You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோவானால் தாமதமாகும் யோகி பாபுவின் 'காக்டெய்ல்' - தயாரிப்பாளர் பி. ஜி. முத்தையா பேட்டி
- எழுதியவர், வித்யா காயத்ரி
- பதவி, பிபிசி தமிழுக்காக
உலகம் முழுவதும் கொரோனா அச்சம் பரவி வருகிறது. கொரோனா தொற்றினை தவிர்ப்பதற்காக மாநிலம் முழுவதும் திரையரங்குகளை மூடும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே செல்வணி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
"கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் சூழலில், அகில இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், அனைத்து இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் மாமன்றம் உட்பட அனைத்து அமைப்புகளும் திரைப்படப் பணிகளை இன்று (19.03.2020) முதல் நிறுத்தி வைப்பது என்று முடிவெடுத்துள்ளது.
நமது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைவாக உள்ளது என்றாலும், திரைப்படத் துறையில் பாதுகாப்பும், சுகாதாரமும் மிகவும் குறைவாக உள்ளதால் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் 19.03.2020 முதல் திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரப் படங்கள் போன்ற அனைத்துப் பிரிவு திரைப்படப் பணிகளையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது" என அப்போது செல்வமணி தெரிவித்தார்.
இந்நிலையில், மார்ச் 20ஆம் தேதி திரைக்கு வருவதாகத் திட்டமிடப்பட்ட படங்கள் அனைத்தின் வெளியீடும் ஒத்திவைக்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது. மார்ச் 20ஆம் தேதி யோகி பாபு நடிப்பில் வெளியாக இருந்த 'காக்டெய்ல்' திரைப்பட வெளியீடும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பி.ஜி முத்தையா தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், "நிலைமை சீராகி மீண்டும் திரையரங்குகளில் இயல்பு நிலை திரும்பும்போது இந்த வாரம் வெளியாகாமல் நின்று போன படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். அச்சமயம் பெரிய படங்களோ, கூடுதல் படங்களோ வெளியாகி விடாமல் ஒழுங்குபடுத்தித் தருவதோடு எங்கள் படங்களுக்குத் தேவையான நல்ல திரையரங்குகளை ஒதுக்கித் தர வேண்டும்.
அதுவே எங்களது இழப்பைச் சரி செய்ய நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் தமிழக அரசும் இதைக் கருத்தில் கொண்டு ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த விஷயம் பற்றி முத்தையாவிடம் பேசியது பிபிசி தமிழ். அந்தப் பேட்டியில் இருந்து...
கே : பட வெளியீடு தள்ளி வைக்கப்படுவதால் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன ?
ப : சின்ன படத்தை தயாரிக்கிற தயாரிப்பாளருக்கு மார்ச் மாதம் மட்டும் தான் போட்டி குறைவாக இருக்கும். பெரிய படங்கள் எல்லாமே ஏப்ரல், மே மாதங்களில்தான் ரிலீஸாகும். ஒருவேளை மார்ச் மாதம் வெளியாகவில்லை எனில், ஜூன், ஜூலையில் தான் படத்தை ரிலீஸ் பண்ண முடியும். ஒரு தயாரிப்பாளருக்கு படம் ரிலீஸ் தள்ளிப்போகும் போது படத்திற்காக வாங்கிய பணத்திற்கான வட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு பக்கமிருந்தும் அழுத்தம் வரும். ஆனால், கொரோனா போன்ற பிரச்னை எதிர்பாராமல் வரும்போது எதுவும் செய்ய முடியாது. பொதுவாக படம் ரிலீஸ் தள்ளிப்போகும்போது தயாரிப்பாளருக்கு இந்த மாதிரியான பாதிப்புகள் தான் ஏற்படும்.
கே : அரசு தரப்பிலிருந்து ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா ?
ப : பழைய நிலை திரும்பியதும், திரையரங்குகளை திறக்கும்போது படங்கள் வெளியிடும்போது இப்போது ரிலீஸாக இருந்த படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதைத் தான் என்னுடைய கடிதத்திலேயும் குறிப்பிட்டுள்ளேன். பெரிய படங்கள் ஏப்ரல் மாதம் வெளியாகும் என ஏற்கனவே தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது எனக் கூறி அவர்களுடைய படங்களை ரிலீஸ் பண்ண வேண்டும் என நினைப்பார்கள்.
அப்படியில்லாமல் ஏற்கனவே ரிலீஸாக இருந்த எங்களைப் போன்றவர்களின் சின்ன பட்ஜெட் படங்களை வெளியிட அனுமதி கொடுக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு பெரிய படங்கள் ரிலீஸானால்கூட அது எங்களை பாதிக்காது. பெரிய படங்களுக்கு எப்போது படம் ரிலீஸானாலும் பிரச்னையில்லை. அவற்றுக்கென ரசிகர்கள் இருப்பார்கள்.
கே : நீங்க அனுப்பிய கடிதத்திற்கு பதில் கிடைத்ததா ?
ப : என்னுடைய படங்கள் மட்டுமில்லாமல் 20ஆம் தேதி ரிலீஸாக இருந்த அத்தனை படங்களுக்கும் சேர்த்துதான் கடிதம் எழுதினேன். தயாரிப்பாளர் ஜே. எஸ்.கே சதீஷ் உடனே எனக்கு தனிப்பட்டமுறையில் ஃபோன் செய்து பேசினார். இது தொடர்பாக நாங்கள் பேசியிருக்கிறோம். அதே போல கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படங்களும் குறைந்த நாட்களே ஓடியுள்ளன.
எனவே, அவர்களும் ரீரிலீஸ் செய்ய விரும்பினால் அவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பேசியிருக்கிறோம் எனக் கூறினார். அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்திருக்கிறார். நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும் என நம்புகிறோம்.
கே : விளம்பரங்களுக்கான முதலீடு இன்னமும் தேவைப்படும் என நினைக்கிறீர்களா ?
ப : இத்தனை நாட்கள் விளம்பரங்களுக்காக எவ்வளவு செலவு செய்தோமோ அதை மறுபடியும் செலவு செய்துதான் ஆக வேண்டும். பெரிய படங்கள் எனில், அவர்கள் இரண்டு, மூன்று மாதங்கள் முன்பு கூட விளம்பரங்கள் ஆரம்பிக்கலாம். ஆனால், சின்னப் படங்களைப் பொறுத்தவரை ஒரு மாதத்திற்கு முன்னரே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இப்பொழுது இரண்டு வாரங்கள் கழித்து படம் வெளியாகப் போகிறது என்பதால் நான் மக்களுக்கு படத்தை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டும்.
பெரிய படங்கள் எனில் ரசிகர்களே ஃபாலோ செய்வார்கள். சின்னப் படங்கள் எனில் விளம்பரம் கட்டாயம் செய்தாக வேண்டும். திரையரங்கு திறக்கப்படும்போது வெளியாக இருந்த கிட்டத்தட்ட ஐந்து படங்களை ரிலீஸ் செய்தால் ஓரளவுக்கு செலவிட்ட தொகையை பெற முடியும். அப்படியில்லை எனில் சின்னப் படங்களால் பெரிய படங்களுடன் போட்டி போடமுடியாது. அதனால் இன்னமும் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்விடும். அது எங்கள் எல்லோருக்குமே பிரச்னை. அதற்காகத் தான் கோரிக்கை வைத்திருக்கோம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: