You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் 156 பேருக்கு கொரோனா: நாடு முழுவதும் தேர்வுகள் தள்ளிவைப்பு Corona India Updates
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள், பல்கலைக்கழகத் தேர்வுகள், மதிப்பீட்டுப் பணிகள் ஆகியவை மார்ச் 31 வரை தள்ளிவைக்கப்படுகின்றன என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
புதிய தேர்வு தேதிகள் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு தேதியோடு இணைந்து வருகிற சிக்கல் ஏற்படும் என்பதாலும், ஜேஇஇ மெயின்ஸ் தேர்வர்கள் பல நகரங்களுக்கு பயணிக்க வேண்டியிருக்கும் என்பதாலும் அதுவும் தள்ளிவைக்கப்படுகிறது. நிலைமையை சீராய்வு செய்த பிறகு புதிய ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு தேதி மார்ச் 31ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் அரசு ஊழியர்களுக்கு ஒன்று விட்டு ஒரு நாள் வேலை
இந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் எல்லா அரசு ஊழியர்களும் ஒன்று விட்டு ஒரு நாள் பணிக்கு வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், எல்லா நாள்களிலும் அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களே இருப்பார்கள்.
அதைப் போலவே மும்பையில் சில கடைகள் காலையிலும், சில பகலிலும், சில மாலையிலும் திறந்திருக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேருந்தில் நின்றுகொண்டு பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றொருவர் தள்ளி அமர்ந்து பயணிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மும்பை 'பெஸ்ட்' பேருந்து சேவை அதிக பேருந்துகளை இயக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் முத்திரையோடு ரயிலில் வந்தவர்கள் பிடிபட்டனர்
இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து இந்தியா வந்த, கொரோனா தொற்று இருக்கும் என்று சந்தேகிக்கப்படும் நால்வர், ரயிலில் பயணம் செய்தபோது பிடிபட்டனர் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவேண்டும் என்று கையில் பதிக்கப்பட்ட முத்திரையுடன் அவர்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
சூரத் நோக்கி சென்று கொண்டிருந்த கரீப் ரத் ரயிலில் இருந்து பால்கர் என்ற இடத்தில் இந்த நால்வரும் இறக்கிவிடப்பட்டனர் என்று மேற்கு ரயில்வேயின் முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
இதனிடையே வெளிநாடுகளில் மொத்தம் 276 இந்தியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளிநாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்ட இந்தியர்களின் விவரத்தை வெளியிட்டுள்ளது.
அதில் ஹாங் காங்கில் ஒருவர், இரானில் 255 பேர், இத்தாலியில் ஐந்து பேருர், குவைத்தில் ஒருவர், ருவாண்டாவில் ஒருவர், ஐக்கிய அரபு எமிரேட்டில் 12 பேர், இலங்கையில் ஒருவர் என மொத்தம் 276 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு ஆசியாவின் நிலை...
தென் கிழக்கு ஆசிய நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
"கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதிகம் பேர் இதனால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" என உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய இயக்குநர் பூனம் கெட்ரபால் சிங் தெரிவித்தார்
"பெரும் எண்ணிக்கையில் வைரஸ் தொற்று பரவி வருகிறது. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதை உணர்த்துவதோடு, தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறது. மேலும் இது பரவாமல் இருக்க நாம் அதிக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது. முக்கியமாக இதை உடனடியாக எடுக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள 11 நாடுகளில் எட்டு நாடுகளில் தற்போது இந்த வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறது?
(மார்ச் 18 இரவு 9 மணி நிலவரம்)
தாய்லாந்து - 212
இந்தியா - 156
இந்தோனீசியா - 227
இலங்கை - 51
மாலத்தீவுகள் - 13
வங்கதேசம் - 14
நேபாளம் - 1
பூடான் - 1
தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிஎன்என் தொலைக்காட்சி மூடப்பட்டது.
அந்த அலுவலகம் இருக்கும் கட்டடத்தில் ஒரு ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த முக்கிய தொலைக்காட்சி சேவை குறைந்தது 24 மணி நேரத்திற்காவது மூடப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில நிகழ்ச்சிகளை தற்காலிகமாக நிறுத்தும் பிபிசி நியூஸ்
கொரோனா வைரஸ் பிபிசி செய்தியறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் வீட்டிலிருந்த படியே வேலை பார்த்தும், பிபிசி நியூஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அலுவலகத்திலிருந்துதான் இயங்க முடியும் என்பதால், Politics Live, போன்ற சில நிகழ்ச்சிகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாகவும், பிபிசி தற்போதுள்ள முக்கிய செய்திகளில் கவனம் செலுத்தும் என்றும் அதன் இயக்குநர் பிரான் அன்ஸ்வர்த் தெரிவித்துள்ளார்.
"சுகாதார அவசர நிலையில் நம்பத்தக்க, சரியான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம். அதில் பிபிசிக்கு முக்கிய பங்கு உண்டு" என்று அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: மலேசியாவில் இருவர் பலி : சர்வதேச விமான சேவைகளை நிறுத்தியது 'கோ ஏர்'
- கொரோனா: இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை - மருத்துவர்கள் கதறல்
- கொரோனா: யார் யார் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்? அமைச்சர் விளக்கம்
- கொரோனா: இலங்கையில் 43 பேருக்கு பாதிப்பு, நாடு முழுவதும் முடங்கப் போகிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: