You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'தி ஃபேமிலிமேன்' வெப்சீரிஸுக்கு தடை கோரும் அரசு - காரணங்களை பட்டியலிடும் அமைச்சர்
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
அமெசான் ஓடிடி தளத்தில் வெளியான 'தி ஃபேமிலிமேன்' வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள டிரெய்லரின் சில காட்சிகள் சர்ச்சை ஆனதால், அந்த வெப்சீரிஸ் தொடர் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
'தி ஃபேமிலி மேன்- சீசன்1' வெப் சீரிஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இதன் இரண்டாவது பாகம் அடுத்த மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான டிரெய்லரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
அந்த டிரெய்லருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு காணப்பட்ட அதே சமயம், அதில் இடம்பெற்றுள்ள நடிகை சமந்தாவின் கதாபாத்திரமும், கதைக்களமும் சர்ச்சையாகியிருக்கின்றன.
'தி ஃபேமிலி மேன்' சீரிஸ் தமிழர்களுக்கு எதிரானது என சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது மட்டுமில்லாமல் வைகோ, சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், தி ஃபிமிலி மேன் சீசன் 2 தொடரை தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் வெளியிட தடை விதிக்குமாறு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.
டிரெய்லரில் என்ன சர்ச்சை?
இது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
"தமிழருடைய வரலாறு, தமிழருடைய கலாசாரம், ஈழத் தமிழருடைய போராட்டம் போன்றவற்றை கொச்சைப்படுத்தும் விதமாகத்தான் அந்த தொடரில் காட்சிகள் உள்ளன. ட்ரெய்லரை பார்த்துட்டு முடிவு பண்ண வேண்டாம் என்று பலரும் கருத்து கூறியுள்ளனர். ஆனால்,, அந்த டிரெய்லர் காட்சிகளே அதன் ஆபத்து என்ன, பிரசாரம் எதை நோக்கி நகருகிறது என்பதை தெளிவாக சொல்கிறது."
"இது ஒரு இந்தி சீரிஸ் என்பதால, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனாலதான் மத்திய அரசிடம் தடை செய்யக் கோரி கடிதம் எழுதியிருக்கிறோம். அதுமட்டுமின்றி, கடந்த 10 வருடங்களாகவே, தமிழர்களுடைய நலன் பல விதங்களிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இப்போது புதிதாக பதவியேற்று இருக்கக்கூடிய தமிழக அரசு தமிழர்களுடைய நலனை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. அப்படி இருக்கும்போது, இந்த மாதிரியான சின்னஞ்சிறு சலனங்களுக்கு திமுக அரசு இடம் கொடுக்காது. இதற்கு மத்திய அரசும் ஒத்துழைப்பு தர வேண்டும்."
எந்தவொரு விதத்திலும் தமிழர்களுடைய நலனுக்கு பயன் தரக்கூடிய வகையில் வெப் சீரிஸ் இருக்கவில்லை. பொழுதுபோக்கு என்பது வேறு, வரலாறு என்பது வேறு. உணர்வுகளை கொச்சைப்படுத்துவதும், வரலாற்றை திரிக்க முற்படுவதையும் `பொழுதுபோக்கு' எனக் கூறி அனுமதிக்க முடியாது.
தமிழர்கள் இப்போது உலகம் அளவில் வாழ்கிறார்கள். அவர்களுடைய உணர்வு பாதிக்கப்படுவதை நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாவும் நம்மால் பார்க்க முடிகிறது. அதனால் இதை ஒரு சின்ன பிரச்னையாக சுருக்கிட முடியாது. பெரிய இனத்தின் பிரச்னையாவே பார்க்க வேண்டும். தமிழக அரசிடம் தங்கள் தரப்பு விளக்கத்தை படக்குழு கொடுத்தால், அதன் பிறகு முடிவு என்ன என்பதை ஆலோசிக்கலாம். ஆனால், இப்போதைய சூழலில் அந்த தொடருக்கு தடை என்பது அவசியம்," என்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
படைப்பு சுதந்திரத்திற்கான தடையா?
வெப்சீரிஸ் தொடருக்கு தடை எனும்போது படைப்புச் சுதந்திரத்தை இது பாதிக்கும் என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுகிறதே? என்று அமைச்சரிடம் கேட்டபோது, "அடிப்படையில் இது ஒரு இந்தி சீரிஸ். அந்த கதைக்களத்தில் தமிழர்களை மையப்படுத்தி சர்ச்சையான காட்சிகளை அமைத்து இதை படைப்பு சுதந்திரம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. கருத்துரிமை என்பது கருத்துகளையும், விவாதங்களையும், விமர்சனங்களையும் சொல்லக்கூடியது. ஆனால், இழிவுப்படுத்துவது போன்றோ, உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிடுவதையோ கருத்துரிமை என்று நியாப்படுத்த முடியாது".
அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
"மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இன்னும் அங்கிருந்து பதில் வரவில்லை. கிடைக்கப்பெறும் பதிலை வைத்து நடவடிக்கை இருக்கும். இல்லையெனில் தமிழக முதல்வரோடு கலந்தாலோசித்து தெரியப்படுத்துவோம்" என்றார் அமைச்சர் மனோ தங்கராஜ்..
பிரபல வெப்சீரிஸ் இயக்குநர் கருத்து
'தி ஃபேமிலி மேன்' சர்ச்சை தொடர்பாக 'கிடாரி' படத்தின் இயக்குநரும், 'குயின்' வெப்சீரிஸ் இயக்குநர்களில் ஒருவருமான பிரசாத் முருகேசனிடம் பேசினோம்.
"'ஃபேமிலிமேன் சீசன்1' சீரிஸ் பார்த்தேன். தனிப்பட்ட முறையில எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. கதைக்களம், தொழில்நுட்பம் அப்படின்னு இந்தியால எடுக்கப்பட்ட வெப்சீரிஸ்களிலேயே சுவாரஸ்யமானதாகவும், தரமானதாகவும் இருந்தது. அதனால சீசன்2-வை ஒரு ரசிகனா ஆர்வமாதான் எதிர்பார்க்கிறேன். ஆனால், சீசன்2 டிரெய்லர் வெளியான பிறகு பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. டிரெய்லரில் காண்பித்துள்ளபடி சென்னையில் பயங்கரவாதம் நிகழப்போகிறது, ஐஎஸ்ஐக்கும் தமிழ்ப்போராளிகளுக்கும் தொடர்பு என இல்லாத ஒரு விஷயம் இருப்பது போல டிரெய்லரில் காட்சிகள் உள்ளன. 'ஏன் அப்படி காட்ட வேண்டும்?' இதுதான் என்னுடைய முதல் கேள்வி.
இதற்கான பதில் ஒருவேளை வெப்சீரிஸில் காட்டப்படலாம். ஆனால், இப்போது இப்படி ஒரு சர்ச்சை எழுந்துள்ள போது அதற்கான நியாப்படுத்துதலை படக்குழு தரப்பு கண்டிப்பாக வழங்கலாம். தமிழர்கள் உணர்வுகளுடன் கலந்த ஒரு விஷயம் பேசு பொருளாகியிருக்கும் போது சரியான விளக்கத்தை படக்குழு தந்தாக வேண்டும். வெறுமனே, 'டிரெய்லரில் காட்சிகளை மட்டும் வைத்து முடிவெடுக்க வேண்டாம். சீசனை முழுமையாக பாருங்க. தமிழர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்துருக்கோம்' அப்படின்னு இயக்குநர்கள் சொல்றது ஏற்புடையது இல்லை. ஏன்னா, இப்போ தமிழக அரசு வெப்சீரிஸ் வெளியீட்டை தடை செய்யனுங்கற அளவுக்கு பிரச்னை பெரிதாகியிருக்கு.
அப்படி இருக்கும்போது, கதையில் சர்ச்சைக்குள்ளான கதாபாத்திரம் எப்படி கட்டமைக்கப்பட்டு இருக்கிறது, எப்படி அதை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள், இந்த மாதிரியான விளக்கத்தையும் உறுதியையும் அவர்கள் ஒரு பேட்டியாகவோ, அறிக்கையாகவோ கொடுப்பதே சரியாக இருக்கும். ஏனென்றால் இதை பார்ப்பவர்கள் குறிப்பிட்ட ஒரு தரப்பினர் மட்டும் கிடையாது," என்கிறார் பிரசாத் முருகேசன்.
தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாமானதா?
"இதேபோல, டிரெய்லர் காட்சிகளை மட்டும் வைத்து தடை கோருவதும் வரவேற்கக்கூடியது இல்லை. காரணம், அதுவும் ஆபத்திலேயே முடியக்கூடிய விஷயம். நடக்காத ஒரு விஷயத்தை கற்பனையில கொண்டு வருவது மாதிரி காட்சிப்படுத்தும்போது அதற்கான நியாயம் சீரிஸில் இருக்கிறது மட்டுமே சரியா இருக்கும். காரணம், இப்போது ஓடிடியில் படைப்பாளிகளுக்கான தளம் விரிவாகியிருக்கிறது. அதை சர்ச்சைக்குள்ளாக்கி கெடுத்து விட வேண்டாமே," என்கிறார் பிரசாத் முருகேசன்.
பிற செய்திகள்:
- The Innocent - விமர்சனம்
- பாலியல் தொந்தரவு வழக்கு: பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு நீதிமன்ற காவல்
- வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும் கிட் எவ்வாறு வேலை செய்யும்?
- கோவிஷீல்டு, கோவேக்சின் - பக்க விளைவுகள் என்ன? தடுப்பூசி போட்டபின் உடலில் என்னாகும்?
- கமல்ஹாசன்: "உயிருள்ள வரை அரசியலில் இருப்பேன்"
- பாலியல் தொல்லை புகார் - சென்னை பள்ளி ஆசிரியர் இடைநீக்கம்
- நடிகை ப்ரியாமணி பேட்டி: ஃபேமிலிமேன்-2 சஸ்பென்ஸ் முதல் சமந்தாவின் வெப்சீரிஸ் பிரவேசம் வரை
- இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தத்துக்கு வெற்றி கோரும் இரு தரப்பு - நிரந்தரமா, தற்காலிகமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: