”உங்களிடம் உரையாடும் உரிமையை பிள்ளைகளுக்கு கொடுங்கள்”

    • எழுதியவர், கிருத்திகா கண்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

சமீபத்தில் சென்னையை சேர்ந்த 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 17 ஆண்கள் பாலியல் தொந்தரவிற்கு உள்ளாக்கிய சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கேட்கும் திறனற்ற இந்த சிறுமியை கடந்த 6 மாதங்களில் 17 ஆண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்கள். அதுவும் அந்த குடியிருப்பில் பணியாற்றும் ஆண்களே இவற்றை செய்துள்ளார்கள் என்ற செய்தியைக்கேட்டதும், சமூக வலைதளங்களில் பலரும் கோபத்தை வெளிப்படுத்துவதை பார்க்க முடிந்தது.

குற்றவாளிகளுக்கு தண்டனை கடுமையான இருக்கவேண்டும் என்று பலரும் பேசி வரும் நிலையில், தங்கள் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பக்கூட தயக்கமுள்ளதாக பல பெற்றோர் அச்சத்தை வெளிப்படுத்தினர்.

இந்த சிறுமி காது கேட்கும் திறனற்ற குழந்தை என்பதும் பல உரையாடல்களில் குறிப்பிடப்படுவதை பார்க்க முடிந்தது.

பல்வேறு மாநிலங்களில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில், காது கேளாத, உளவியல்-சமூக பிரச்னைகள் கொண்ட பெண்கள், இத்தகைய பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகளை அதிகமாக கொண்டுள்ளார்கள் என்கிறது 'உமன் வித் டிசெபிலிட்டீஸ் இந்தியா நெட்வர்க்' என்ற சமூக செயல்பாட்டாளர்கள் குழுவின் அறிக்கை.

"அரசு விழித்தெழும் நேரம்"

மாற்றுத்திறனாளி பெண்களிடம் உள்ள குறைபாடுகளை இத்தகையவர்கள் தங்களுக்கு பலமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறார் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி அகர்வால்.

"நம் நாட்டில் இத்தகைய கொடுமையான தவறுகளை செய்பவர்களை தண்டிக்க சரியான சட்டதிட்டங்கள் இல்லை. போதுமான அளவு சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் நம்மிடம் இல்லை. தற்போது உள்ள பாக்சோ சட்டம் 2012இல் (பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளை காக்கும் சட்டம்) கூட, மாற்றுத்திறனாளி குழந்தைகளிடம் பாலியல் ரீதியான தவறுகளை செய்பவர்கள் மீது குற்றவியல் ரீதியாக எடுக்கப்படவேண்டிய கட்டாயமான நடவடிக்கைகள் குறித்து தெளிவாக வரையறுக்கவில்லை.

அதற்கான பெரிய தேவை தற்போது உருவாகியுள்ளது." என்று சுட்டிக்காட்டுகிறார் அஞ்சலி.

"நமது காவல்நிலையங்களில் இத்தகைய குற்றங்கள் குறித்து புகார் அளிக்க குழந்தையோடு செல்லும் சூழல் தற்போது இல்லை."

இவ்வளவு சம்பவங்கள் தினமும் நடக்கும் நிலையிலும் அரசு ஏன் அமைதியாக உள்ளது என்று எனக்கு தெரியவில்லை என்கிறார் அஞ்சலி. ஆறு மாதங்கள் நடந்துள்ள இந்த சம்பவத்தை அந்த குழந்தை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் எவ்வாறு கையாண்டாள் என்று தெரியவில்லை என்கிறார் அவர்.

"நமது குழந்தைகளை வீட்டினுள்ளேயே பூட்டி வைக்க முடியாது., பயணிக்கவும், கல்வி கற்கவும், விளையாடவும், வாழ்க்கையை வாழவும் அக்குழந்தைக்கு உரிமை உள்ளது."

உங்கள் குழந்தைகளை கவனியுங்கள்

குழந்தைகளுக்கு GOOD TOUCH, BAD TOUCH என்றால் என்னவென்பதை கற்றுத்தரும் பொறுப்பு, பெற்றோருக்கும் பள்ளிக்கும் உள்ளது என்கிறார் அஞ்சலி.

"குழந்தைக்கு GOOD TOUCH, BAD TOUCH குறித்து கற்றுத்தருவதன் மூலம், ஏதோ பாலியல் கல்வியை கற்றுத்தருவதாக பெற்றோர் நினைக்கிறார்கள். உண்மையில், இது குழந்தையின் உடலைக் குறித்து கற்றுத்தரும் கல்வி என்பதை பெற்றோர் உணர வேண்டும்" என்கிறார் அவர்.

ஆனால், சமூகத்தில் அனைவருக்குமே இந்த பொறுப்புணர்வு என்பது தேவை என்பதை வலியுறுத்துகிறார் உளவியல் மருத்துவர் நப்பின்னை. குழந்தைகளுக்கு GOOD TOUCH, BAD TOUCH குறித்து கற்றுத்தரும் அதே பெற்றோர் சில நேரங்களில் குழந்தைகள் இதுகுறித்து புகார் கூறும்போது அதை சரிவர கவனிக்காத சூழலும் உள்ளது என்ற குற்றச்சாட்டையும் அவர் வைக்கிறார்.

"வருங்காலத்தில் அந்த பெண் குழந்தையின் திருமணம் பாதிக்கப்படும் என்ற காரணத்திற்காக இத்தகைய சம்பவங்களை புகார் அளிக்காத குடும்பங்கள் கூட உள்ளன. அதையும் மீறி புகார் அளிக்கும் அளவிற்கு காவல்நிலையங்கள் மக்களிடம் சுமூகமாக இல்லாமல், அவர்களை அச்சமூட்டும் இடங்களாகவே இன்னும் உள்ளன"என்கிறார்.

" நேரமின்மை என்ற காரணத்தினால், குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை என்பது மிகவும் குறைந்துவிட்டது. குழந்தைகள் தங்களுடன் உரையாடும் உரிமையை பெற்றோர்தான் அளிக்க வேண்டும்" என்று கூறும் மருத்துவர், குழந்தைகள் தங்களின் பிரச்னைகளை முன்வைக்கும்போது அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் பெற்றோர் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளை ஏற்றுக்கொள்ளும் சமூகம் தேவை

"பொதுவெளிகளிலும் விளையாடும் இடங்களிலும், மற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளை பெரும்பாலும் தங்களோடு சேர்த்துகொள்வதில்லை" என்று கூறும் உளவியலாளர் நப்பின்னை, இது அந்த குழந்தைகளை தனிமைப்படுத்துவதாக குறிப்பிடுகிறார்.

அவ்வாறு தனிமைப்படுத்தப்படும் குழந்தைகளிடம் இந்த ஆட்கள் அன்பாக முதலில் பேசத் தொடங்கும்போது, அவர்கள் அதை நம்பி இத்தகைய துன்புறுத்தல்களில் சிக்கிக்கொள்வதாக அவர் தெரிவிக்கிறார்.

தேவை: வலிமையான சட்டம் - சமூக மாற்றம்

பெண்குழந்தைகளுக்கு GOOD TOUCH, BAD TOUCH கற்றுத்தருவதால் மட்டும் இத்தகைய தவறுகள் உடனுக்குடன் தெரிந்துவிடாது என்பதை இருவருமே குறிப்பிடுகிறார்கள்.

ஆறு மாதங்களாக இந்த குழந்தைக்கு நடந்த கொடுமையை அந்த குடியிருப்பிலுள்ள யாராலும் கவனிக்க முடியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது என்கிறார் உளவியல் மருத்துவர் நப்பின்னை.

தற்போதுள்ள சட்டத்தை வலிமைப்படுத்தவும் அனைவருக்கும் பொறுப்புள்ளது என்பதை உணர்ந்து செயல்படவேண்டிய நேரத்தை நோக்கி சமூகம் பயணிக்கிறது என்பதையும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: