You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கமல் கட்சியில் இருந்து பத்ம பிரியா, சந்தோஷ் பாபு ஐஏஎஸ் விலகல்
நடிகர் கமல் ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து சமூக ஊடகப் பிரபலம் பத்ம பிரியா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு ஆகியோர் விலகியுள்ளனர்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் எனது பதவியிலிருந்தும் விலகுவதாக கனத்த மனதுடன் அறிவிக்கிறேன். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன். கமலும் அவருடைய அணியினரும் என் மீது காட்டிய அன்புக்கும் நட்புக்கும் நன்றி" என குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த வாரம் டாக்டர் மகேந்திரன் கட்சியை விட்டு விலகியபோது, தான் கமல்ஹாசனுடன் தொடரப்போவதாக கூறியிருந்தார் சந்தோஷ் பாபு. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், "நேர்மையான உலகத்தரம் வாய்ந்த நிர்வாகத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டுமெனும் ஒரே நோக்கத்தில் ஐஏஎஸ் பதவியை தூக்கி ஏறிந்துவிட்டு அரசியலுக்கு வந்தவன் நான். தமிழக மக்களுக்கு நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தைத் தரும் அருகதை தலைவர் கமல்ஹாசனுக்கு மட்டுமே இருக்கிறது. நான் அவரோடு நிற்கிறேன்" என்று கூறியிருந்தார்.
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, அக்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. இந்தத் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக கடந்த வாரம் வியாழக்கிழமை அக்கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் கூடியது. இதில் அக்கட்சியின் நிர்வாகிகளிடமிருந்து ராஜினாமா கடிதங்கள் பெறப்பட்டன. அப்போது அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் கமல்ஹாசனுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதிவிட்டு, கட்சியை விட்டே வெளியேறினார்.
இதற்குப் பிறகு அறிக்கை வெளியிட்ட சந்தோஷ் பாபு, "தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களைத் தலைவரிடம் கொடுத்தனர். தேர்தல் கால செயல்பாடுகளை ஆய்வுசெய்து, கட்சியை மறுகட்டமைப்பு செய்வதற்கு ஏதுவாக இருக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட கடிதங்கள் தலைவரின் பரிசீலனையில் இருக்கின்றன. கட்சி கட்டமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள், புதிய பொறுப்பாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கை சந்தோஷ் பாபு தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அந்த அறிக்கை வெளியிடப்பட்டபோது, சந்தோஷ் பாபு எழுதாத பல விஷயங்கள் அதில் சேர்க்கப்பட்டிருந்ததில் அவர் அதிருப்தி அடைந்ததாகச் சொல்லப்பட்டது. குறிப்பாக, ஓர் இடத்தில் மும்மொழிக் கொள்கையை ஆதரித்தும் மற்றொரு இடத்தில் இரு மொழிக் கொள்கையை எதிர்த்தும் கருத்துகள் இடம்பெற்றிருந்தன.
தவிர, கூட்டங்களின்போது மேடையில் கமல் மட்டும் அமர்வது குறித்தும் கடந்த வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர்கள் கேள்வியெழுப்பினர். இந்த நிலையில்தான், கட்சியை விட்டு விலகுவதாக சந்தோஷ் பாபு தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சந்தோஷ் பாபு, தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராகவும் தமிழ்நாடு பைபர் நெட் கழகத் தலைவராகவும் இருந்துவந்தார். மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், அதற்கு ஒத்துழைக்க மறுத்த சந்தோஷ் பாபு டெண்டரில் திருத்தம் செய்தார். இது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது ஐஏஎஸ் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார்.
அதற்குப் பிறகு, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டார்.
பத்ம பிரியாவும் விலகல்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் திருத்தம் செய்வதை விமர்சித்து வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு மூலமாக பிரபலமடைந்த பத்ம பிரியா மக்கள் நீதி மையத்தின் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் வெளியிட்ட தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிவுகள் மூலம் அவர் இதை தெளிவுபடுத்தியுள்ளார். ஆங்கிலப் பதிவில் தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாகவும், தமிழ்ப் பதிவில் சில காரணங்களால் விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கமல் ஹாசனுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
தாம் போட்டியிட்ட மதுரவாயல் தொகுதி வாக்காளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்