You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ்: தற்சார்பு விவசாயியா அல்லது வலதுசாரிகளின் முகமா? - யார் இவர்?
- எழுதியவர், மு.நியாஸ் அகமது,
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் அண்ணாமலை. முன்னாள் ஐ.பி.எஸ் ஆன இவர், இப்போது கரூர் அருகே தற்சார்பு விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்.
விவசாயம் செய்வதைக் கடந்து விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல திட்டங்கள் வைத்திருப்பதாகக் கூறுகிறார்.
ஆனால் இவரை வலதுசாரி கட்சியின் இறக்குமதி என குற்றச்சாட்டுகிறார்கள் செயற்பாட்டாளர்கள்.
’தற்சார்பு விவசாயி’
விவசாயிகளின் பொருளாதாரத்தை 20 சதவிகிதம் வரை உயர்த்துவது, இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பது, கரூர் மாவட்ட விவசாயிகளோடு பொருளாதாரத்தை உயர்த்த, 1,500 விவசாயிகளை இணைத்து, 'உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' தொடங்குவது என பல திட்டங்களை முன் வைக்கிறார் அண்ணாமலை.
அதே நேரம் இவர் வலதுசாரிகளின் இறக்குமதி, சங் பரிவார் அமைப்புகளின் தமிழக முகம், அவர்களது வழிக்காட்டலின் பெயரிலேயே இவர் செயல்படுகிறார் என்று சமூக ஊடகங்களில் பலர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
திட்டமிடப்பட்டு, நன்கு விளம்பரம் செய்து முன்னிறுத்தப்படுகிறார். இது ஒரு பி.ஆர் வேலை என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
மோடியை ஏன் பிடிக்கும்?
'மோடியை ஏன் பிடிக்கும்?' என்ற தலைப்பில் இவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பரவலாக விவாதத்திற்கு உள்ளானது.
பிரதமர் அலுவலகத்தில் முன்பு லாபி இருந்ததாகவும், இப்போது அவ்வாறெல்லாம் இல்லை என்றும் அந்தப் பேட்டியில் கூறி இருந்தார். மேலும், பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி ஆகிய திட்டங்கள் குறுகிய காலத்திற்கு வலி தருபவையாக இருந்தாலும், தொலைநோக்கில் பயன் தரும் திட்டம் எனப் பாராட்டி இருந்தார்.
'அரசியல் குழப்பம்'
பிபிசி தமிழிடம் பேசிய தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், மொழி செயற்பாட்டாளருமான ஆழி. செந்தில்நாதன், "அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தவே இவர் பா.ஜ.கவால் முன்னிறுத்தப்படுகிறார்," என்று கூறுகிறார்.
"அண்ணாமலையின் குரல் அப்படியே வலதுசாரிகளின் குரலாக இருக்கிறது. அவர்கள் என்ன இத்தனை நாள் பேசினார்களோ, அதைத்தான் இப்போது இவர் பேசுகிறார், " என்கிறார் இவர்.
"திராவிட கட்சிகள் ஊழல் செய்கின்றன, தமிழகத்தில் எதுவுமே சரியில்லை என வலதுசாரிகள் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். புனித பிம்பத்துடன் ஒருவரைக் களம் இறக்க முயல்கிறார்கள். அப்படியான ஒருவர்தான் அண்ணாமலை. எப்படி வடக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலை உண்டாக்கினார்களோ, அது போலத் தமிழகத்திற்கு அண்ணாமலையை முன்னிறுத்துகிறார்கள்," என்று கூறுகிறார் ஆழி செந்தில்நாதன்.
'அரசியலை எதிர்மறையாகப் பார்க்காதீர்கள்'
முன்பொரு முறை பிபிசி தமிழிடம் பேசிய போது அரசியல் குறித்த தனது அபிலாஷைகளை வெளிப்படுத்தி இருக்கிறார் அண்ணாமலை.
அந்த பேட்டியில் அவர், "அரசியலையும், அரசியல்வாதிகளையும் நான் எதிர்மறையாகப் பார்ப்பதில்லை. மக்களுக்கான பொதுப் பணியைச் செய்வதற்கான உயரிய வழிமுறை அரசியல் என்று கிரேக்கத் தத்துவவியலாளர் ஒருவர் கூறியுள்ளார். இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர். அரசியல்வாதிகள் அதிக பொறுப்புடையவர்கள். அரசியலை எதற்காக எதிர்மறையாகப் பேசுகிறோம் என்றால், அரசியல்வாதியாக இருக்கும் ஒருவர், வெற்றிகரமாக இருக்கமாட்டார் என்று எண்ணுவதால்தான். நான் ஏற்கெனவே சொன்னதுபோல, எல்லா வழிகளையும் ஆய்வு செய்து மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடிவெடுப்பேன்." என்று 28 மே 2019 அளித்த பேட்டியில் கூறி இருந்தார் அண்ணாமலை.
அந்த பேட்டியை விரிவாகப் படிக்க:நான் பதவியை ராஜிநாமா செய்வதற்கு இதுதான் காரணம் - அண்ணாமலை ஐபிஎஸ்
'என்னை முடக்கப் பார்க்காதீர்கள்'
சமூக ஊடகங்களில் அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அண்ணாமலையிடம் பேசினோம்.
அவர், "சமூக ஊடகங்களுக்கு வெளியேதான் பெரும் சமூகம் இருக்கிறது. நான் அவர்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன். ஆனால், எனக்கு ஒரு முத்திரை குத்த பார்க்கிறார்கள். மதம் என் தனிப்பட்ட விஷயம். நான் இந்து மடங்களுக்குச் சென்றது போல, இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிப்பாட்டு தளங்களுக்கும் சென்று இருக்கிறேன். அதனைப் பகிராமல் இதனை மட்டும் பகிர்வதற்கு என்ன காரணம்? எனக்கொரு முத்திரை குத்தி முடக்கப் பார்ப்பதுதானே? நான் முடங்கும் ஆள் கிடையாது," என்கிறார்.
மேலும் அவர். "நான் வலதுசாரியோ, இடதுசாரியோ கிடையாது. எது சரியோ அந்த பாதையில் செல்ல விரும்புகிறேன். உண்மையில் இப்போது உடனடியாக தேர்தல் அரசியலுக்கு வரும் எண்ணம் ஏதும் இல்லை. அதற்காகத் தேர்தல் அரசியலை நாங்கள் எதிர்மறையாகப் பார்க்கவில்லை. இப்போது நான் வேர்களில் வேலை செய்கிறேன். அடிமட்டத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறேன்," என்று தெரிவித்தார்.
விவசாயம் செய்கிறேன். அதற்காக நான் முழு நேர விவசாயி அல்ல. இதன் ஊடாக ஒரு மாற்றத்தை நோக்கிப் பயணிக்கிறேன்," என்கிறார்.
"அரசியல் ஆகட்டும், சமூகம் ஆகட்டும் இப்போது தமிழகத்திற்கு ஒரு புதிய பார்வை தேவை. மக்களுக்கு ஒரு மாற்றம் தேவை. ஆனால், அவர்களால் ஒரு மாற்றத்தைக் கண்டறியமுடியவில்லை. அடிமட்டத்தில் வேலை செய்யாமல் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது. வேர்களில் வேலை செய்ய அறிவார்ந்த இளைஞர்கள் தேவை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்,"என்கிறார்.
ரஜினியின் முதல்வர் வேட்பாளராக அண்ணாமலை களம் இறங்குகிறார் எனக் கூறப்படுவது குறித்துக் கேட்டோம்.
அதற்கு அவர், "முதல்வராக ஆவதற்கு இப்போது எனக்கு என்ன தகுதி இருக்கிறது. இப்போது நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது இதனைக் குறித்துப் பேச என்ன இருக்கிறது. தனிப்பட்ட முறையின் நான் ரஜினி நடிப்புக்கு ரசிகன். அவரை கண்டு வியக்கிறேன். அவர் கட்சி தொடங்கட்டும். கொள்கைகளைக் கூறட்டும். அவரை நோக்கி மக்கள் ஈர்க்கப்பட்டுச் சென்றால் அதில் என்ன தவறு?
"ஏன் ஒருவர் வருவதற்கு முன்பே முடக்கப் பார்க்கிறீர்கள். அமைப்பின் சக்தியைக் கொண்டு என்ன அமைதியாக்க பார்க்கிறீர்கள். இதுதான் இப்போது தமிழ்நாட்டு அரசியலில் பிரச்சனையாக இருக்கிறது. நான் முடங்கும் ஆள்கிடையாது. நான் அமைதியாகச் செல்ல மாட்டேன்." என்கிறார் அண்ணாமலை.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: