You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி உரை: "கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது"
கொல்கத்தா, மும்பை மற்றும் நொய்டாவில் ஆகிய நகரங்களில் கொரோனா பரிசோதனை மையங்களைக் காணொளி மூலம் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோதி, கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் சரியான நேரத்தில், சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த புதிய மையங்களில் ஒவ்வொரு நாளும் கிட்டதட்ட 10,000 கொரோனா பரிசோதனைகளைச் செய்ய முடியும் என பிரதமர் மோதி தெரிவித்தார்.
மேலும் அவர்,’’ கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவில் சிறப்பான சூழ்நிலை உள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையே இதற்குக் காரணம். பல முன்னேறிய நாடுகளை விட இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவு. அதே போலக் குணமடைவோர் விகிதமும் பல நாடுகளை விட இந்தியாவில் அதிகம்’’ என்றார்.
இந்தியாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 சிகிச்சை மையங்களும், 11 லட்சத்துக்கும் அதிகமான படுக்கைகளும் உள்ளன எனக் கூறிய மோதி, ஒவ்வொரு நாளும் 5 லட்சம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது என்றார்.
ஒவ்வொரு இந்தியரின் உயிரைக் காப்பதே நோக்கம் என தெரிவித்த அவர், வரும் காலங்களில் ஒவ்வொரு நாளும் எடுக்கப்படும் பரிசோதனைகளை 10 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
கொரோனா தொற்று எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இந்தியா உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 50 ஆயிரம் பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தைக் கடந்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 771 ஆக உள்ளது.
மோதி இந்தியாவை பாராட்டிப் பேசியுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் தென் கொரியா, சீனா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளைப் பாராட்டியுள்ளது.
இன்று காணொளி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயெசஸ்,’’ இந்த பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கடந்த 6 வாரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.’’ என்றார்.
மேலும் அவர், உலக சுகாதார நிறுவனம் வழங்கிய அறிவுத்தல்களை கவனமாக தொடர்ந்து பின்பற்றி வந்த பல நாடுகள் கொரோனா தொற்றைத் தடுத்துள்ளன என்றார்.
’’ கனடா, சீனா, ஜெர்மனி, தென் கொரியா போன்ற நாடுகள் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. அதே போல, கம்போடியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் கொரோனா அதிகளவில் பரவாமல் தடுத்துள்ளன’’ என்றார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :