You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அலிபாபா நிறுவனர் ஜாக் மாவுக்கு இந்திய நீதிமன்றம் சம்மன்: காரணம் என்ன?
உலக பணக்காரர்களில் ஒருவரும், சீனாவின் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனருமான ஜாக் மாவுக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
சீனாவில் ஆல்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அலிபாபா நிறுவனம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் யூசி பிரவுசர், யூசி நியூஸ் உள்ளிட்ட மொபைல் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்தநிலையில் குருகிராமில் உள்ள யூசி வெப் அலுவலகத்தில் 2017-ம் ஆண்டு வரை இணை இயக்குநராக பணியாற்றி வந்த புஷ்பந்திர சிங் பர்மர் என்பவர் குருகிராம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
யூசி நிறுவன செயலிகளில் தணிக்கை பற்றியும் போலிச் செய்திகள் பற்றி புகார் எழுப்பியதால் தன்னை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்ததாக புஷ்பந்திர சிங் பர்மர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜாக் மா மற்றும் யூசி நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலருக்குச் சம்மன் அனுப்பியுள்ளது. அதில், 30 நாட்களுக்குள் சம்மன் தொடர்பாக எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் ஜூலை 29-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டவர்களோ அல்லது அவர்களது வழக்கறிஞர்களோ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி சோனியா ஷியோகண்ட் உத்தரவிட்டுள்ளார்.
யூசி பிரவுசர் மற்றும் யூசி நியூஸ் செயலிகளில், சீனாவுக்கு எதிரான செய்திகளை அலிபாபா நிறுவனம் தணிக்கை செய்ததாகவும், சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்த போலிச்செய்திகளை வெளியிட்டதாகவும் புஷ்பந்திர சிங் பர்மர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் 2 லட்சத்து 68 ஆயிரம் டாலர் இழப்பீட்டையும் அவர் கோரியுள்ளார்.
பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி, யூசி பிரவுசர் உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
''இந்தியாவின் சந்தை மற்றும் உள்ளூர் ஊழியர்களின் நலனுக்காக நாங்கள் உறுதியுடன் பணியாற்றி வருகிறோம். இந்தியாவின் சட்டங்களைப் பொறுத்தே எங்களது கொள்கைகள் உள்ளன. இந்த வழக்கு குறித்து தற்போது எங்களால் பதிலளிக்க முடியாது என யூசி இந்தியா தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: