You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லியை உலுக்கும் 9 வயது சிறுமியின் மரணம்: 'பாலியல் வல்லுறவு என பெற்றோர் புகார்'
டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி கொல்லப்பட்டதாக கூறப்படும் 9 வயது சிறுமி விவகாரம், தலைநகரில் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடியிருப்பு பகுதிக்கு இன்று பிற்பகல் சென்றார்.
சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், "பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமி என்றாலும் அவரும் இந்தியாவின் மகள்," என்று தமது ட்விட்டரில் தகவலைப் பகிர்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "பெற்றோரின் கண்களில் வரும் நீர் ஒன்றை தெளிவாகக் கூறுகிறது. தங்களுடைய மகளும் இந்த நாட்டின் குடிமகள்தான். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை அவர்களின் கண்ணீர் உணர்த்துகிறது. அந்த பாதையில் நான் அவர்களுடன் துணை நிற்கிறேன்," என்று கூறினார்.
இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடிய அவரது உறவினர்கள், வசிப்பிடம் போன்ற தகவல்களை பொதுவெளியில் தெரிவிப்பது குற்றமாக கருதப்படும்.
இந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை சந்திக்கச் சென்ற ராகுல் காந்தி, அவர்கள் வசிப்பிடம் அருகே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், தமது காரில் சிறுமியின் பெற்றோரை அமர வைத்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த காட்சியை ஊடகங்கள் பதிவு செய்யவும் அவர் அனுமதித்தார்.
பிறகு சிறுமியின் பெற்றோருடன் தாம் பேசும் படங்களை அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். ஒரு சில ஊடகங்கள் மட்டுமே சிறுமியின் பெற்றோரின் அடையாளத்தை மறைக்கும் வகையில் அவர்களின் முகத்தை மறைத்திருந்தனர்.
இதற்கிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பாதிக்கப்பட்ட பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதாக தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
என்ன நடந்தது?
டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள பழை நாங்கல் கிராமத்தைச் சேர்ந்த குடியிருப்புப் பகுதியில் அந்த சிறுமி தனது குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில், அந்த சிறுமி குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள தர்காவுக்கு முன்பாக விளையாட செல்வதாக கூறினார். ஆனால், முதலில் ஐந்து நிமிட நடை தூரத்தில் உள்ள மின் தகனம் மற்றும் இடுகாடு இருந்த வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள குளிரூட்டும் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வருமாறு சிறுமியை அவரது பெற்றோர் கேட்டுக் கொண்டனர்.
பிறகு கடைவீதிக்கு செல்லும் வழியில் தமது மகளை இடுகாட்டின் வாயிலில் இறக்கி விட்ட அவரது தந்தை, "இரவு சாப்பிட தண்ணீர் முக்கியம். அதனால் முதலில் வீட்டுக்கு குடிநீர் கொண்டு போய் கொடு, பிறகு விளையாட செல்," என்று கூறிச் சென்றார்.
ஆனால், அரை மணி நேரம் கழித்து அந்த இடுகாட்டில் பணியாற்றும் பூசாரி ராதே ஷ்யாம், சிறுமியின் தாயைத் தேடி வந்து உடனே இடுகாடுக்கு வருமாறு அழைத்தார். இதையடுத்து அவருடன் இடுகாட்டுக்குச் சென்று பார்த்தபோது, அந்த சிறுமி மூச்சு நின்ற நிலையில் தரையில் கிடந்தார்.
தனது மகளின் உதடு நீல நிறமாகியிருந்தது. மணிக்கட்டு, முழங்கையில் காயம் காணப்பட்டது. அவரது மூக்கில் ரத்தம் வழிந்தது என்று சிறுமியின் தாய் கூறினார்.
தனது மகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டபோது, உங்களுடைய மகள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது அவரை மின்சாரம் தாக்கியது என்று ராதே ஷ்யாம் கூறியதாகத் தெரிகிறது.
உடலை எரிக்க அவசரப்படுத்திய பூசாரி
சிறுமியின் உடலை உடனடியாக எரிக்காவிட்டால் காவல்துறையினர் வந்து பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்று உடலை வெட்ட நடவடிக்கை எடுப்பார்கள். மருத்துவர்கள் மகளின் உறுப்புகளை திருடி விடுவார்கள். எனவே உடனே எரித்து விடுவோம் என்று ராதே ஷ்யாம் அவசரப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அங்கு என்ன நடக்கிறது என்பதை தான் உணரும் முன்பாகவே பூசாரியின் அழுத்தம் காரணமாக சிறுமியின் சடலம் எரியூட்டப்பட்டது. இதற்கிடையே, தனது கணவருக்கும் குடியிருப்பு பகுதி கிராமவாசிகளுக்கும் சிறுமியின் தாயார் தகவல் கொடுக்க அந்த இடுகாட்டில் சுமார் 200 பேர் வரை திரண்டனர்.
கருகிக் கொண்டிருந்த சிறுமி உடலில் இருந்த தீயை அவர்கள் அணைத்தனர். ஆனால், அவரது கால் பகுதியும் சாம்பலும் மட்டுமே எஞ்சியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.
இதே வேளை சிறுமி சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதையடுத்து, சம்பவ பகுதிக்கு தென்மேற்கு டெல்லி துணை ஆணையர் இங்கித் பிரதாப் சிங் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் பேசினார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராதே ஷ்யாம், மயானத்தின் ஊழியர்கள் குல்தீப் குமார், லக்ஷ்மி நாராயணம், மொஹம்மத் சலீம் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இவர்களை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தை அணுக உள்ளதாக டெல்லி தென் மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையர் பிரதாப் சிங் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தொடக்கத்தில் சிறுமியை தவறாக அடைத்து வைத்தது, தடயங்களை அழித்தது போன்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்த காவல்துறையினர், பிறகு போக்சோ சட்டம், பாலியல் குற்றச்சாட்டுகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளையும் சேர்த்தனர்.
இது குறித்து காவல்துறை தரப்பிடம் கேட்டபோது, ஆரம்பத்தில் சிறுமியின் பெற்றோர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கவில்லை. பிறகு அவர்கள் அந்த குற்றச்சாட்டை சுமத்தியதால் கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டன என்று தெரிவித்தனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் காவல்துறையினர் மெத்தனமாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிப்பதற்கு பதில் தங்களையே அவர்கள் அதிகம் விசாரித்ததாகவும் பெற்றோர் தரப்பு கூறுகிறது.
மாலையில் நடந்த சம்பவத்துக்கு இரவு 10 மணிக்கு பிறகே காவல்துறையினர் வந்ததாகவும் அதன் பிறகும் பெற்றோரான தங்களை இரவு முழுக்க காவல் நிலையத்திலேயே நிற்க வைத்து அலைகழித்ததாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே, சிறுமியின் சாவுக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய முடியவில்லை என்று அது தொடர்பாக ஆராய கேட்டுக் கொள்ளப்பட்ட மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளதாக தென் மேற்கு டெல்லி காவல்துறை துணை ஆணையாளர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதில் அந்த பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார். அவரது சடலத்தை இரவோடு இரவாக எரிக்க பெண்ணின் பெற்றோருக்கு காவல்துறையினர் நெருக்கடி கொடுத்து எரிக்கச் செய்தனர். பின்னர் அந்த விவகாரம் பெரிதாகியதால் சிபிஐ விசாரணைக்கு அந்த வழக்கு மாற்றப்பட்டது.
அந்த சம்பவத்தை ஒத்தது போல, டெல்லியில் 9 வயது சிறுமி மர்மமாக இறந்தது மற்றும் அவரது சடலம் எரியூட்டப்பட்ட காட்சிகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பலரும் குரல் கொடுத்தனர்.
இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வருவதால், தற்போதைக்கு வேறு எதையும் தெரிவிக்க இயலாது என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும், தலைநகரில் சிறுமி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
பிற செய்திகள்:
- தமிழக மேற்கு மாவட்டங்களில் நோய் எதிர்ப்புத்திறன் குறைய காரணம் என்ன?
- மதுரை பேக்காமன் கோயிலில் பட்டியலினத்தவர் நுழைவு: நடந்தது என்ன?
- பெட்ரோலுக்கு அதிக வரி வசூலிப்பது மத்திய அரசா மாநில அரசா? #Factcheck
- விண்வெளி அதிசயம்: கருந்துளைக்கு பின்னால் ஒளி - 5 கேள்வி பதில்கள்
- மீரட்டில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக முஸ்லிம் பெண் புகார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்