ரஹ்மான், ரசூல் பூக்குட்டி: பாலிவுட் போன்று தமிழ் சினிமாவிலும் நடிகர்கள் புறக்கணிப்பா?

    • எழுதியவர், விஷ்ணுப்பிரியா ராஜசேகர்
    • பதவி, பிபிசி தமிழ்

சமீப காலங்களில் 'நெபோடிசம்' என்ற சொல்லை நாம் அதிகம் கேள்விப் பட்டுக் கொண்டிருக்கிறோம். நெபோடிசம் என்ற சொல்லின் பொருள் வேண்டியவர்களுக்கு, உறவினர்களுக்கு வாய்ப்புகளை ஒரு வட்டத்துக்குள்ளேயே வைத்துக்கொள்வது என்பதாகும்.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை இந்த சொல் புதிது என்றாலும், பாலிவுட் என்று சொல்லப்படுகிற ஹிந்தி திரைப்படத்துறையில் இது ஒன்றும் புதிதாக பேசப்படும் விஷயமல்ல.

கங்கனா ரனாவத் போன்றவர்கள் பல காலமாக 'நெபோடிசம்' எனப்படும் வேண்டியோர்க்கு வாய்ப்பளித்தல் குறித்து பேசி வருகிறார்கள். ஆனால் இது தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் பேசுப் பொருளாகியிருப்பது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் பேசிய ஒரு விஷயத்தில் இருந்துதான்.

இசையமைப்பாளர் ரஹ்மான் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'சிலர் கிளப்பிவிட்ட புரளிகளால்' தனக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

அந்த செய்தியை டிவிட்டரில் பகிர்ந்திருந்த பாலிவுட் இயக்குநர் ஷேகர் கபூர், "நீங்கள் ஆஸ்கர் விருது பெற்றதுதான் பிரச்சனை, பாலிவுட் கையாள முடியாத அளவிற்கு திறமைசாலி நீங்கள்" என்று பொருள் தரும் வகையில் டிவீட் செய்தார்.

ரஹ்மான் அதற்கு டிவிட்டரிலேயே பதில் கூறிய ரஹ்மான் "பணமும், புகழும் போனால் திரும்ப சம்பாதித்து கொள்ளலாம், ஆனால் வாழ்வின் முக்கியத் தருணங்களில் காலம் போனால் திரும்ப வராது. அமைதி கொள்ளுங்கள். நாம் பெரிய வேலைகள் செய்யவேண்டியிருக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.

சேகர் கபூரின் இந்த ட்வீட்டை ஆமோதிக்கும் விதத்தில், இசை வடிவமைப்பாளர் மற்றும் ஆஸ்கர், பாஃப்தா போன்ற விருதுகளை பெற்ற இசை வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, தான் ஆஸ்கர் விருது பெற்றபின் ஹிந்தி திரைப்படத் துறையில் தனக்கு யாரும் வாய்ப்புகள் கொடுக்கவில்லை என்றும், ஆனால் பிராந்திய சினிமாக்கள் தன்னை வரவேற்றதாகவும் கூறியிருந்தார்.

தமிழ் சினிமாத் துறையில் நெபோடிசம்?

நடிகரும், இயக்குநர் பாக்யராஜின் மகனுமான சாந்தனு பாக்யராஜ் சமீபத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார், அதில்

"நெபோடிசம் இங்கேயும் உள்ளது. அதே குரூப்பிசம் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். தரத்தைப் பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள், மற்றவர்களை தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள்," என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அந்தப் பதிவிற்கு ஒளிப்பதிவாளரும், நடிகருமான நடராஜன் "தமிழ் சினிமாவில் நெபோடிசம் இருக்கா இல்லையானு தெரியல. ஆனா குரூப்பிசம் இருக்கும். யாருக்கு என்ன கிடைக்கனுங்கிறத யாரோ நிர்ணயிக்கிறாங்க," என்று பதிவிட்டிருந்தார்.

ஷாந்தனுவின் இந்த டிவிட்டர் பதிவிற்கு ட்விட்டர் தளத்தில் இருசார்பாக பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழ் சினிமாவில் சில பெரிய ஹூரோக்கள் வாரிசு நடிகர்கள்தான் என்று ஒரு தரப்பும், சிலர் வாரிசு நடிகர்கள் என்றாலும் அவர்களும் திறமையுள்ளவர்கள் என்பதால்தான் தொடர்ந்து நிலைக்க முடிகிறது என்று மறுதரப்பும் விவாதித்து கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

மேலும் சிலர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்றவர்கள் வாரிசு நடிகர்கள் இல்லையே என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

'குரூப்பிசம் இருக்கலாம் ஆனால் நெபோடிசம் இல்லை'

தமிழ் சினிமாவில் நெபோடிசம் என்பது இல்லை என்கிறார் பாடகி சுசித்ரா, மேலும், "ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி போன்றவர்கள் கோலிவுட்டில் நெபோடிசம் உள்ளது என்று கூறவில்லை. மேலும் ரசூல் பூக்குட்டி தனது ட்வீட்டில் பிராந்திய சினிமாக்கள் தன்னை ஆதரித்தன என்றே கூறியுள்ளார் எனவே தமிழ் சினிமாத் துறையில் நெபோடிசம் இல்லை," என்றே கூறுகிறேன் என்றார்.

மேலும், "சந்தனு சொல்வது போல குரூப்பிசம் இருக்கலாம், சிலர் நண்பர்களாக இருப்பின் வாய்ப்புகள் கிடைக்கலாம் ஆனால் திறமை இல்லாத பட்சத்தில் நண்பர்களும் அந்த வாய்ப்பை அளிக்க மாட்டார்கள்," என்கிறார் பாடகி சுசித்ரா.

'வாய்ப்புகள் கிடைத்தன'

பாலிவுட்டில் தற்போது பேசி கொண்டிருக்கிற நெபோடிசத்தை தான் அனுபவித்தது இல்லை என்கிறார் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நடராஜன் சுப்ரமணியம்.

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நடித்திருந்த நடராஜன், தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படத்துறையிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

"தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை என்னால் நெபோடிசம் இருக்கா இல்லையா என்று சரியாக சொல்ல தெரியவில்லை. ஏனென்றால் எந்த ஒரு வாரிசு நடிகருக்கும் அவர்களுக்கான தளம் கிடைத்துவிடும். இது சினிமாவில் மட்டுமல்ல பிற துறைகளுக்கும் பொருந்தும். ஆனால் அவர் நன்றாக நடித்தால் மட்டுமே நட்சத்திரமாக ஆகிறார்.

தொழில்நுட்பக் கலைஞனாக பாலிவுட்டை பொறுத்த வரை அங்கு எனது பணியை பார்த்து எனக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. எனது பணியை பார்த்து என்னை அழைப்பார்கள், கதைக்கு தேவையானவை குறித்து விவாதித்த பிறகு அனைவரின் தேதியும் ஒத்துப்போனால் சேர்ந்து பணிபுரிவோம் இது திரைப்படங்கள் மட்டுமல்ல, விளம்பரப் படங்கள், இசை வீடியோ, ஆவணப்படங்கள் என அனைத்துக்கும் இப்படிதான்," என்கிறார் நடராஜன்.

"நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன் என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்படுவது போன்ற சூழல் எனக்கு ஏற்படவில்லை. என்னுடைய நண்பர்களுக்கும் பணிகள் கிடைத்துள்ளன. தற்போது பேசி வரும் நொபோடிசம் போன்று யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அது தவறான விஷயம்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.

'பாலிவுட் அளவிற்கு இங்கில்லை'

பாலிவுட் அளவுக்கு இல்லை என்றாலும் இங்கு வாரிசு நடிகர்களுக்கு அவர்களுக்கான வாய்ப்புகள் எளிதில் கிடைத்துவிடுகின்றன ஆனால் அதனை அவர்கள் தக்க வைத்து கொண்டால் மட்டும்தான் அடுத்தடுத்த வாய்ப்புகள் வருகின்றன. இல்லையேல் அவர்கள் சிறிது காலத்தில் காணாமல் போய்விடுகிறார்கள் என்கின்றனர் திரைப்படத்துறை விமர்சகர்கள்.

"பாலிவுட்டில் சொல்வதை போல ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு வெளிநபர்களை வரவிடாமல் தடுப்பது போன்ற பிரச்சனை இங்கே நடப்பதில்லை," என்கிறார் சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா.

"துறையில் இருப்பவர்களுக்கு இங்கு வாய்ப்பு கிடைக்கும் அளவிற்கு, திறமையுடன் வரும் வெளிநபர்களுக்கும் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கிறது. இது இரண்டும் சமமமாகவே நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் ஒவ்வொருவரின் சூழலை பொறுத்துதான் அவர்களின் வாய்ப்புகளின் பலன்கள் அமைகின்றன," என்கிறார் ரமேஷ் பாலா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :