You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுறா தாக்குதல்: நண்பர்கள் 'தீரத்தால்' உயிர் தப்பிய சிறுவன் – துணிச்சலான மீட்பு எப்படி நடந்தது?
- எழுதியவர், கெல்லி என்ஜி
சிட்னியில் சமீபத்தில் மூன்று சுறா தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இதில் குறைந்தது இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கள்கிழமை மாலை மேன்லி கடற்கரையில் காயம் அடைந்த ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, டி ஒய் கடற்கரையில் 11 வயது சிறுவன் ஒருவரின் அலைச்சறுக்கு பலகையை சுறா கடித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் அச்சிறுவன் வெளியேற வேண்டியிருந்தது.
இதனைத் தொடர்ந்து நீந்துபவர்கள் மற்றும் அலைச்சறுக்கு செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உள்ளூர் சபை வலியுறுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மதியம் சிட்னி துறைமுகத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது பெரிய சுறா தாக்கியதில் 12 வயது சிறுவன் ஒருவன் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது முதல் சம்பவம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சிட்னியின் புறநகர் பகுதியான வாக்லூஸில் உள்ள ஷார்க் பீச்சில், அந்தச் சிறுவனும் அவனது நண்பர்களும் ஆறு மீட்டர் உயரமுள்ள பாறை விளிம்பிலிருந்து குதித்து விளையாடிக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்தது.
ஷார்க் பீச்
ஷார்க் பீச் என பெயர் இருந்தாலும் அங்கு சுறா தாக்குதல்கள் அரிதானவையே. இது நீச்சலுக்கு பிரபலமான ஒரு இடமாகும்.
மீட்பு குழுவினர் வருவதற்கு முன்பே சிறுவனின் நண்பர்கள் அவனைத் தண்ணீரில் இருந்து வெளியே இழுத்தனர். அவர்களது இந்தச் செயலே அந்தச் சிறுவன் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை அளித்துள்ளதாக காவல்துறை கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிறுவன் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
"அவனது நண்பர்களின் செயல்... தீரமானதன்றி வேறொன்றுமில்லை. இது ஒரு தீரமான மீட்பு," என்று நியூ சவுத் வேல்ஸ் கடல்சார் காவல்துறை தலைவர் ஜோசப் மெக்னல்டி கூறினார்.
"அந்தச் சிறுவர்கள் பார்த்த காயங்கள் மிகவும் கொடூரமானவை, ஆனால் அதுதான் நட்பு என்று நான் கருதுகிறேன்."
கடல்சார் காவல்துறை ஒரு "பயங்கரமான காட்சியை" காண வந்து சேர்ந்ததாக மெக்னல்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர்கள் சிறுவனை காவல்துறையின் அதிவேகப் படகில் ஏற்றி, ரத்தப்போக்கை நிறுத்த கால்களில் இறுக்கமான கட்டை கட்டினர்
படகு ஒரு இறங்குதுறையில் காத்திருந்த ஆம்புலன்ஸை நோக்கிச் சென்றபோது, சிறுவனுக்குச் செயற்கை சுவாசமும் அளிக்க முயன்றனர்.
புல் சுறா
வெப்பமான, ஆழமற்ற நீரில் காணப்படும் ஆக்ரோஷமான புல் சுறாவினால் (bull shark) அந்தச் சிறுவன் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர். பல வல்லுநர்கள் புல் சுறாக்களை உலகின் மிகவும் ஆபத்தான சுறாக்களில் ஒன்றாகக் கருதுகின்றனர்.
வார இறுதியில் பெய்த கனமழை மற்றும் கலங்கல் நீர் நிலைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்கு ஒரு " மிகவும் ஏதுவான சூழலை " உருவாக்கியிருக்கலாம் என்று மெக்னல்டி நம்புகிறார். மழை பெய்யும்போது ஆற்று நீர் ஊட்டச்சத்துக்களைக் கடலுக்குள் கொண்டு வருவதால், அது சுறாக்களைக் கடற்கரைக்கு அருகில் ஈர்க்கக்கூடும்.
சிட்னியின் வடக்குக் கடற்கரைப் பகுதிகளில் நடந்த கடைசி சுறா தாக்குதலில், மேன்லியின் நார்த் ஸ்டெய்ன் கடற்கரையில் ஒரு அலைச்சறுக்கு வீரர் தண்ணீரிலிருந்து வெளியே இழுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசரச் சேவைகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரது கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன, அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
உலகின் மிகச்சிறந்த கடற்கரைகளைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியா, சுறா தாக்குதல்கள் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நாடாகவும் உள்ளது
கடந்த ஆண்டு அந்நாட்டில் சுறா தாக்குதலால் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு