கொரோனா வைரஸ்: கேரளாவில் பிக் பாஸ் பிரபலத்தை வரவேற்க கூடிய கூட்டம் - தேடும் பணியில் போலீஸார்

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நபரின் ரசிகர்கள் அவரை வரவேற்க விமான நிலையத்தில் கூடியதால் கேரள போலீஸ் அந்த நபரைத் தேடி வருகிறது.

மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார் ரஜித் குமார், பின் நிகழ்ச்சியில் சர்ச்சையான முறையில் நடந்து கொண்டதற்காக நீக்கப்பட்டார் என்று தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த போது அவரை வரவேற்கப் பலர் அங்குக் கூடியுள்ளனர்.

"இது புதிய விதிமுறைகளுக்கு எதிரானது. 80 நபர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இரண்டு பேரைக் கைது செய்துள்ளோம். ரஜித் குமாரை காணவில்லை," என எர்ணாகுளம் மாவட்டத்தின் தகவல் அதிகாரி நிஜாஸ் ஜுவல் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்திய குற்றவியல் சட்டத்தின் சட்டவிரோதமாகக் கூடுதல், கலவரம் செய்தல், பொதுச் சேவை அதிகாரியின் ஆணைக்கு உட்படாமை, பொது மக்கள் தொந்தரவு விளைவித்து ஆபத்தை உருவாக்குதல் ஆகிய பிரிவில் நெடும்பசேரி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

"விமான நிலையத்தை ஒட்டிய 500 மீட்டர் தூரத்தில் எந்த ஒரு நிகழ்வும் நடைபெறக்கூடாது," என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்கிறார் நிஜாஸ் ஜுவல்.

மேலும் கேரள அரசு 50 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் மையப்புள்ளியாக இருந்த வுவானிலிருந்து முதன்முதலில் மாணவர்களைக் கொண்டு வந்தது கேரளாதான். மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தற்போது இயல்பு நிலையில் உள்ளனர்.

கேரளாவுக்கு இத்தாலியிலிருந்து வந்த மூன்று பேர் கொண்ட குடும்பம் விமான நிலையத்தில் சோதனையைப் புறக்கணித்து விட்டுச் சென்றது. ஆனால் பின் அவர்களுக்குத் தனியார் மருத்துவமனையில் கொரோனா இருப்பது தெரிய வந்ததும் கேரள அரசு அதிர்ச்சிக்குள்ளானது. குடும்பத்தைச் சேர்ந்த 91 வயது மற்றும் 83 வயதுடைய முதியவர்கள் நிலை மோசமாக உள்ளது.

மூணாறு ரிசார்ட்டில் தங்கியிருந்த 20 பேர் கொண்ட குழுவில் பிரிட்டன் சுற்றுலா குழுவில் கொரோனா தொற்று உள்ள நபருக்குக் கண்டறியப்பட்டபின் அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: