மலேசியாவில் பரவும் வெள்ளை, கறுப்பு, சிவப்பு கொடிகள் இயக்கம் - காரணம் அரசியலா? மனிதநேயமா?

பட மூலாதாரம், MOHD RASFAN
- எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
- பதவி, பிபிசி தமிழுக்காக, மலேசியாவில் இருந்து
முழு முடக்கநிலையால் பொருளாதார நடவடிக்கைகள் நிலைகுத்திப் போயுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பறக்கும் வெள்ளைக்கொடிகள் மலேசியாவில் கவனம் பெற்றுள்ளன.
எதற்காக நாடு முழுவதும் இந்த வெள்ளைக்கொடிகள் பறக்கின்றன? அதன் பின்னணியில் இருப்பது யார்?
அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளும் முழுமுடக்க நிலையால் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில் உணவு, மருந்துப் பொருட்கள் என பலவற்றுக்காக மக்கள் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். யாரிடம் உதவி கேட்பது? எப்படி அணுகுவது? என்பது பலருக்குப் புரியவில்லை. ஏனெனில் இதுவரை அவர்கள் அப்படியொரு நிலையை எதிர்கொண்டதில்லை. இப்படிப்பட்டவர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் வெள்ளைக்கொடி இயக்கம்.
கொரோனா கிருமித்தொற்று பாதிப்பில் இருந்து மீள்வதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா கிருமித்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக மலேசியாவில் முழு முடக்க நிலை அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகி விட்டது. தலைநகர் கோலாலம்பூரில் அனைத்து சாலைகளும் எப்போதுமே பரபரப்பாக இருக்கும் என்ற நிலைமை மாறி அனைத்தும் அமைதியாக காட்சி அளிக்கின்றன.
முழு முடக்க நிலையின்போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையையும் (Movement Control Order)பிறப்பித்துள்ளது மலேசிய அரசு. வீட்டில் இருந்து தேவையற்ற காரணங்களுக்காக வெளியே சுற்றித் திரியக்கூடாது என்பதற்காக இப்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உணவு, மருந்து என எதற்காக வெளியே சென்றாலும் 10 கி.மீ. சுற்றளவுக்குள் சென்று திரும்ப வேண்டும். குடும்பத்துக்கு ஒருவர் மட்டுமே வெளியே செல்லமுடியும் என பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மீறினால் கைது செய்யப்படவும் வாய்ப்புண்டு.

பட மூலாதாரம், SOPA Images
குறுகிய காலத்தில் பரவிய வெள்ளைக்கொடி இயக்கம்
இந்நிலையில் ஏராளமானோருக்கு உதவி தேவைப்படுகிறது. அதனால் வீட்டுக்கு வெளியே வெள்ளைக்கொடி அல்லது வெள்ளைத் துணியை பிறர் கண்ணில் படுமாறு வைப்பது பலருக்கும் உதவுவதாக அமைந்துள்ளது. இந்த வெள்ளைக்கொடி இயக்கம் மலேசியா முழுவதும் பரவ சமூக வலைத்தளங்கள் முக்கியக் காரணியாக உள்ளன.
எனினும் யார் இதைத் தொடங்கியது? என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால் இதனால் பலன் கண்டவர்கள் இந்த இயக்கத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றனர். உணவு, மருந்து, பண உதவி என்று தேவை இருப்போர் ஏதேனும் ஒரு வகையில் பலன் அடைகிறார்கள்.
மிகக் குறுகிய காலத்தில் இந்த வெள்ளைக்கொடி இயக்கம் நாடு முழுவதும் பரவியது ஆச்சரியமாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
39 வயதான ஸுல்கிஃப்லி சம்சுதீனின் மனைவி தாய்மை அடைந்துள்ளார். ஏற்கெனவே அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு குழந்தை மாற்றுத் திறனாளியாக இருக்கும் நிலையில் ஸுல்கிஃப்லிக்கு வீட்டு வாடகை கொடுப்பதும், தமது காருக்கான கடனுக்கு வங்கித் தவணைத் தொகையைச் செலுத்துவதும் இயலாத ஒன்றாக இருந்தது.
