"இம்சை அரசன் புலிகேசி மீசை பின்னணி, புறாவுக்கு போர் காட்சி, வடிவேலுவின் தமிழ் ஆர்வம்…" - இம்சை அரசன் 23ம் புலிகேசி' பட சுவாரஸ்யங்கள்

பட மூலாதாரம், Chimbudeven
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில், ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு, மனோரமா, நாகேஷ், நாசர் என பலருடைய நடிப்பில் வெளியான 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவு அடைந்திருக்கிறது.
வானம் பார்க்கும் மீசையும், வம்படி வசனங்களுமாக வடிவேலு முழுநீள கதையில் கதாநாயகனாக, இரட்டை வேடத்தில் நடித்திருந்த படம் இப்பொழுது பார்த்தாலும் பார்வையாளர்களுக்கான நகைச்சுவை விருந்து.
'வரலாறு முக்கியம் அமைச்சரே' என படம் வெளிவந்து 15 வருடங்கள் ஆனாலும் இப்பொழுதுள்ள தலைமுறைக்கும் இந்த கதையும் வசனங்களும் ட்ரெண்டாக அமைய படம் குறித்தான சுவாரஸ்யமான விஷயங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
1. இயக்குநர் சிம்புதேவன் இயக்குநராக சினிமாவுக்குள் நுழையும் முன்பு முன்னணி பத்திரிக்கை ஒன்றில் கார்ட்டூனிஸ்டாக வேலை பார்த்திருக்கிறார். அங்கு அவர் கார்ட்டூன் தொடராக வரைந்த கதைதான் பின்பு இம்சை அரசன் 23ம் புலிகேசி'யாக படமாக்கப்பட்டது.
2. முழுநீள கதையில் கதாநாயகனாகவும், இரட்டை வேடத்திலும் வடிவேலு நடித்த முதல் திரைப்படம் இதுதான்.
3. கதையில் இடம்பெற்றிருக்கும் வில்லன் கதாப்பாத்திரம் புலிகேசி அரசனின் மாமா சங்கிலி மாயன் கதாப்பாத்திரம். இந்த கதாப்பாத்திரத்தில் நாசரை நடிக்க வைக்கும் முன்பு, அந்த கதாப்பாத்திரத்திற்கான இயக்குநரின் முதல் தேர்வாக இருந்தது நடிகர் நம்பியார் தான்.

பட மூலாதாரம், Chimbudeven
4. வில்லனாக முதலில் நம்பியார் பின்பு மனோகரன் இவர்கள் இருவரிடமும் பேசியிருக்கிறார்கள். ஆனால், அப்போது அவர்களுடைய உடல்நிலை காரணமாக நடிக்க முடியாமல் போனது. படத்தில் சங்கிலிமாயன் கதாப்பாத்திரத்தின் அப்பா ஓவியம் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும். அதில் நம்பியாரும் நாசரும் இணைந்த சாயலில் அந்த ஓவியம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
5. சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு மனோரமா, நாகேஷ் இருவரும் இந்த படத்தில்தான் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
6. படத்தின் பல இடங்களில் புலிகேசி அரசனின் ஓவியம் இடம்பெற்றிருக்கும் அல்லவா? அந்த ஓவியங்கள் வரைந்து கொடுத்தது கலை இயக்குநர் தேவா. வடிவேலுவுக்கு அந்த படங்கள் பிடித்து போக புலிகேசி மன்னன் ஓவியத்தை தனக்காக தனியாக வரைய சொல்லி கலை இயக்குநர் தேவாவிடம் இருந்து பெற்று கொண்டாராம்.
7. ஹாலிவுட் இயக்குநர் மெல் ப்ரூக்ஸ்ஸின் தீவிர ரசிகரான இயக்குநர் ஷங்கர் மற்றும் சிம்புதேவன், அவரது படங்களை போலவே கதை வேண்டும் என பேசி இந்த கதையை 20 நாட்களில் உருவாக்கியிருக்கிறார்கள்.
8. படம் எல்லாம் முடிந்து முன்னோட்டம் (Preview Show) போட்டு காண்பித்த போது எதிர்ப்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்கவில்லையாம். ஆனாலும், கதை மீது கொண்ட நம்பிக்கை காரணமாக படத்தை தயாரித்தது மட்டுமல்லாமல், படத்தையும் இயக்குநர் ஷங்கருடைய தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டு இருக்கிறது.

பட மூலாதாரம், Chimbudeven
9. படத்தில் இடம்பெற்றிருக்கும் 'கரடியே காறித்துப்பிவிட்டது' காட்சி முழுவதும் திருவண்ணாமலை பகுதியில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த காட்சியில் கரடி காறித்துப்புவது போல காட்சிப்படுத்தப்பட்டது ஏன் என சிம்புதேவனிடம் கேட்டபோது, காட்டுவிலங்கான கரடி வேட்டையாட வந்திருக்கும் மனிதரால் தனக்கு ஆபத்து வந்திருக்கிறது எனும் போது, தாக்கியிருக்கலாம் அல்லது திரும்பி ஓடியிருக்கலாம். ஆனால், சரியாக தாக்குதல் நடத்த கூட தெரியாத ஒரு மன்னரை மன்னித்து அமைதியாக அவமதித்து விட்டு செல்லும் விதமாக அப்படி அமைத்தோம் என்கிறார்.
10. படத்தில் தூது அனுப்பிய புறாவை வறுத்து தின்றதற்காகவும் ஆங்கிலேயருக்கு வரி கட்டுவதற்காகவும் புலிகேசி மீது கோபம் கொண்டு எதிர்நாட்டு மன்னன் வல்லவராயன் படையெடுத்து வரும்போது புலிகேசி அரண்மனைக்குள் பதறி வழியில்லாத பாதையில் போய் நிற்கும் காட்சி வருமல்லவா? அந்த காட்சியை இரவு 12 மணிக்கு மேல்தான் எடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். வடிவேலுவின் நடிப்பாலும், வசனத்தாலும் உடன் இருப்பவர்களில் யாராவது ஒருவர் சிரித்துவிட இரவு 2 மணி வரை அந்த காட்சி நீண்டிருக்கிறது. இப்பொழுதும், அதில் 'மங்குனி அமைச்சராக' வரும் நடிகர் இளவரசு தலைகுனிந்து வாய்மேல் விரல் வைத்து சிரிக்கும் காட்சிகளை பார்க்கலாம்.
11. 'வடிவேலு கதாநாயகனா?' என கேள்வி எழுந்த போது, 'கதாப்பாத்திரத்திற்கு தேவையானதை கொடுக்கிறேன். இந்த படத்திற்கு பின்பு கதாநாயகன் கதாப்பாத்திரம் வந்தாலும் சரி, நகைச்சுவை கதாப்பாத்திரம் வந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் நடிப்பேன்' என வந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் வடிவேலு.

பட மூலாதாரம், Chimbudeven
12. கதைகள், படங்கள் இதில் எல்லாம் பெரும்பாலும் மன்னர் கதாப்பாத்திரம் என்றால் வீரம், கம்பீரம் இதுபோன்ற குணாதிசியங்களுடன் தான் சித்தரிக்கப்பட்டு இருக்கும். ஆனால், அதற்கு நேர்மாறான மன்னர் புலிகேசி. எந்த புள்ளியில் மன்னர் கதாப்பாத்திரத்தை அப்படி வடிவமைக்க தோன்றியது என இயக்குநர் சிம்புதேவனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். மதுரையில் உள்ள காந்தி மியூசியத்திற்கு ஒருமுறை சென்றிருந்தபோது அங்குள்ள மன்னர் சிலைகள் தலைப்பாகை கட்டி, தொந்தியோடு இருந்தார்கள். இதுபோன்ற நம்முடைய நிஜமன்னர்களை திரையில் கொண்டு வரும் முயற்சிதான் மன்னர் புலிகேசியின் தோற்றம் என்கிறார்.
13. படத்தில் இடம்பெற்றிருக்கும் 'புறாவுக்கு போரா?' காட்சியில் புலிகேசி சமாதான போருக்கு தன் படையுடன் தயாராகும் போது அதில் யானைப்படைக்கு தேவையான யானைகள் வெளியூரில் இருந்து வந்து சேர தாமதமாகியிருக்கிறது. அதனால், காட்சிக்கேற்றார் போல் மாற்றியமைத்ததுதான் 'யானை திருவிதாங்கூர் மன்னர் கல்யாணத்திற்கு வாடகைக்கு போய்விட்டது மன்னா' வசனம். பின்பு இந்த காட்சி எடுத்து முடித்த பின்பு ஒரே ஒரு யானை மட்டும் வந்து சேர்ந்திருக்கிறது. அந்த யானையை படத்தில் முதல் காட்சியில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
14. புலிகேசி மன்னர் கதாப்பாத்திரத்தின் அடையாளமாக மாறிப்போன வித்தியாசமான அந்த ட்ரெண்டிங் மீசை பிரபல ஸ்பெயின் ஓவியர் டாலியின் இன்ஸ்பிரேஷன்.

பட மூலாதாரம், Chimbudeven
15. பழைய திரைப்படங்களின் தீவிர ரசிகரான நடிகர் வடிவேலு தூய தமிழ் பேசும் உக்கிர புத்திரன் கதாப்பாத்திரத்தை விரும்பியே செய்தாராம். குறிப்பாக படத்தில் ஒரு காட்சியில் ஆங்கிலேயருக்கு எதிராக அமர்ந்து புலிகேசியாக உக்கிரபுத்திரன் பேசும் 'எதற்கு கேட்கிறாய் வரி?' ஒரே டேக்கில் நடித்து கொடுத்திருக்கிறார்.
16. உக்கிர புத்திரன் கதாப்பாத்திரம் 'மகாபாரதம்' கர்ணன் சாயலில் இருக்கிறதே என இயக்குநர் சிம்புதேவனை கேட்டபோது, வீரம், கோழை என இரண்டு கதாப்பாத்திரங்களின் கதைகள் சிறுவயதில் படித்ததுதான். அதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த எதிரெதிர் கதாப்பாத்திரங்களான புலிகேசியும் உக்கிரபுத்திரனும் என்றார்.
பிற செய்திகள்:
- கொரோனாவின் 'லேம்டா' திரிபு: இந்தியாவுக்கு ஆபத்தா?
- 'உலகின் மிக குள்ளமான குட்டிப்பசு' - கின்னஸ் சாதனை படைக்குமா?
- மலேசியாவில் பரவும் வெள்ளை, கறுப்பு, சிவப்பு கொடிகள் இயக்கம் - எந்த நிறத்துக்கு என்ன பொருள்?
- இலங்கையின் உண்மை நண்பன் சீனாவா? இந்தியாவா?- ஓர் அலசல்
- ஹைட்டி அதிபரை சுட்டுக் கொன்ற வெளிநாட்டு கூலிப்படை - அதிர வைக்கும் தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












