You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Super Blood Moon: நியூஸிலாந்து, ஆஸ்திரேலியாவில் தென்பட்ட அரிய நிகழ்வு
- எழுதியவர், கெளதமன் முராரி
- பதவி, பிபிசி தமிழுக்காக
வானியல் அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்ட சூப்பர் பிளட் மூன் நிகழ்வை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சில பசிஃபிக் நாடுகள் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் இருப்பவர்களால் காண முடிந்தது. ஹவாயி மற்றும் வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் இந்த காட்சி தென்பட்டது.
பூமியின் நிழலுக்குள் உள்வாங்கிச் செல்வது போல சுமார் 15 நிமிடங்களுக்கு தென்பட்ட அக்காட்சியின்போது நிலவு, சிவப்பு நிறத்தில் தெரிந்தது. சூரியோதயமும் சூரிய அஸ்தமனமும் ஒரு சேர நடந்தபோது பூமிக்கு நடுவே நிலவு தோன்றியதால் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.
அமெரிக்காவின் கிழக்கு கடலோர பகுதியில் இருந்தவர்கள், ஐரோப்பா, ஐப்பிரிக்கா, மேற்கு ஆசியாவில் இருப்பவர்கள் இந்த அரிய நிகழ்வை காணலாம் என்று எதிர்பார்ப்பில் காத்திருந்தபோதும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ரத்த நிலவா, அது என்ன?
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் பூமி வரும் நிகழ்வுதான் சந்திர கிரகணம். அப்போது பூமியின் நிழலில் நிலவு இருக்கும்.
பொதுவாக ஆண்டுக்கு 2 - 5 முறை சந்திர கிரகணம் நிகழும். முழு சந்திர கிரகணம் என்பது மூன்று ஆண்டுகளுக்கு 2 முறையாவது நிகழும்.
ஒரு முழுமையான சந்திர கிரகணத்தின் போது நிலவு பளிச்சென ரத்தச் சிவப்பு நிறத்தில் மிளிரும் என்பதால், அதை Blood Moon என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு முழு சந்திர கிரகணம்தான் வரும் மே 26ஆம் தேதி (புதன்கிழமை) நிகழவிருக்கிறது.
சரி... இதை ஏன் சூப்பர் ப்ளட் மூன் என்று அழைக்கிறார்கள்? வெறுமனே `ப்ளட் மூன்' என்று அழைக்கலாமே? இதற்கு விடை காண்பதற்கு முன் `சூப்பர் மூன்' என்றால் என்ன என்பதை பார்ப்போம்.
சூப்பர் மூன்
நிலவு, புவியைச் சுற்றி நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. ஒவ்வொரு மாதமும் நிலவு, புவிக்கு அருகில் வந்து செல்கிறது. நிலவு புவிக்கு மிக அருகில் வரும் இந்த புள்ளியைத்தான் `Perigee' என்கிறார்கள். இப்படி புவிக்கு அருகில் வரும் போது, முழு நிலவாக (பெளர்ணமி) இருந்தால் அதை `சூப்பர் மூன்' என்கிறார்கள்.
அன்றைய தினம், நிலவு பார்ப்பதற்கு வழக்கத்தை விட பெரிதாகவும், கூடுதலாக ஒளி வீசக் கூடியதாகவும் இருக்கும் என்கிறது நாசா.
நிலவு ஏன் இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மிளிர்கிறது?
சந்திர கிரகணத்தின் போது, சூரிய ஒளி, புவியின் வளி மண்டலத்தின் வழியாக பயணித்து, நிலவை சென்றடைகிறது. எனவே நிலவு இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மின்னுகிறது. அதோடு சூப்பர் மூன் வேறு என்பதால், இதை சூப்பர் ப்ளட் மூன் என்கிறார்கள். புவியின் வளிமண்டலத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு தூசுகளும் மேகங்களும் சூழ்கிறதோ, அந்த அளவுக்கு நிலவு ரத்தச் சிவப்பு நிறத்தில் மின்னும் என்கிறது நாசா.
இது ஏன் ஓர் அரிய நிகழ்வு?
சூப்பர் மூன் என்கிற நிகழ்வும், சந்திர கிரகணமும் இரு வேறு நிகழ்வுகள். பொதுவாக இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒருமித்து நிகழாது.
ஆனால் இந்த முறை இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒன்றாக நிகழவிருக்கின்றன. எனவே இதை ஓர் அரிய நிகழ்வு என அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான `நாசா' கூறுகிறது.
அரிய நிகழ்வை எங்கிருந்து காணலாம்?
மேற்கு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, பெரும்பாலான மத்திய அமெரிக்கா, ஆசிய பசிஃபிக் ரிம் பகுதியில் இருப்பவர்கள், எக்வடோர், மேற்கு பெரு, தெற்கு சிலி, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இருப்பவர்கள் இந்த முழுமையான சந்திர கிரகணத்தையும், சூப்பர் ப்ளட் மூனையும் காணலாம்.
புவியின் நிழலுக்குள் நிலவு வருவது அல்லது புவியின் நிழலில் இருந்து நிலவு விலகுவதை தான் பகுதி சந்திர கிரகணம் என்கிறார்கள். இந்த பகுதி சந்திர கிரகணத்தை கிழக்கு அமெரிக்கா, இந்தியா, நேபாளம், மேற்கு சீனா, மங்கோலியா, கிழக்கு ரஷ்யா ஆகிய இடங்களில் இருந்து காணலாம்.
இந்தியாவில் சந்திர கிரகண நேரம் என்ன? பார்க்க முடியுமா?
"இந்தியாவில் மே 26ஆம் தேதி பிற்பகல் 3.15 மணி முதல் மாலை 6.22 மணி வரை சந்திர கிரகணம் நிகழும். மாலை 4.41 முதல் 4.56 வரையான 15 நிமிடங்கள் முழு சந்திர கிரகணம் நிகழும். கிரகணத்தின் போது இந்தியாவைப் பொறுத்த வரை, நிலவு கிழக்கு அடிவானத்தின் கீழே இருக்கும் என்பதால், சூப்பர் ப்ளட் மூனை நாம் பார்க்க முடியாது.
நிலவு சென்னையில் 6.32 மணிக்கு உதயமாகும். அதற்குள் கிரகணம் நிறைவடைந்துவிடும். கொல்கத்தா போன்ற வடகிழக்கு பகுதிகளில் 6.14 மணியளவில் நிலவு உதயமாகும் என்பதால், பகுதி கிரகணத்தை சில நிமிடங்கள் மட்டும் பார்க்க முடியும்." என சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குநர் செளந்தரராஜ பெருமாள் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
வலைதளத்தில் எங்கு பார்ப்பது?
ஒருவேளை சூப்பர் ப்ளட் மூனை வலைதளத்தில் காண விரும்பினால், நாசாவின் கீழ் காணும் இன்டர்நெட் பக்கத்தில் ஆர்வலர்கள் காணலாம்.
இணைப்பு: https://svs.gsfc.nasa.gov/4902
அடுத்த முழு சந்திர கிரகணம் எப்போது?"
2022ஆம் ஆண்டு, மே 16ஆம் தேதி மீண்டும் முழு நிலவு கிரகணம் ஏற்படும். அது இந்தியாவில் தெரியாது. அதற்குப் பிறகு 2022ஆம் ஆண்டு, நவம்பர் 8ஆம் தேதி மீண்டும் ஒரு முழு சந்திர கிரகணம் நிகழும். இந்த நேரத்தில் கூட பகுதி கிரகணத்தை மட்டுமே இந்தியாவில் இருந்து காண முடியும்," என்றார் செளந்தரராஜபெருமாள்.
2021ஆம் ஆண்டில் மற்ற கிரகணங்கள் எப்போது?
வரும் 2021 ஜூன் 10ஆம் தேதி, சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு, நவம்பர் 18 - 19ஆம் தேதி மற்றொரு பகுதி சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. அதைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு, டிசம்பர் 4ஆம் தேதி ஒரு முழு சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது.
சென்னை கோளரங்கத்தில் ஏற்பாடுகள் இல்லை
வழக்கமாக கிரகண காலத்தில் சென்னை கோளரங்கத்தில் மக்கள் கிரகணத்தைக் காண ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால் இந்த முறை கொரோனா பெருந்தொற்று தவிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதால் மக்கள் பார்ப்பதற்கு எந்த வித ஏற்பாடுகளும் செய்ய இயலவில்லை என கோளரங்கம் தரப்பில் இருந்து கூறப்பட்டிருக்கிறது. தவிர சென்னையிலிருந்து கிரகணத்தை பார்க்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :