவர் கதைகளை வேறு மொழிகளில் எடுக்கவும் தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கு ரீமேக் மற்றும் டப்பின் செய்யலாம் எனவும் இருவர் கதைக்குமான காப்புரிமை இருக்கிறது எனவும் இந்த பிரச்னைக்கு அப்போதே தீர்வு எட்டப்பட்டது.
தற்போது மீண்டும் பிரச்னை ஏன்?
இயக்குநர் லிங்குசாமி தற்போது இந்த கதையை தெலுங்கில் நடிகர் ராம் பொத்தினேனியை இயக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருக்கிறது.
இந்த கதையை இயக்குநர் லிங்குசாமி எடுக்கக்கூடாது என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் (South Indian Film Writers Association) கடந்த ஏப்ரல் மாதம் சீமான் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரை இயக்குநர் பாக்கியராஜ் தலைமையிலான குழு விசாரித்து தெரிவித்திருப்பதாவது, இதே புகார் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பே உங்களால் தெரிவிக்கப்பட்டு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் இயக்குநர்கள் விக்ரமன், செல்வமணி ஆகியோரால் விசாரிக்கப்பட்டு சமரசமும் எட்டப்பட்டுவிட்டது. அந்த சமரசத்தில் குறிப்பிட்டுள்ள ஒப்பந்தம் எதையும் இயக்குநர் லிங்குசாமி மீறவில்லை. எனவே, நீங்கள் அவர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை என சொல்லப்பட்டுள்ளது.
சீமான் என்ன சொல்கிறார்?
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமானை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம். அவர் சார்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பாக்கியராசன், "இது தொடர்பாக சீமான் அவர்கள் எதுவும் பேசும் மனநிலையில் இல்லை. இயக்குநர் லிங்குசாமி அதே 'பகலவன்' கதையை வேறு மொழிகளில் எடுக்க இருக்கிறார் எனும் செய்தி கேள்விப்பட்டுதான் இந்த புகார் கொடுத்தார். மற்றபடி தற்போது பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது. முடிவு எட்டப்பட்ட பின்பு தெரிவிக்கிறோம்" என முடித்து கொண்டார்.
'பின்வாங்கப் போவதில்லை'
இயக்குநர் லிங்குசாமியை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம். ராம் பொத்தினேனி பட வேலைகளில் ஹைதராபாத்தில் பிஸியாக இருந்தவர் சார்பாக அவரது உதவி இயக்குநர் சந்தோஷ் பேசினார் .
"ஏற்கனவே, முடித்த பிரச்னையை தற்போது மீண்டும் ஏன் கொண்டு வருகிறார்கள் என தெரியவில்லை. இதற்கு மறுபடியும் தீர்வு சொல்லப்பட்டு அதிகாரப்பூர்வமாக எழுத்தாளர்கள் சங்கத்திலும் முடிவு செய்யப்பட்டு விட்டது. அந்த பதிலைத்தான் நாங்களும் சொல்கிறோம். இந்த மாதம் தெலுங்கு படம் தொடங்க இருப்பதால் செட் மற்றும் மற்ற வேலைகளில் குழுவுடன் இயக்குநர் பிஸியாக இருக்கிறார். முன்பு சொன்ன ஒப்பந்தத்தின்படியும், இப்போது மறுபடியும் எடுக்கப்பட்ட முடிவின்படியும்தான் இந்த கதையை பொறுத்தவரையில் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அதனால், கதையை எடுப்பதில் இருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை" என்றார்.
பிற செய்திகள்:
- ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் தலைவர்கள் பட்டியலில் நரேந்திர மோதி இடம்பெற்றது ஏன்?
- டோக்கியோ ஒலிம்பிக்: சானியா மிர்சா இந்த முறை சாதிப்பாரா?
- அன்டார்டிகாவில் புதிய தாவரத்தின் பெயர் 'பாரதி'
- தடுப்பூசி போட்டால் வாழ்நாள் முழுவதும் கொரோனா வராதா?
- மலேசிய அரசியல்: நள்ளிரவில் விலகிய அம்னோ கட்சி; மொகிதின் அரசு கவிழ்கிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்