இந்நிலையில் ஸுல்கிஃப்லியின் நிலையை அறிந்த நாட்டின் முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி அகமட் தனது நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர் என்ற வகையில் உடனடியாக ஜுல் ஸுல்கிஃப்லி சம்சுதீனுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார். இதைச் சாத்தியமாக்கியது ஸுல்கிஃப்லி சம்சுதீன் தன் வீட்டுக்கு வெளியே வைத்த வெள்ளைக் கொடிதான்.

பட மூலாதாரம், MOHD RASFAN
அரசியல் பின்னணி உள்ளது: சாடுகிறார் கெடா மாநில முதல்வர்
ஏராளமான தன்னார்வலர்களும் அரசு சார்பற்ற அமைப்புகளும் வெள்ளைக்கொடி தொடர்ந்து பறக்க தங்களால் ஆன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனினும் இதற்கு அரசியல் பின்னணி இருப்பதாகவும் ஒரு விமர்சனம் எழுந்துள்ளது.
சில அரசியல் தலைவர்கள் வெள்ளைக்கொடி பறப்பதை விரும்பவில்லை. மலேசியாவின் கெடா மாநில முதல்வரான முகமத் சனுசி உதவி தேவை என்று தொலைபேசி வழி தகவல் கொடுத்தாலே பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வந்து சேரும். வெள்ளைக்கொடி ஏற்றவேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.
"மலேசிய அரசாங்கத்தின் நல்ல செயல்பாட்டை குறைத்து மதிப்பிடும் செய்வதற்கு எதிர்க்கட்சி மேற்கொள்ளும் அரசியல் தந்திரங்களில் ஒன்றுதான் இந்த வெள்ளைக்கொடி இயக்கம்," என்றும் முதல்வர் சனுசி சாடியுள்ளார்.
இதேபோல் பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நிக் அப்துக் நிக் அசிஸ்-ம் வெள்ளைக்கொடி இயக்கத்தை தேவையற்ற ஒன்றாக வர்ணித்துள்ளார்.
உதவி கேட்பது குடிமக்களின் உரிமை
ஆனால், வெள்ளைக்கொடி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் சமூக ஆர்வலர்கள் அதுகுறித்து பொதுமக்களிடம் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். உதவி கேட்க அச்சம் கொள்ளவோ தயங்கவோ தேவையில்லை என வலியுறுத்தும் இவர்கள் உதவி கேட்பது குடிமக்களின் உரிமை என்று கூறி வருகின்றனர்.
வெள்ளைக்கொடி இயக்கத்தின் உதவி பெறுவோர்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சில பிரபலங்களும் சமூக அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் விளம்பரமின்றி பல்வேறு உதவிகளைச் செய்து வருவது தெரிய வந்துள்ளது. பாடகர் 'அல்டிமேட்' (Altimate) இன்ஸ்டகிராமில் வெளியிட்ட பதிவு ஒன்றில் தானும் நண்பர்களும் இணைந்து வெள்ளைக்கொடி பறக்கும் வீடுகளுக்கு வெளியே மளிகைச் சாமான்களை வைத்துவிட்டு செல்வோம் என அறிவித்துள்ளார்.
'ஆவ்சம் கேண்டீன்' (Awesome Canteen) என்ற உணவகம் ஒருபடி மேலே சென்று, வெள்ளைக் காகிதத்துடன் வருபவர்களுக்கும் கூட இலவச உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 1
மலேசியாவில் உயிரை மாய்த்துக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு: யுனிசெஃப் கவலை
இத்தகைய சூழ்நிலையில் மலேசியாவில் உயிரை மாய்த்துக்கொள்வோர் (தற்கொலை) எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு ஆண்டில் முதல் 5 மாதங்களில் மட்டும் 468 பேர் உயிரை மாய்த்துக்கொண்டது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 631 தற்கொலைச் சம்பவங்களும் அதற்கு முந்தைய ஆண்டு 601 சம்பவங்களும் பதிவாகி இருந்தன.
முழு முடக்கநிலை, நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் பல நாட்கள் நீடிக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பல குடும்பங்கள் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு நாட்களைக் கடத்துவது, கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள குடும்பங்களுக்கு மற்ற சாமானியர்கள் தங்களிடம் உள்ளதை பகிர்ந்து கொடுத்து துணை நிற்பது,போன்ற நெகிழ்வூட்டும் சம்பவப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் காணப்படுகின்றன.
குறிப்பாக, மலேசியாவில் இளையர்கள் மத்தியில் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரிப்பது கவலை அளிப்பதாக யுனிசெஃப் (UNICEF) அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து நடப்பு 2021 மே மாதம் வரையிலான காலகட்டத்தில் மலேசியாவில் 1,708 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இவர்களில், 872 பேர் இளையர்கள். இதில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 51 விழுக்காடு என்பதை அந்த அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.
"கொரோனா பெருந்தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முழு முடக்க நிலை போன்ற நடவடிக்கைகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி பலரது மனநிலையை பாதித்துள்ளது.
"குறிப்பாக, இளையர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம் வயதில் இளையர்களுக்கு சமூகத் தொடர்புகள் என்பன மிக அவசியமான ஒன்று. ஆனால் தொடர் முடக்க நிலையானது அவர்களுக்கு இந்த வாய்ப்பை, தொடர்புகளை மறுக்கிறது.
"குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாததால் அங்குள்ள கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. பெற்றோர் வேலை இழப்பதும் அவர்களது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. அனைத்தையும்விட சில குழந்தைகள் தங்களை ஏதேனும் ஒரு வகையில் துஷ்பிரயோகம் செய்யும் ஒருவரிடம் சிக்கிக் கொள்ளவும் நேரிடுகிறது," என்று யூனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.
மற்றொரு பக்கம் கறுப்புக்கொடி பிரசாரம்

பட மூலாதாரம், Anadolu Agency
இந்நிலையில் மலேசியாவின் சில பகுதிகளில் கறுப்புக்கொடிகளும் ஏற்றப்படுகின்றன. நடப்புப் பிரதமர் மொகிதீன் யாசின் பதவி விலக வேண்டும் என்பதற்காக இந்தக் கொடிகள் ஏற்றப்படுவதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவிட் விவகாரத்தைக் கையாள்வதில் தோல்வி கண்டுள்ளதாகவும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும் பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி # Bentera Hitam கறுப்புக் கொடி என்ற # ஹேஷ்டேக் டுவிட்டரில் கடந்த சனிக்கிழமை டிரெண்டானது. மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமது டுவிட்டர் பக்கத்தில் மூன்று கறுப்புக் கொடி 'Emojis'களை டுவிட் செய்தார். அது ஆயிரக்கணக்கான முறை 'ரீடுவீட்' செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கறுப்புக்கொடி பிரசாரம் குறித்து மலேசிய காவல்துறை விசாரணையைத் தொடங்கி உள்ளது.
செல்லப்பிராணிகளைக் காப்பாற்ற சிவப்புக் கொடி
இதற்கிடையே மலேசியர்கள் சிவப்புக்கொடி பிரசாரத்தையும் தொடங்கி உள்ளனர். முடக்கநிலை காரணமாக மனிதர்களே உணவுக்கும் மற்ற பொருள்களுக்கும் அல்லாடும் நிலையில் செல்லப் பிராணிகளை பராமரிப்பதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான செல்லப் பிராணிகளை அவற்றின் உரிமையாளர்கள் வேறு வழியின்றி கைவிடும் நிலைமையில் உள்ளனர்.
இதுதொடர்பாக மலேசிய விலங்குகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. நம்மைப் போலவே செல்லப் பிராணிகளுக்கும் உணவு தேவைப்படும் என்பதால், அவற்றை வளர்ப்பவர்கள் உதவி தேவைப்பட்டால் வீட்டின் வெளியே சிவப்புக் கொடியை ஏற்றி வைக்குமாறு அச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் ஏராளமான செல்லப் பிராணிகள் உரிமையாளர்களால் கைவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடும் விலங்குகள் சங்கம், உணவின்றி அலையும் நாய்களையோ பூனைகளையோ பார்க்க நேர்ந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
"பூனைகளையும் நாய்களையும் நம் குடும்பத்தில் ஓர் உறுப்பினராக கருதி பாசத்துடன் பராமரித்து வந்தோம். ஆனால் இன்று அவை ஒருவேளை உணவுக்காக அங்குமிங்குமாக அலைந்து திரிகின்றன. இந்தக் காட்சியைக்கண்டு மனம் நொறுங்கிப் போகிறது என மலேசிய விலங்குகள் சங்கத்தின் தலைவர் ஆரி அந்திகா நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சுகாதார அமைப்பு முடங்கும் ஆபத்து

பட மூலாதாரம், SOPA Images
மலேசியாவில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய அளவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் அன்றாடம் பதிவாகும் நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்தபாடில்லை. இப்போதும் சராசரியாக நாள்தோறும் 6,500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. மலேசியா போன்ற சிறிய நாடுகளுக்கு இது பெரிய எண்ணிக்கைதான் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள படுக்கைகள் நிரம்பி உள்ளன. இந்தியர்கள் அதிகம் காணப்படும் கிள்ளான் பகுதியில் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பி விட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே உள்ள கூரையை உள்ளடக்கிய பகுதியில் தற்காலிக ஏற்பாடாக சில படுக்கைகள் போடப்பட்டுள்ளன.
நாட்டின் சுகாதார கட்டமைப்பின்மீது கடும் அழுத்தம் கொடுக்கப்படுவதாக மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கவலை தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், லாபுவான் என சில மாநிலங்களிலும் கூட்டரசுப் பிரதேசங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பி விட்டதாக அவர் நேற்றும் தெரிவித்துள்ளார். நாட்டின் சுகாதார அமைப்பு முடங்கும் ஆபத்து வெகுவாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கவலைப்படுகிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு, 2
தேசிய மீட்புத் திட்டத்தை அறிவித்துள்ள மலேசிய அரசு
மலேசியாவில் நேற்று வியாழக்கிழமை அன்று புதிதாக 8,822பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 135 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடங்கியதில் இருந்து பதிவாகியுள்ள ஆக அதிகமான மரண எண்ணிக்கை இதுதான்.
தற்போது தினந்தோறும் சராசரியாக 6539 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் தேசிய மீட்புத் திட்டம் ஒன்றை மலேசிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டம் மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது என்றும் அனைத்து மாநிலங்களும் இவற்றை ஒவ்வொன்றாக வெற்றிகரமாக கடக்கும் பட்சத்தில் முழு முடக்க நிலை மற்றும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வரும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி முதல் கட்டத்தில் இருந்து வெளியேற அனைத்து மாநிலங்களுக்கும் சில இலக்குகள் (அடைவு நிலை) நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அன்றாடம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் கீழ் இருக்க வேண்டும். தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையவேண்டு என மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"நாளடைவில் அன்றாட தொற்று எண்ணிக்கை 500க்கும் கீழ் பதிவாகும் பட்சத்திலும், 60 விழுக்காட்டினர் இரு தவணை தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட பிறகும் தேசிய மீட்புத் திட்டத்தின் இறுதிக் கட்டமான நான்காம் பகுதி தொடங்கும். இதற்கான இலக்கை நடப்பாண்டின் அக்டோபர் மாதத்துக்குள் எட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இயல்பு நிலை திரும்பும்," என்கிறார் மலேசிய பிரதமர்.
இதன்படி அண்மைய சில தினங்களாக மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்திய ஏழு மாநிலங்கள் தேசிய மீட்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்துக்கு முன்னேறி உள்ளன. மேலும் சில மாநிலங்கள் மிக விரைவில் இந்த இலக்குகளை எட்டிப்பிடிக்கும் என தாம் நம்புவதாகவும் மலேசிய பிரதமர் மொகிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
என்னதான் எதிர்க்கட்சிகள் தம்மை விமர்சித்தாலும் மிக விரைவில் கொரோனா விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து மக்களைப் பாதுகாப்பை உறுதி செய்வதே தமது நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் நாடு 15வது பொதுத்தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
வேகம் பிடித்தது தேசிய தடுப்பூசி திட்டம்

பட மூலாதாரம், MOHD RASFAN
இதற்கிடையே மலேசியாவில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் சற்று மந்தமாக இருந்த தடுப்பூசி போடும் நடவடிக்கை தற்போது வேகமெடுத்துள்ளது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் சுமார் 4 லட்சத்துக்கு நெருக்கமான எண்ணிக்கையில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது ஒரே நாளில் போடப்பட்ட ஆக அதிகமான தடுப்பூசிகளாகும்.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தடுப்பூசி போடும் திட்டம் சரியான திசையில் செல்வதாக மலேசியப் பிரதமர் கூறியுள்ளார். நாடு முழுவதும் இதுவரை 9.6 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
150 பில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்புள்ள உதவித் தொகுப்பை அறிவித்த மலேசிய பிரதமர்
முழு முடக்கநிலை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 150 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உதவித் தொகுப்பை பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்துள்ளார்.
ஆறு மாதங்களுக்கு வங்கிக் கடன் தவணைச் சலுகை, மின் கட்டணத்தில் கழிவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் பிரதமரின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.
புதிய பட்டதாரிகள், வேலை தேடுவோருக்கான உதவித்தொகை, ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ஆகஸ்ட், நவம்பர், டிசம்பரில் 500 ரிங்கிட் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசின் இத்தகைய அறிவிப்புகள் மூலம் 11 மில்லியன் பேர் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
மின்கட்டணத்தில் கழிவு, தினந்தோறும் ஒரு ஜி.பி. இணைய இணைப்பு இலவசமாக வழங்குவது உள்ளிட்ட மேலும் பல்வேறு அம்சங்கள், உதவித் திட்டங்கள் குறித்தும் பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சமையல் எண்ணெய்யின் விலை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வோம் என்றும், பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. ஆகியவற்றின் சில்லறை விற்பனை விலை கட்டுக்குள் இருக்கும் என்றும்,
விலைவாசி உயராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் பிரதமர் மலேசிய குடிமக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
மொத்தத்தில், அரசாங்கம் தொடர் அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்க, திடீர் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், வெள்ளை, கறுப்பு, சிவப்பு என மலேசியாவில் மூன்று கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன.
இவை எப்போது கீழிறக்கப்படும் என்பதற்குதான் தெளிவான பதில்கள் இல்லை.
பிற செய்திகள்:
- ஹைட்டி அதிபரை சுட்டுக் கொன்ற வெளிநாட்டு கூலிப்படை - அதிர வைக்கும் தகவல்கள்
- கொண்டாடிய அண்ணாமலை ஆதரவாளர்கள்; கோபப்பட்ட கரூர் ஆட்சியர்
- குறைவாக இறைச்சி சாப்பிடச் சொன்ன அமைச்சர்: கோபமடைந்த சகாக்கள்
- சிறப்பு குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் ஆபத்தா அவசியமா? - பெற்றோர் அறிய வேண்டியவை
- இளவரசர்களின் சண்டையால் உயரும் கச்சா எண்ணெய் விலை - என்ன சிக்கல்?
- சீமான் vs லிங்குசாமி: மீண்டும் வெடித்த 'பகலவன்' கதை சர்ச்சை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












