எஸ்.பி. பாலசுப்ரமணியம்: தொடரும் வென்டிலேட்டர் சிகிச்சை - நிலவரம் என்ன?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன்சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அவர் சேர்க்கப்பட்டுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், "கொரோனா தொற்று பாதிப்புக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை மருத்துவ அளவீடுகள் நிலையாக உள்ளன. அவர் நினைவுடனும் சிறிய அளவிலான பிசியோதெராப்பியும் பெற்று வருகிறார். பல்நோக்கு மருத்துவ குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தனது தந்தையின் உடல் நிலை தொடர்பாக எஸ்.பி. சரண் வெளியிட்டுள்ள காணொளியில், கடந்த இரு தினங்களைப் போலவே தந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மீண்டு வர தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கோவிட் - 19 அறிகுறிகளுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர்காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: