You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிரவைக்கும் வருமான வரி சோதனை: அதிமுகவை நோக்கி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை நடத்திவரும் சோதனைகளில் சுமார் 163 கோடி ரூபாய் பணமும் 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனைகள் இன்றும் நடந்துவருகின்றன.
தமிழ்நாட்டில் சாலைகள் மற்றும் பால ஒப்பந்தப்பணிகளை மேற்கொண்டுவரும் நிறுவனங்களில் ஒன்று எஸ்.பி.கே. குழுமம். நாகராஜன் செய்யாதுரை என்பவரால் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இவருக்குச் சொந்தமான பிற நிறுவனங்களான எஸ்பிகே அண்ட் கோ மற்றும் ஸ்ரீ பாலாஜி டோல்வேஸ் லிமிட்டட், எஸ்.பி.கே. ஹோட்டல்ஸ் ஆகியவை ஹோட்டல், குவாரி, சுங்கச்சாவடி ஒப்பந்தம் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் கடுமையான வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக வந்த தகவல்களையடுத்து 16ஆம் தேதி காலை ஐந்தரை மணி முதல், இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களிலும் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனைகளை நடத்தினர்.
இந்த சோதனைகளில் பத்து இடங்களில் இருந்து கணக்கில் வராத 163 கோடி ரூபாய் ரொக்கமும் 100 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இது தவிர, பல்வேறு ஆவணங்கள், டைரிகள், பதிவேடுகள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றன.
நாகராஜனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 24 லட்ச ரூபாய் ரொக்கமாகக் கிடைத்தது. மீதமிருக்கும் பணம் மற்றும் தங்கத்தை தனது ஊழியர்கள், கூட்டாளிகள் வீடுகளிலும் இரண்டு பிஎம்டபிள்யூ கார்களிலும் பதுக்கி வைத்திருந்தார். இரண்டு கார்களில் மட்டும் 50 கோடி ரூபாய் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது.
விசாரணையின்போது தான் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததை ஒப்புக்கொண்டதோடு, கணக்குக்காட்டாமல் எப்படி இவ்வளவு சொத்துக்களை திரட்டினார் என்பதையும் ஒப்புக்கொண்டதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.
இவரோடு தொடர்புடைய, துணை காண்ட்ராக்டர்கள், அவருடைய பட்டையக் கணக்காளர், அவருடைய கறுப்புப் பணத்தை கணக்கில் வரக்கூடிய பணமாக மாற்றித்தந்துவந்த நகைக்கடைக்காரர் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
சென்னை, மதுரை, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நாகராஜனக்குச் சொந்தமான இடங்களிலும் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் இரண்டாவது நாளாக செவ்வாய்க் கிழமையன்றும் இந்த சோதனைகள் நடைபெற்றுவருகின்றன. சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன.
நாகராஜன் செய்யாத்துரையுடன் ஆளுங்கட்சிக்குத் தொடர்பா?
நாகராஜன் செய்யாதுரை, தற்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவுடன் நெருங்கிய தொடர்புகளை உடையவர் என்று கூறப்படுகிறது. நாகராஜன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் தவிர, திருச்சியை மையமாகக் கொண்ட ஒரு கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
தமிழ்நாட்டில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வசமே நெடுஞ்சாலைத் துறை உள்ள நிலையில், அந்தத் துறையில் பணிகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்ததாரர் ஒருவரது வீட்டில் நடத்தப்பட்டிருக்கும் இந்தச் சோதனைகள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த வருமான வரித் துறை சோதனைகளை தி.மு.கவின் செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்றிருக்கிறார். நாகராஜன் செய்யாத்துரை முதலில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் பினாமி என குற்றம்சாட்டியிருக்கும் மு.க. ஸ்டாலின், 'கரூர் அன்புநாதன் தொடங்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பினாமிகள் மீதான தற்போதைய வருமான வரித் துறை சோதனைகள் வரை அனைத்து விசாரணைகளும் சட்டப்படி நடைபெறவேண்டும்' என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் சம்பந்தியான சுப்ரமணியனும் நாகராஜன் செய்யாதுரையும் தொழில்கூட்டாளிகள் என்று குற்றம்சாட்டியிருக்கும் மு.க. ஸ்டாலின், 'சமீபத்தில் 407 கோடி ரூபாய் மதிப்புள்ள செங்கோட்டை - கொல்லம் சாலை ஒப்பந்தப் பணி, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுரை சுற்று வட்டாரச் சாலை ஒப்பந்தப் பணி, வண்டலூர் முதல் வாலாஜா ரோடு வரை 200 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையை ஆறு வழிச்சாலையாக அமைக்கும் ஒப்பந்தப் பணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெடுஞ்சாலைத்துறையின் 2000 கோடி மதிப்புள்ள பராமரிப்பு ஒப்பந்தப் பணிகள் என அரசாங்க ஒப்பந்தங்கள் அனைத்தும் "சுப்பிரமணியம்- நாகராஜன்" என்ற இரட்டையர் பங்கு பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கே வாரிவாரி வழங்கப்படுகின்றன. இந்த மாபெரும் மோசடி குறித்து உரிய ஆதாரங்களுடன் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது' என்று கூறியிருக்கிறார்.
இதற்குச் சில நாட்களுக்கு முன்பாகத்தான் தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு முட்டைகளை விநியோகம் செய்யும் கிரிஸ்டி ஃப்ரைட்க்ராம் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனைகளை நடத்தியது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :