You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கமல்ஹாசன்: "உயிருள்ள வரை அரசியலில் இருப்பேன், கட்சியும் இருக்கும்"
மக்களிடம் அறிமுகம் இல்லாதவர்களை புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்னவைக்க நினைத்ததுதான் சர்வாதிகாரமாகத் தெரிவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
கமல், சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்வதாகக் கூறி அக்கட்சியிலிருந்து பல நிர்வாகிகள் சமீபத்தில் வெளியேறிய நிலையில், கமல்ஹாசன் இவ்வாறு கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் காணொளியில், "நான் ஒரு சிறு விதைதான். இது வீழ்ந்தது,வீழ்த்துவோம் என கொக்கரிக்கும் புள்ளிகளுக்கும் சுள்ளிகளுக்கும் ஒரு செய்தி. விதை விழுந்தாலும் மண்ணில் பற்றிவிட்டால் அது விரைவில் காடாகும்.
ஊரடங்கினாலும் வாயடங்காது என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்றாக நாமாகிவிடக்கூடாது. தோல்வியை ஆராய்ந்து, அதில் வெற்றிப்பாடம் கற்பது நாம் இதுவரை கண்ட சரித்திரம். மக்களிடம் முக அறிமுகம் இல்லாதவர்களையும் சற்றே தெரிந்தவர்களையும் புது எழுச்சி அரசியலின் நட்சத்திரங்களாக மின்னவைக்க நாம் நினைத்ததுதான் சர்வாதிகாரமாகத் தெரிகிறது.
திறமையின் அடிப்படையில் பெரும் பொறுப்புகளை கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே தந்து வளர வழி செய்தது அன்று அவர்களுக்கு ஜனநாயகத்தின் உச்சகட்டமாகத் தெரிந்திருக்கிறது. பிறகு, காலச்சூழலில் கண்ணுக்கு ஏற்பட்ட மறதியில் அது அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. கூட்டணி வைத்துக்கொள்வதில் நான் காட்டிய வெளிப்படைத் தன்மையும் அதைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு பொறுப்பு கொடுத்த ஜனநாயகமும் அனைவரும் அறிந்தவை.
தோல்விக்குப் பின் அவரவருக்கு இருக்கும் தார்மீக கடமையை ஏற்பது நல்ல ஜனநாயகவாதி செய்யும் செயல். கடமையை மறந்து, நிகழ்ந்துவிட்ட தவறுகளைக் கொட்ட குழி தேடுவது சிலருக்கு ஜனநாயகமாகப்படுகிறது. அது ஜனநாயகமே அல்ல. நம் மய்யக் கிணறு அவ்வளவு சாதாரணமாகத் தூர்ந்துபோய்விடாது என்பது தற்காலிக தாக சாந்திக்காக தண்ணீர் குடிக்க வந்தவர்களுக்கு புரியது. நாற்பதாண்டு காலம் இறைத்து நீர் பார்த்ததில் உடல் சற்றே வியர்த்தாலும் உற்சாக ஊற்று ஊறிக்கொண்டே இருக்கும் என்பது நமக்கு கிடைத்த அனுபவம் சொல்லும் பாடம்.
நமக்கு நம் நீர்நிலையைச் சுற்றித்தான் வேலை. நாடோடிகள், யாத்ரீகர்கள் அப்படியல்ல. ஓரிடம் தங்க மாட்டார்கள். வணிகர்களாக அவர்கள் இருக்கும் பட்சத்தில் வியாபாரம் உள்ளவரை தங்குவார்கள். பிறகு, அவர்கள் வெளியேறிவிடுவார்கள். சில நேரம் திரும்பவும் சென்ற வழியே வருவார்கள். இந்த ஊற்று அன்றும் சுரந்துகொண்டிருக்கும். ஆனால், நம் நீர்நிலையை மீண்டும் அசுத்தப்படுத்த விடமாட்டோம் என்ற உறுதியுடன் நம் பணியை தொடர வேண்டும்.
மற்றபடி தம் தவறுகளை மறைக்க சிலர் எழுப்பும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. காலம் பதில் சொல்லும். கட்சியின் உள் கட்டமைப்பை தனி மனிதர்கள் தங்கள் ஆதாயத்திற்கு ஏற்ப மாற்ற ஆடிய விளையாட்டுகள் இனி தொடராது. செயல் வீரர்கள், செயலாற்றுபவர்களின் கரங்கள் வலுப்படுத்தப்படும். உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் காண்பார்கள்.
என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும்வரை மக்கள் நீதி மய்யமும் இருக்கும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் படுதோல்வியடைந்தது. வாக்குகளின் அடிப்படையில் நான்காவது இடத்தையே அதனால் பிடிக்க முடிந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் பலர், கமல்ஹாசன் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவதாகக் கூறி மக்கள் நீதி மய்யத்திலிருந்து வெளியேறினர்.
துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர்கள் சி.கே. குமரவேல், முருகானந்தம், சுற்றுச்சூழல் அணியின் செயலர் பத்மப்ரியா உள்ளிட்டோர் இதுபோல வெளியேறியுள்ளனர்.
பிற செய்திகள்:
- சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் தொல்லை புகார் - வைரலாகும் கடிதம்
- கேரள சட்டப்பேரவையில் ஒலித்த தமிழ்க் குரல் - யார் இந்த ஏ. ராஜா?
- Super Blood Moon: இந்தியாவில் இருந்து பார்க்க முடியுமா?
- மியூகோர்மைகோசிஸ் காற்றில் பரவுமா? கருப்பு பூஞ்சை குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன?
- 'கங்கையில் பிணங்கள் மிதந்ததற்கு மத்திய அரசே காரணம்' - ராகுல் காந்தி
- அலோபதி மருத்துவத்தை தவறாக பேசிய பாபா ராம்தேவ் மன்னிப்பு கோரவேண்டும்: மருத்துவ சங்கம் நோட்டீஸ்
- "இஸ்ரேல்-பாலத்தீன மோதலைத் தீர்க்க இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :