You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா: இலங்கையில் 43 பேருக்கு பாதிப்பு, நாடு முழுவதும் முடங்கப் போகிறதா?
இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை ஒரு நாளில் மட்டும் 15 பேருக்கு நோய் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு வங்கி கடன் வசூலிக்க கூடாது என இலங்கை அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு கிலோ பருப்பின் அதிகபட்ச சில்லறை விலை 65 ரூபாயாகவும், ஒரு டின் மீன் இறைச்சியின் அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாயாகவும் இருக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் நிர்ணயித்துள்ளார். இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.
கோவிட் 19 தடுப்பு தேசிய நடவடிக்கை மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்தார்.
நேற்றிரவு வரை 28 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்ததுடன், இன்றைய தினம் 6 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே அந்த தொகை 34ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டாவது இலங்கையரான சுற்றுலா வழிகாட்டியின் மனைவிக்கும் இந்த வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் அதிகளவில் பரவும் நாடுகளான தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகைத் தந்து, கண்காணிப்பு மத்திய நிலையங்களுக்கு செல்லாது தமது வீடுகளுக்கு சென்றுள்ளவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் கவலை வெளியிட்டார்.
இவ்வாறு கண்காணிப்புக்கு உள்ளாகாதவர்களிடமிருந்து இந்த வைரஸ் அதிகளவில் தொற்றுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனால் குறித்த நாடுகளிலிருந்து மார்ச் மாதம் முதலாம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை வருகைத் தந்தவர்கள் சுய கண்காணிப்புக்கு உள்ளாக வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
ஏனையோருக்கு இந்த வைரஸ் பரவுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாட்டு மக்களிடம் சுகாதார அமைச்சர் கோரிக்கை விடுக்கின்றார்.
நாட்டை முடக்க தீர்மானிக்கவில்லை.
நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றார்.
நாடு முடக்கப்படும் பட்சத்தில் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாள் கூலிக்கு பணியாற்றும் பலரே நாட்டில் உள்ளதாகவும், நாடு முடக்கப்படும் பட்சத்தில் அவர்கள் பாரிய பொருளாதார பிரச்சனைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் கூறினார்.
குறிப்பாக புத்தளம் பகுதியிலேயே அதிகளவில் இத்தாலியிலிருந்து வருகைத் தந்தவர்கள் இருக்கின்றார்கள் எனவும், அவ்வாறு வருகைத் தந்தவர்கள் அதிகளவில் வாழும் பகுதிகள் தொடர்பில் எதிர்வரும் தினங்களில் தீர்மானமொன்று எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் 18 மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கு மேலதிகமாக கொரோனா தொற்றுக்காகவே மருத்துவமனையொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பொலன்னறுவை - வெலிகந்த பகுதியில் அனைத்து வசதிகளுடனான இந்த விசேட மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறினார்.
கண்காணிப்பு மத்திய நிலையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன - இராணுவ தளபதி
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட, வெளிநாடுகளிலிருந்து வருவோரை கண்காணிப்பு மத்திய நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
முதலில் இரண்டு மத்திய நிலையங்கள் மாத்திரமே ஸ்தாபிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அந்த மத்திய நிலையங்களின் எண்ணிக்கை 16 வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள நிலையங்களில் 2258 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இராணுவ தளபதி மேலும் கூறினார்.
புத்தளம் மாவட்டமே அச்சுறுத்தலான மாவட்டம் - அனில் ஜாசிங்க
இத்தாலியிலிருந்து வருகைத் தந்த பலர், மருத்துவ கண்காணிப்புக்களை மேற்கொள்ளாதிருப்பதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
இவ்வாறு இத்தாலியிலிருந்து வருகைத் தந்த பலர் புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தங்போது தங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக சுமார் 800 பேர் வரை புத்தளம் மாவட்டத்தில் மருத்துவ கண்காணிப்புக்களை மேற்கொள்ளாதிருப்பதாகவும், அவ்வாறானவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருக்குமானால் அது பரவுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறானவர்கள் தாமாகவே முன்வந்து இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: