You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகை ப்ரியாமணி பேட்டி: ஃபேமிலிமேன்-2 சஸ்பென்ஸ் முதல் சமந்தாவின் வெப்சீரிஸ் பிரவேசம் வரை
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ் சினிமாவின் 'முத்தழகு' ப்ரியாமணி. 'கண்களால் கைது செய்' படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் பிறகு 'பருத்திவீரன்', 'நினைத்தாலே இனிக்கும்', 'ராவணன்' என பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ப்ரியாமணி.
இந்த நிலையில், அமேசான் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஃபேமிலி மேன்' வெப்சீரிஸ்ஸின் சீசன்2 அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இதில் ஸ்ரீகாந்த் திவாரியின் மனைவி கதாப்பாத்திரத்தில் ப்ரியாமணி நடித்திருக்கிறார். கதைப்படி மும்பையில் இருக்கக்கூடிய தமிழ்ப்பெண் சுசித்ராதான் ப்ரியாமணி. 'ஃபேமிலிமேன்' அனுபவங்கள் குறித்து அவரிடம் பேசினோம்.
ஒரு வருட இடைவெளிக்கு பிறகு 'ஃபேமிலிமேன்' சீசன்2 வெளியாக இருக்கிறதே?
பதில்: ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரசிகர்கள் கூட சேர்ந்து நடிகர்கள் நாங்களும் இந்த சீசன் எப்போ வெளிய வரும் அப்படின்னுதான் எதிர்ப்பார்த்து இருந்தோம். ஏன்னா, உங்க எல்லாருக்குமே தெரியும். இந்த கொரோனா சூழல்ல எதுவுமே சரியா நடக்கல. அதனால, கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு பிறகு இப்போ அது நடக்கறதுல சந்தோஷம். முதல் சீசன் மாதிரியே ரெண்டாவது சீசனும் எல்லாருக்கும் பிடிக்கனும் அப்படிங்கறதுதான் எங்க எல்லாருடைய விருப்பம்.
போன சீசனை விட இந்த சீசன்ல சுசித்ரா- ஸ்ரீகாந்த்துக்கு இடையிலான ஈகோ சண்டை இந்த பாகத்தில் அதிகமாகி விட்டதா?
பதில்: போன சீசனை விட இந்த சீசன்ல சுசித்ரா- ஸ்ரீகாந்த் இடையில ஈகோ சண்டை அதிகமா இருக்கேங்கற விமர்சனத்த பார்க்க முடியுது. அதுக்கு காரணம், இந்த சீசன்ல ரசிகர்கள் எதிர்பார்க்கறதை விட ஆக்ஷன், சென்டிமென்ட் ட்ராமா இதெல்லாம் அதிகமாவே இருக்கும். அதேபோல, சென்னை கதைக்களத்துல நான் இருக்க மாட்டேன். ஆனா, ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத ஒரு விஷயம் இருக்கும். சென்னை கதைக்களம்தான் இந்த சீசன்ல பிராதனம்னு தெரிய வந்த போதே ரசிகர்கள் மாதிரியே எனக்கும் அந்த சந்தோஷம் இருந்தது. எதுக்காக ஸ்ரீகாந்த் சென்னை வராரு, அங்க என்னலாம் நடக்க இருக்குது அப்படிங்கறது இந்த சீசன் பார்க்கும்போது உங்களுக்கு சுவாரஸ்யமா இருக்கும்.
ட்ரைய்லருக்கு இந்திய அளவில் நேர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும், தமிழகத்தில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியதே. இது நீங்கள் எதிர்ப்பார்த்தது தானா?
பதில்: சர்ச்சை விஷயத்தை பத்தி நான் இப்போ பேச விரும்பல. அது பத்தி பேசவும் எங்களுக்கு அனுமதி இல்லை. சீசன் பார்க்கும்போது உங்களுக்கு அதுக்கான பதில் கிடைக்கும். அது மட்டும் சொல்லிக்க விரும்பறேன்.
சுசித்ரா கதாபாத்திரத்துக்காக உங்களை அணுகின போது முதல்ல உங்களுக்கு என்ன தோணுச்சு?
பதில்: கதைப்படி நான் தமிழ்ப்பொண்ணு. அதுமட்டுமில்லாமல், நிறைய தமிழ் முகங்களும் இருப்பாங்க. இந்த சீசன்ல கதைக்களமே தமிழ்நாட்ல நடக்குது. இந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு தனிப்பட்ட முறையில பிடிச்சு இருந்தது. பெரிய களம், நல்ல கதை, நடிகர்கள் அப்படின்னு எல்லா விஷயமும் இதுல சரியா அமைஞ்சு இருந்தது. அதனால, சுசித்ரா கதப்பாத்திரத்திற்கு ஒத்துக்கிட்டேன்.
சமந்தா இந்த சீசன்ல உள்ள வந்ததுக்கு பிறகு எதிர்ப்பார்ப்பு கூடியிருக்கே?
நிச்சயமா. எனக்கு சமந்தா கூட காட்சிகள் இல்லை. ஆனா, அவங்க அருமையா நடிச்சு இருக்காங்க. அவங்களுடைய சினிமா பயணத்துல இதுவரைக்கும் பண்ணியிருக்காத ஒரு கதாப்பாத்திரம்தான் ராஜி. இதுக்காக அவங்களுடைய தோற்றம், சண்டை காட்சிகள் அப்படின்னு பல விஷயங்கள் மெனக்கெட்டு இருக்காங்க. கண்டிப்பா இந்த கதாப்பாத்திரம் அவங்களுக்கு நல்ல பெயர் வாங்கி தரும்.
சுசித்ராவுக்கும் பிரியாமணிக்கும் என்ன விஷயங்களில் எல்லாம் நிஜ வாழ்க்கையில ஒற்றுமை இருக்கு?
நிறைய விஷயங்கள் ஒத்து போகும். 'ஃபேமிலிமேன்'ல சுசித்ரா கதாபாத்திரம் தனிப்பட்ட வாழ்க்கை, வேலை இரண்டையும் சரியா எடுத்துட்டு போவாங்க. குழப்பிக்க மாட்டாங்க. குடும்பத்துக்கான நேரம், வேலை நேரம் இரண்டையும் கொடுப்பாங்க. இந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு தனிப்பட்ட முறையிலையும் ஒத்து போகும். கதையில சுசித்ரா நல்லா சமைப்பாங்க. ஆனா, ப்ரியாமணி அதுக்கு நேரெதிர். மத்தபடி, சுசித்ராவும் ப்ரியாமணியும் கிட்டத்தட்ட 90% ஒத்து போவாங்க.
மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே வெப் சீரிஸ் பக்கம் வந்துட்டீங்க. ஒரு நடிகையா இரண்டுக்கும் என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்?
முதல்ல வெப்சீரிஸுக்கான வாய்ப்பு வந்த போது தயக்கம் இருந்தது. ஏன்னா, அந்த நேரத்துல வெப் சீரிஸ்ன்னா எப்படி இருக்கும், மக்கள் கிட்ட அதுக்கான வரவேற்பு என்ன இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் எனக்கு தெளிவில்லாம இருந்தது. ஆனா, இப்போ எல்லாமே டிஜிட்டலா மாறிட்டு இருக்கு அப்படிங்கற போது கண்டிப்பா சில விஷயங்கள் நாமளும் மாறனும் இல்லையா? அதுக்கேத்த சரியான ஒரு நகர்வு இது. 'ஃபேமிலிமேன்' சீசன்1க்கு கிடைச்ச வரவேற்பும் இதை உறுதிப்படுத்தியிருக்கு.
சினிமாவுக்கும் வெப் சீரிஸ்க்கும் இடையில இருக்க வித்தியாசங்கள்ன்னா, வெப் சீரிஸ் ரொம்ப சீக்கிரமா எடுத்துருவாங்க. ரெண்டு கேமரா வச்சு எடுக்கறது, அதுக்கு பிறகு படப்பிடிப்பு தளத்துல சில வேறுபாடுகள் இந்த மாதிரி சில விஷயங்கள் தானே தவிர மத்தபடி சினிமாவுக்கான உழைப்பை இப்போ வெப் சீரிஸ்லையும் தர ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ எனக்கு இன்னும் சில வெப்சீரிஸ்ல நடிக்கறதுக்கான வாய்ப்புகளும் வந்துட்டு இருக்கு. சீக்கிரமே அடுத்தடுத்து இந்த தளத்துல என்னை பார்க்கலாம்".
'நாரப்பா', 'மைதான்', 'விராட்ட பர்வம்'ன்னு அடுத்தடுத்து முக்கியமான படங்கள் பண்ணிட்டு இருக்கீங்க. உங்களுடைய கேரக்டர் அனுபவம்?
வெங்கி சார், அஜய் சார், ராணா இவங்க கூட வேலை பார்த்ததும் நல்ல அனுபவம். இந்த படங்கள்ல என்னுடைய கதாப்பாத்திரங்கள் எல்லாமே வெவ்வேற மாதிரியானவை. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது. படங்கள் பார்க்கும்போது உங்களுக்கே அது புரியும்.
தமிழ்ல 'அசுரன்' படத்துடைய தெலுங்கு ரீமேக்தான் 'நாரப்பா'. தமிழ்ல மஞ்சு சேச்சி அருமையா அதை பண்ணிருப்பாங்க. தமிழ்ல 'அசுரன்' பார்த்தவங்களுக்கு என்ன மாதிரியான கதாப்பாத்திரம் அது அப்படிங்கறது தெரியும். பார்க்காதவங்களுக்கு கண்டிப்பா 'நாரப்பா'ல புதுசா இருக்கும். என்னுடைய நடிப்பு திறனை வெளிப்படுத்தறதுக்கான கதாப்பாத்திரமாவும் இது இருக்கும்.
வெங்கி சாரும் இது மாதிரியான கதாப்பாத்திரம் எனக்கு தெரிஞ்சு அவருடைய சினிமா பயணத்துல பண்ணினது கிடையாது. அந்த அளவுக்கு அவரும் சிறந்த நடிப்பை கொடுத்து இருக்கார்.
'விராட்ட பர்வம்' படத்துல ஒரு நக்சலைட் கதாப்பாத்திரத்துல நடிக்கறேன். அவங்களை பொறுத்தவரைக்கும் அவங்களுடைய இயக்கம்தான் எல்லாம். அவங்களுடைய காரியத்துல தெளிவா இருப்பாங்க. அதுமட்டுமில்லாம, இந்த மாதிரியான கதாப்பாத்திரம் இதுவரை நான் பண்ணினது கிடையாது. எனக்கு இந்த கதாப்பாத்திரம் வந்த போதே ரொம்ப பிடிச்சது. சந்தோஷமா ஒத்துக்கிட்டுதான் நடிச்சேன். ராணாவுக்கு அடுத்து நல்ல கதாப்பாத்திரம் என்னுடையது.
'சாருலதா' படத்துக்கு பிறகு தமிழ்ல உங்களை அதிகம் பார்க்க முடியலையே?
நான் அறிமுகமானதே தமிழ்லதான். அப்படி இருக்கும் போது கடந்த சில வருஷங்களா தமிழ்ல நான் நேரடி படங்கள் பண்ணலை. எனக்கு சரியான வாய்ப்புகள் வரலைங்கறதுதான் காரணம். மத்தபடி, நடிக்க கூடாதுங்கறது இல்லை. இப்போ பல படங்களுக்கான வாய்ப்பு வருது. அதுல சில படங்கள் நடிச்சிட்டும் இருக்கேன். இந்த கொரோனா காலக்கட்டம் முடிஞ்ச பிறகு அது பத்தி இன்னும் விரிவா பேசலாம்.
பிற செய்திகள்:
- Super Blood Moon: இந்தியாவில் இருந்து பார்க்க முடியுமா?
- மியூகோர்மைகோசிஸ் காற்றில் பரவுமா? கருப்பு பூஞ்சை குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன?
- 'கங்கையில் பிணங்கள் மிதந்ததற்கு மத்திய அரசே காரணம்' - ராகுல் காந்தி
- அலோபதி மருத்துவத்தை தவறாக பேசிய பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரவேண்டும்: மருத்துவ சங்கம் நோட்டீஸ்
- "இஸ்ரேல்-பாலத்தீன மோதலைத் தீர்க்க இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :