You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ - நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்தியா
வாழ்வின் மீதிருந்த ஆர்வம் போய்விட்டதாக ஒருமுறை மகாத்மா காந்தி குஜராத் ஆசிரமத்தில் இருந்தபோது அவர் நெருங்கிய நண்பரிடம் கூறினார். 1918ல் ஸ்பானிஷ் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டபோது அவர் கூறிய வார்த்தைகள் இவை.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்பிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, குஜராத்தில் ஆசிரமத்தில் இருந்த 48 வயதான காந்திக்கு இந்த ஸ்பானிஷ் ஃப்ளூ எனப்படும் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. நீராகாரம் மட்டுமே எடுத்துக் கொண்ட காந்தி, நீண்ட காலம் இதனால் அவதிப்பட்டார்.
அப்போது செய்தி வெளியிட்ட உள்ளூர் செய்தித்தாள் ஒன்று இவ்வாறு எழுதியிருந்தது. அதில், "காந்தியின் வாழ்க்கை அவருக்கு சொந்தமானது அல்ல - இந்தியாவுக்கு சொந்தமானது" என்று குறிப்பிட்டிருந்தது.
ராணுவம் மூலமாக
கப்பல் வழியாக இந்தியா திரும்பிய ராணுவத்தினர் மும்பையில் இறங்கினார்கள். இவர்கள் வழியே இந்தியா வந்த அந்த காய்ச்சலால் 1918 ஜூன் மாதம் பலரும் பலியானார்கள். அதைத் தொடர்ந்து மீண்டும் செப்டம்பர் மாதத்தில் வேகமாகப் பரவத் தொடங்கிய இந்தக் காய்ச்சல் தென் இந்திய கடற்கரை முழுவதும் பரவியது.
இந்த காய்ச்சலால் இந்தியாவில் சுமார் 1.8 கோடி மக்கள் பலியாகினர். இந்த எண்ணிக்கை முதலாம் உலகப் போரில் உயிரிழந்த நபர்களைவிட அதிகமாகும். இந்திய மக்கள் தொகையில் 6 சதவீதம் மக்கள் உயிரிழந்தார்கள். இதில் ஆண்களை விடப் பெண்களே அதிகம் இறந்தனர்.
இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காந்தி மற்றும் ஆசிரமத்திலிருந்த வேறு சில நபர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
அப்போது இருந்த மருத்துவ வசதிகளை விட தற்போது அதிகமான வசதிகள் இருக்கின்றன என்பது உண்மைதான். எனினும் தற்போது பரவிவரும் கொரோனா வைரசிற்கு எந்த மருந்தும் இல்லை. ஆனால், சில வைரசிற்கு எதிரான சில மருந்துகள் மற்றும் ஊசிகள் இருக்கின்றன.
ஆனால், 1918ல் ஸ்பானிஷ் காய்ச்சல் பரவியது நுண்ணுயிர் கொள்ளிகள் ஏதும் கண்டுபிடித்திராத சமயம். தீவிர உடல்நிலையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க எந்த மருத்துவ உபகரணங்களும் இருக்கவில்லை. மேலும், அக்காலத்தில் மேற்கத்திய மருத்துவ முறை இந்தியாவில் ஒப்புக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், வெவ்வேறு நூற்றாண்டுகளாக இருந்தாலும் அப்போது பரவிய ஸ்பானிஷ் காய்ச்சலுக்கும் தற்போதைய கொரோனா வைரசிற்கும் சில முக்கிய தொடர்புகள் இருப்பதாக தெரிகிறது.
எனினும் அப்போது பரவிய காய்ச்சலில் இருந்து சில பாடங்களை இந்தியா கற்றுக் கொள்வது அவசியம்.
How to wash your hands properly? | கொரோனா | Covid-19 | Corona
ஸ்பானிஷ் காய்ச்சல் பரவத் தொடங்கியது பாம்பேயில்தான் (இப்போது மும்பை). அப்போதே மக்கள் தொகை அதிகமாக இருந்த நகரம். இது சில நிபுணர்கள் இடையே இப்போது அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், சுமார் இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட மும்பை இருக்கும் மகாராஷ்டிராவில்தான் இந்தியாவில் இதுவரை அதிகம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதான் இந்த அச்சத்திற்குக் காரணம்.
1918 ஜூலையில் ஸ்பானிஷ் காய்ச்சலால் தினமும் 230 பேர் இறந்தனர்.
இதுகுறித்து அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்ட செய்தியில், "அதிக காய்ச்சல் மற்றும் முதுகு வலி ஆகியவை ஸ்பானிஷ் காய்ச்சலுக்கான முக்கிய அறிகுறிகளாக இருக்கின்றன" என்று தெரிவித்திருந்தது.
அதோடு, "பாம்பேயில் இருக்கும் பல வீடுகளில் யாரேனும் ஒருவருக்குக் காய்ச்சல் இருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பணியாளர்கள் யாரும் அலுவலகங்களுக்கோ தொழிற்சாலைகளுக்கோ செல்லவில்லை. ஐரோப்பாவில் இருந்து வந்து இங்கு தங்கியிருப்பவர்களை விட, இந்தியர்களுக்குத்தான் அதிகம் இந்த காய்ச்சல் பரவியிருந்தது.
"காய்ச்சல் வராமல் இருக்க, மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். திரையரங்குகள், விழாக்கள், பள்ளிகள், கூட்டமாக இருக்கும் ரயில் நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். காற்றோட்டமாக இருக்கும் இடங்களில் தூங்குவது நல்லது. உடற்பயிற்சியுடன் ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று செய்தித்தாளில் கூறப்பட்டது.
எனினும் மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் அந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிட்டிருந்தது.
அப்போது இந்தியாவில் எவ்வாறு இந்த வைரஸ் பரவியது என்பதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. சுகாதார அதிகாரியான டர்னர் ஸ்பானிஷ் காய்ச்சல், கப்பல் வழியே இந்தியா வந்ததாக நம்பினார். ஆனால், மும்பை நகரத்திலிருந்துதான் காய்ச்சல் பரவத் தொடங்கியதாக அரசாங்கம் கூறியது.
காய்ச்சல் பரவுதலை சரியாக கட்டுப்படுத்த தவறிய அரசாங்கம், இந்தியர்களின் சுகாதாரமற்ற முறையே இதற்கு காரணம் என்று கூறியது எனக் காய்ச்சலை எப்படி பாம்பே எதிர்கொண்டது என்பது குறித்து ஆராய்ந்த மருத்துவ வரலாற்று ஆய்வாளர் மிருதுலா ரமண்ணா தெரிவிக்கிறார்.
தேவையான நேரத்தில் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று செய்தித்தாள்கள் விமர்சித்திருந்தன.
பின்னர் அரசு சாரா அமைப்புகள் மற்றும் தொண்டாற்றுபவர்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார்.
மருத்துவ முகாம்கள் அமைப்பது, சடலங்களை அகற்றுவது, சிறு மருத்துவமனைகள் திறந்தது, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, ஆடைகள் மற்றும் மருத்துகள் விநியோகிக்க சிறு மையங்கள் அமைத்து அவர்கள் உதவினர்.
இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு மக்கள் அதிகளவில் முன்வந்து தேவையான நேரத்தில் தேவையானவர்களுக்கு உதவியது இல்லை என்று அரசாங்க அறிக்கை ஒன்று கூறியது.
தற்போது கொரோனா வைரஸை இந்தியா எதிர்கொண்டு வரும் நிலையில், அரசாங்கம் வேகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், வைரஸை கட்டுப்படுத்துவதில் பொதுமக்கள் முக்கிய பங்காற்றினர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில், இதனை இந்தியா மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: ஒரு ட்ரில்லியன் நிதி ஒதுக்கிய டிரம்ப், மீளும் ஆசிய பங்கு சந்தை Live Updates
- கொரோனா அச்சுறுத்தல்: தஞ்சை பெரிய கோயில் மூடப்பட்டது
- மதுரை தமுக்கம் மைதானத்தின் விரிவான வரலாறும், அதன் எதிர்காலமும்
- தென்கிழக்கு ஆசியாவில் தீவிரமாகும் கொரோனா, முடக்கப்பட்ட சிஎன்என் தொலைக்காட்சி - இந்தியாவின் நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: