ஜகமே தந்திரம் சந்தோஷ் நாராயணன் பேட்டி: 'அநியாயம் பண்றீங்க சார் என்று தனுஷை திட்டினேன்'

    • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
    • பதவி, பிபிசி தமிழுக்காக

'ஆசை ஒரு புல்வெளி', என மெலடியிலும் சரி 'ரகிட ரகிட' என கானாவிலும் சரி கேட்பவருக்கு கொண்டாட்ட மனநிலையை கொடுக்கக்கூடியது சந்தோஷ் நாராயணின் இசை.

'பாரிஸ் ஜெயராஜ்', 'கர்ணன்' என தற்போது இளைஞர்கள் பலரது ப்ளேலிஸ்ட்டை சந்தோஷின் பாடல்கள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. லாக்டவுண் சமயத்திலும் தனியிசை, சினிமா இசை என பரபரப்பாக இருக்கிறார். 'கொடி', 'வடசென்னை', 'கர்ணன்' படங்களுக்கு பிறகு தனுஷூடன் மீண்டும் 'ஜகமே தந்திரம்' படத்தில் இணைந்திருக்கிறார். பிபிசி தமிழுக்காக சந்தோஷ் நாராயணனிடம் பேசினோம்.

'ஜகமே தந்திரம்' படத்துடைய மியூசிக் ஆல்பம் ஹிட். இப்போ பாடல்களை கதையோடு சேர்த்து ரசிகர்கள் பார்க்க இருக்காங்க. எப்படி இருக்கு? என்ன சொல்ல விரும்பறீங்க?

"நெருக்கடியான கொரோனா லாக்டவுண் காலம் இது. பலருக்கும் தனிப்பட்ட முறையில் இழப்புகள் நிறைய இருக்கு. இதுபோன்ற காலக்கட்டத்தில் இந்த படம் வெளியாவதே பெரிய வெற்றி. படத்தை வெளியே எடுத்து வந்த தயாரிப்பாளர் சஷி, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், படத்தில் வேலை பார்த்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நெட்ஃபிலிக்ஸ் எல்லாருக்குமே நன்றி. இந்த வருடத்தில் 'கர்ணன்' படத்திற்கு முன்பு பல படங்கள் வெளியாவதில் நிறைய சிக்கல்கள் இருந்தது. அதனால், இந்த படம் வெளியாவதே மகிழ்ச்சி. மக்களிடம் இருந்து எண்டர்டெயின்மெண்ட் என்பதை எடுக்கவே முடியாது. இந்த பேரிடர் காலத்தில் மக்களுக்கு சினிமா மூலமாக நம்மால் முடிந்த மகிழ்ச்சியை தர முடிகிறது என்பதற்கு நன்றி".

'நேத்து' பாடலை தவிர, 'ரகிட ரகிட', 'புஜ்ஜி' என படத்தில் மற்ற பாடல்கள் எல்லாமே கொண்டாட்ட இசையாக உள்ளது. இது திட்டமிட்டதா இல்லை கதைக்கு ஏற்றாற் போல அமைந்ததா?

"கதையில் இருந்ததுதான். கதையிலேயே அந்த கொண்டாட்ட இசைக்கான இடம் இருந்தது. அதனால், பாடல்களும் இசையும் விரும்பியே செய்தேன். கதைக்கானதாகவும் இருந்தது. இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஆமாம் என்பதுதான்".

இசையில் நடிகர் தனுஷ் உடைய கருத்தும் கேட்போம் என சொல்லியிருந்தீர்கள். அவருடைய இசையறிவு குறித்து சொல்லுங்கள்?

"தனுஷ் அவர்களுக்கு இசை அறிவு என்பது இயல்பாகவே இருக்கிறது. அதை நாங்கள் 'ஜகமே தந்திரம்' படத்தில் உபயோகப்படுத்தி கொண்டோம். அவருக்கே தெரியாமல் இதை செய்து கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் அவரிடமே சொல்லி விட்டோம். 'சார், இதை நாங்க உங்களுக்கு அனுப்புவோம். நீங்க நல்லா இருக்குன்னு சொன்னா மட்டும்தான் எடுத்துப்போம்' என சொன்னோம். இதை கேட்டு சிரித்தார். அவருக்குள்ள இசை அறிவு என்பது மிகப்பெரிய திறமை. அதை அவர் மிக சாதாரணமாக கடந்து செல்கிறார். தனுஷ் அவர்களுக்கு இந்த திறமை இருப்பதை பெரிய விஷயமாக பார்க்கிறேன்".

'கர்ணன்', 'ஜகமே தந்திரம்' என உங்கள் இசையில் தனுஷ் அடுத்தடுத்து பாடியுள்ளார். பாடல் பதிவின்போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள்?

"'கர்ணன்' படத்தில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது. மொத்தமாகவே, 30-45 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. இந்த நேரத்திற்குள் பாட வேண்டும் அதை பதிவு செய்ய வேண்டும் அதே சமயம் அவர் பாடுவதையும் படமாக்க வேண்டும். பொதுவாக, பாடலின் 'மேக்கிங் வீடியோ' பாடி முடித்ததும், பாடுவது போல நடிக்க வைத்துதான் எடுப்பார்கள். ஆனால், இந்த முறை நேரம் இல்லாததால் அப்படியே நேரடியாக பாட வைத்து படமாக்கினோம். இது நன்றாக வருமா என எங்கள் யாருக்குமே அப்போது தெரியாது. ஆனால், தனுஷ் அந்த 45 நிமிடங்களுக்குள்ளாகவே பாட்டை முடித்து விட்டார்.

மதியம் அந்த பாட்டை முடித்துவிட்டு அன்று இரவு 'க்ரேமேன்' படப்பிடிப்பிற்காக அவர் செல்ல வேண்டியிருந்து. 'சார் சம்பந்தமே இல்லாத விஷயங்கள் எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கீங்க. 'கர்ணன்', 'ஜகமே தந்திரம்', 'க்ரேமேன்', இன்னொரு பக்கம் படம் இயக்க கதை சொல்லிட்டு இருக்கீங்க, மற்றொரு பக்கம் ரசிகர்களுடன் மீட்டிங் என அநியாயம் பண்ணறீங்க. எல்லா வேலையும் நீங்களே பண்ணறீங்களே' என அவரிடம் அடிக்கடி சொல்வேன். கலை பின்னால் ஒருவர் இப்படி ஓடுவது எனக்குமே பல சமயங்களில் உந்துதலாக இருக்கும்".

இசையமைப்பாளர்கள் மற்ற இசையமைப்பாளர்களுடைய இசையில் பாடல்கள் பாடக்கூடிய ட்ரெண்ட் குறித்து?

"ரொம்ப நல்ல விஷயமாகவே பார்க்கிறேன். நண்பர்கள் கூட்டம் வளர்ந்து கொண்டே போகும் என சொல்வார்கள் இல்லையா? அதுபோல, நாங்கள் கலைக் குடும்பமாக வளர்வது மகிழ்ச்சி. நாங்கள் இங்கு குடும்பம் என சொல்வது பேட்டிக்காக மட்டுமல்ல. உண்மையாகவே நாங்கள் அப்படித்தான். அதுவும் அனிருத் என்னிடம் வந்து அன்பாக பேசுவார். தன்னுடைய வேலையை என்னிடம் சொல்வார். என்னுடைய வேலை பிடித்தது என்றால் அதுவும் பகிர்வார். அனிருத் மட்டுமல்ல, யுவன் ஷங்கர் ராஜா, சாம் சி.எஸ், கோவிந்த் வசந்தா, ஜி.வி. பிரகாஷ் என எல்லாரும்தான். ஜி.வி. பிரகாஷ்-க்கு தீ குரல் மிகவும் பிடிக்கும். இப்படி நிறைய சொல்லி கொண்டே போகலாம்.

இது ஒரு வகையான கலாசார பரிமாற்றம் என்றுதான் சொல்வேன். எனக்கு மற்ற மொழிகளில் இது எப்படி இருக்கிறது என்பது தெரியாது. ஆனால், இங்கு இருப்பது ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கிறேன்".

இதுபோல, உங்களுக்கு எந்த இசையமைப்பாளர்கள் இசையில் பாட விருப்பம்?

"முதலில் என்னை யாரும் பாட வைக்க கூடாது என்றுதான் நினைப்பேன். ஏனெனில், என்னுடைய குரல் நன்றாக இருக்காது. 'நான் இந்த பாடலை பாடுவதால் இந்த பாடல் நன்றாக வரமால் போக வாய்ப்புள்ளது. அது உங்களுக்கு பரவாயில்லையா?' என கேட்பேன். அவர்கள், 'சரி, பரவாயில்லை' என ஒப்புக் கொண்டால் மட்டுமே பாடுவேன். எனக்கு ரஹ்மான் சாரை பாட வைக்க வேண்டும் என விருப்பம் உண்டு. ஒருமுறை எங்களுக்கு பாடிவிட்டால், பின்பு எல்லாருக்கும் பாட வேண்டும்.

ஏனெனில், மற்ற இசையமைப்பாளர்கள் இசையில் அவரது குரலில் பாடல் கேட்க எனக்கு விருப்பம் உண்டு. இது என்னுடைய தனிப்பட்ட விருப்பமும் கூட".

உங்களது இசை குறித்து நண்பர்களிடம் கருத்து கேட்பீர்களா? தீ என்ன சொல்வார்?

"நிச்சயம் கருத்து கேட்பேன். 'ரகிட' பாடலின் பீட் தீ மற்றும் என்னுடைய பழைய இன்ஜினியர் இவர்கள் இணைந்துதான் தேர்ந்தெடுத்தார்கள். பொதுவாக கார்த்தியிடம் சொல்வேன். 'யூத் கிட்ட பாடல்கள் போட்டு காண்பிக்கலாம். இவர்கள்தான் கேட்க போகிறவர்கள். அதனால், பிடிக்குதா என பார்க்கலாம்' என சொல்லி பாடலை போட்டு விட்டு நானும், கார்த்தியும் பெருமையாக திரும்பி அவர்களை பார்த்தோம். ஆனால், அவர்கள் கேட்ட உடனே, 'நல்லாவே இல்லை' என்றார்கள். பிறகுதான், மற்ற பீட்டையும் வாசித்து காட்டி, அதில் அவர்கள் நன்றாக இருக்கிறது என சொன்னதுதான் இந்த 'ரகிட'. இப்படித்தான் இசையை மக்களுக்கு பிடிக்க வைக்க நிறைய உழைப்பை போடுவோம்.

அதேபோல, தீயும் என்னுடைய இசையில் நிறைய கருத்துகள் சொல்வார். அவர் மட்டுமல்ல, இதுபோல, நிறைய பேரிடமும் கருத்துகள் கேட்பேன்".

சினிமாவில் தற்போது நியூ வேவ் இயக்குநர்கள் என சொல்லக்கூடிய வெற்றிமாறன், ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், ராஜூமுருகன், மாரி செல்வராஜ் இவர்கள் அனைவருடனும் பணியாற்றி உள்ளீர்கள். இசையில் அவர்களுடைய வொர்க்கிங் ஸ்டைல் எப்படி?

"நீங்கள் சொல்லிய ஒவ்வொருவர் பற்றியும் ஒவ்வொரு பேட்டி கொடுக்கலாம். அந்த அளவிற்கு சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஐடியாலஜி இருக்கிறது. மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க ஒவ்வொருவருக்கு தனிப்பட்ட திரை மொழி இருக்கிறது. இது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போதுதான் நமக்கும் புதிதாக எதாவது செய்து பார்ப்பதற்கான வெளி கிடைக்கும். ராஜுமுருகன் படங்களுக்கு இசையமைப்பது போல நான் கார்த்திக் சுப்பராஜ் படங்களுக்கு செய்ய மாட்டேன். வெற்றிமாறனுக்கு செய்வது போல ரஞ்சித்துக்கு செய்ய மாட்டேன். இப்படி ஒவ்வொரு விதமாக வேலை செய்யும் போதுதானே சுவாரஸ்யமாக இருக்கும்.

இசையை பொதுவாக நான் உணவு போல பார்ப்பேன். இன்று ஓர் உணவு சாப்பிட்டால், நாளை வேறு ஓர் உணவுதானே எதிர்ப்பார்ப்போம். அதுபோலதான் இசையும்".

ஒரு படத்தில் கமிட் ஆகும் போது படத்தின் கதையை பார்ப்பீர்களா அல்லது உங்களுக்கு இசைக்கான இடம் தரும் கதையை தேர்ந்தெடுப்பீர்களா?

"நான் கதை மட்டும்தான் பார்ப்பேன். 'வடசென்னை' கதை கேட்டுவிட்டு இந்த படத்திற்கு இசையே தேவையில்லையே என்று வெற்றிமாறனிடம் சொன்னேன். அந்த அளவிற்கு நான் கதையை பார்ப்பேன். 'பண்ணுவோம், வேண்டாம்ன்னா எடுத்துடலாம்' என்றுதான் வெற்றிமாறனும் சொன்னார்.

'பாரிஸ் ஜெயராஜ்' ஒரே ஒரு படம்தான் இசைக்காக சம்மதித்தது. ஏனெனில், அங்கு கானா பாடல்களுக்கான இடம் இருந்தது. அதனால் 'நான்தான் அந்த படத்திற்கு இசையமைப்பேன்' என கெட்டியாக பிடித்து கொண்டேன்".

சினிமா இசை என்பது கதைக்கான இசையை மட்டுமே கொண்டு வர வேண்டும். தனியிசையில் அதிக விருப்பமுள்ள உங்களுக்கு இந்த சூழல் தொடக்கத்தில் எப்படி இருந்தது?

"சினிமாவில் என்னுடைய ஆரம்ப காலத்தில் மிக நல்ல மனிதர்கள் எல்லாரும் எனக்கு இயக்குநர்களாக கிடைத்தார்கள். யாரவது வந்து என்னிடம் இசையில் மாற்றங்கள் கேட்டால், அதெல்லாம் முடியாது என்று சொல்லக்கூடிய நபராகதான் இருந்தேன். இரஞ்சித், நலன், கார்த்திக் சுப்பராஜ், சி.வி. குமார் இவர்கள் நான்கு பேரும் எனக்கு எந்த விதமான இசையில் அழுத்தமும் கொடுத்ததே கிடையாது. அதனாலேயே, என்னால் இசையில் அதிக ஈடுபாடு காட்ட முடிந்தது. என்னை சும்மா விட்டாலே எதாவது ஜாலியாக பண்ணுவேன் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என அப்படியே எல்லாருக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. ஒரு குழந்தையை காப்பாற்றுவது போல இவர்கள் எனக்கு இருந்தார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றி.

சினிமாவிலும் நான் சுதந்திரமாகதான் இசையைமைக்கிறேன். பெரிதாக அழுத்தம் எனக்கு இல்லை. அதேபோல, இயக்குநர்கள், கூட இருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் உடனே இசையில் தேவையான மாற்றங்களை செய்து விடுவேன்".

தனியிசையில் அடுத்து என்ன திட்டம்?

"நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பேட்டி வெளியில் வரும்போது கூட அதற்கான அறிவிப்பு வந்திருக்கலாம். உலக அளவிலான கலைஞர்களுடன் இணைந்து பணி தொடங்க உள்ளது. அதில் எனக்கு மகிழ்ச்சி. இது தீ, அறிவு, எனக்காக மட்டுமில்லை. நிறைய திறமையான தனியிசை கலைஞர்கள் உள்ளார்கள். நன்றாக இருக்கிறோம் என்ற போர்வையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் தனியிசை கலைஞர்களையும் எனக்கு தெரியும். இது போன்ற பல திறமையான இசைக்கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாக இது அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.

அறிவு எழுதி, தீ பாடிய இந்த 'என்ஜாய் எஞ்சாமி' அதற்கு பாலமாக அமைந்ததில் மகிழ்ச்சி. என்னை பொருத்தவரை இது பிறவிப்பலனை அடைந்தது போலதான். ஏனென்றால், தனியிசை செய்து கொண்டிருந்த காலத்தில் நானும் கஷ்டப்பட்டேன். அது வேறுமாதிரியான ஒரு அழுத்தம். அதையெல்லாம் கடக்க இது என்னாலான முயற்சி".

காப்பி, இன்ஸ்பிரேஷன் போன்ற விஷயங்களை இசையில் எப்படி பார்க்கறீர்கள்?

"ஒரு இசை நமக்கு பிடித்து அதுபோல் நாம் செய்தால் அவர்களுக்கான கிரெடிட் கொடுக்க வேண்டும். அதற்கு முன்னால் அவர்களது அனுமதி பெற வேண்டும். இதில் நாம் வெளிப்படையாக இருப்பதே நல்லது. சில சமயங்களில் நம்மையும் அறியாமல் இசையில் ஏதேனும் தென்படலாம். அது எதிர்பாராமல் இருந்தால் சரி. ஆனால், அதையும் நாம் மாற்றி கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் பாடல் வெளியான அரைமணி நேரத்திலயே அதெல்லாம் கண்டுபிடித்து விடுகிறார்கள். கலையை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல அந்த குழுவும் முக்கியம் என்றே கருதுகிறேன்".

அடுத்து 'சியான் 60' இசைப்பணி எப்படி போய் கொண்டிருக்கிறது?

"சூப்பரா வந்துட்டு இருக்கு. 'ஜகமே தந்திரம்' படம் வெளியாவது, பாடல்களுக்கு கிடைத்த வெற்றி இதெல்லாம் 'சியான் 60'-ல் சேர்வதில் மகிழ்ச்சி. எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய பாடல்கள் இதில் உள்ளது. விக்ரம் சாரை சமீபத்தில்தான் சந்தித்து பேசினேன். நன்றாக பழகக்கூடியவர். துருவ்விடம் பேசியதிலும் மகிழ்ச்சி. லாக்டவுண் காலத்தில் இந்த படத்திற்கான வேலையும் நடைபெற்றது".

லாக்டவுண் காலம் உங்களுக்கு எப்படி உள்ளது?

"மனதளவில் உறுதியான நபர்தான் நான். எங்களது குடும்பத்திலும் கொரோனாவால் மரணம் ஏற்பட்டது. அதையும் கடந்துதான் வந்துள்ளோம். என்னுடைய இசை, பேச்சு மூலமாக நம்பிக்கை விதைக்க வேண்டும் என்றே கருதுகிறேன். 'என்ன வேணா நடக்கட்டும், நான் சந்தோசமா இருப்பேன்' என என்னுடைய இந்த பாடல் அனைவருக்கும் தேவைப்படும் காலத்தில்தான் உள்ளோம்.

என்னால் முடிந்த வரை நிறைய பேருக்கு உதவி செய்துள்ளேன். முடிந்த அளவுக்கு வெளியே போகாமல் தவிர்ப்பதுதான் நல்லது. ஆறு மாதங்களுக்கு மேல் நான் பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்களை தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்துள்ளேன். எனக்கு தேவையில்லாத பட்சத்தில் பணம் செலவழிப்பதை விட அது தேவைப்படுபவர்களுக்கு இந்த காலத்தில் கொடுப்பது நல்லது. இந்த எண்ணம் அனைவருக்கும் இருக்க வேண்டும். கடந்த ஒரு வருடம் என்னை தனிப்பட்ட முறையில் பாதித்து பல வகைகளில் மாற்றியுள்ளது".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :