You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: மலேசியாவில் பொது நடமாட்டத்துக்கு இரு வாரங்கள் தடை
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மார்ச் 18ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலான இரு வார காலத்துக்கு மலேசியாவில் பொது நடமாட்டத்துக்கு (LOCKDOWN) தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை திங்கட்கிழமை இரவு மலேசிய பிரதமர் மொகிதின் யாசின் வெளியிட்டார்.
கடந்த ஒருவார காலமாக மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15ஆம் தேதி) ஒரே நாளில் 190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுவதாக மலேசிய மக்கள் மத்தியில் அச்சம் பரவத் தொடங்கிய நிலையில், உடனடியாக பொது நடமாட்டத்துக்கு தடை, கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்த தொடங்கினர்.
இந்நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது எனில், அதுகுறித்து பரிசீலிக்கப்படும் எனப் பிரதமர் மொகிதின் யாசின் திங்கட்கிழமை காலை தெரிவித்திருந்தார். இதையடுத்து சுகாதார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அத்துறைகளின் அதிகாரிகளோடு அவர் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
அதன் முடிவில் திங்கட்கிழமை இரவு அவர் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பொது நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் என பிரதமர் உறுதி
அதன்படி, அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், மையங்கள் திறந்திருக்கும் என்றும், பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ என மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மக்கள் அதிகளவு கூடும் அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும், கலாச்சார, சமூக, மத நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக குறிப்பிட்ட பிரதமர், வணிக மையங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு மையங்கள், திரை அரங்குகள், கேளிக்கை மையங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்றும், அந்த இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மொகிதின் யாசின் உத்தரவிட்டுள்ளார்.
அதே வேளையில், பேரங்காடிகள், சந்தைகள், பலசரக்குக் கடைகள், அங்காடிக் கடைகள் அனைத்தும் எப்போதும் போல் திறந்திருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மலேசியர்கள் 14 நாட்களுக்கு வெளிநாடு செல்ல தடை
மலேசியர்கள் அடுத்த 14 நாட்களுக்கு வெளிநாடுகள் செல்வதற்குத் தடைவிதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் மலேசியர்கள் சுகாதாரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோர் உடனுக்குடன் 14 நாட்களுக்குத் தனிமைப் படுத்தப்படுவர் என்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாகவும் பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
எல்லா அரசாங்க, தனியார் நிறுவனங்களின் அலுவலக இடங்கள் மூடப்பட வேண்டும் என்றும், அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அமைப்புகள் இயங்கும் என்றும் அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக தண்ணீர் விநியோகம், பொதுப் போக்குவரத்து, கடல் போக்குவரத்து, எரிவாயு, எண்ணெய், ஒலி-ஒளிபரப்புகள், நிதி சேவைகள், வங்கி சேவைகள், சுகாதார சேவைகள், மருந்து விற்பனை மையங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், சிறைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு, தற்காப்பு, தூய்மைப்படுத்தும் பணிகள், உணவு விநியோகம் ஆகியவை தொடர்ந்து வழக்கம்போல் இயங்கி வரும் என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள், கல்வி மையங்கள் மூடப்படும் என அறிவிப்பு
பள்ளிக் கூடங்கள், கல்வி மையங்கள் தங்களது நடவடிக்கைகளை இடைக்காலமாக ஒத்தி வைக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில், வரும் 18ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை அவை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து உயர்நிலைப் பல்கலைக் கழகங்களும், கைத்திறன் பயிற்சி மையங்களும் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சில தனியார் பள்ளிகள் ஏப்ரல் 2ஆவது வாரம் வரை மூடப்படும் என முன்பே அறிவிப்பு வெளியானது. தற்போது அரசுப் பள்ளிகளும் மூடப்படுகின்றன.
"இத்தகைய நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்றாலும் கொவிட் 19 பாதிப்புகள் பரவாமல் இருக்கவும், மதிப்புமிக்க உயிர்களைக் காப்பாற்றவும் இந்த நடவடிக்கைகள் அவசியமாகிறது.
"மேற்குறிப்பிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர, மற்ற அரசு சேவைகள், தனியார் நிறுவனப் பணிகளில் ஈடுபட்டிருப்போர் தங்கள் வீட்டில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப் படுகிறார்கள்," என்று பிரதமர் தெரிவித்ததாக ஓர் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: