You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா: இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை - மருத்துவர்கள் கதறல்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இத்தாலி மருத்துவர்கள் மிகவும் சங்கடமான சூழலில் உள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும், கொரோனா தொற்று பரவிய நபர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடும் சூழ்நிலைக்கு இத்தாலி மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இத்தாலியில் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தாலி மருத்துவமனைகளில் நோயாளிகள் பயன்படுத்த போதுமான படுக்கைகள் இல்லாத சூழல் நிலவுகிறது.
80 முதல் 95 வயதுடையவர்கள் சுவாச கோளாறு பிரச்சனைகளில் தவித்து வந்தால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என பெர்கமோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர் கிறிஸ்டியன் சளரொளி, நாளிதழுக்கு அளித்த செய்தி ஒன்றில் கூறியுள்ளார். இது பயங்கரமான செய்தியாக இருந்தாலும், நாம் வருந்தும் வகையில் இது உண்மை நிலைதான். ஒரு வேலை அதிஷ்டவசமாக உயிர் பிழைப்பார்களோ என்ற எண்ணத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை இத்தாலியில் நிலவுகிறது.
சிகிச்சை அளிப்பது அல்லது உயிரிழக்க அனுமதிப்பது இந்த இரண்டில் ஒரு முடிவை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு இத்தாலி தள்ளப்பட்டது ஏன் ?
கொரோனா வைரஸ் இத்தாலியில் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இத்தாலியில் மட்டும் 2,500க்கும் மேற்பட்டவர்கள் பேர் உயிரிழந்துள்ள நிலையில் 28,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே இரண்டாவது அதிக முதியோர்கள் உள்ள நாடாக இத்தாலி அறியப்படுகிறது. முதியோர்கள் அதிகம் உள்ள முதல் நாடு ஜப்பான். கொரோனா வைரஸ் பாதிப்பு குறிப்பாக முதியோர்களை அதிகம் பாதிக்கிறது, எனவேதான் இத்தாலியில் உள்ள முதியோர்களுக்கு இந்த நோய் தீவிரமாக பரவுகிறது என்று கூறப்படுகிறது.
இந்த மாத துவக்கத்தில் இத்தாலியின் அரசாங்க மருத்துவ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், நோயாளிகள் அனைவருக்கும் நெறிமுறையை கருத்தில் கொண்டு தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு வரிசைப்படி சிகிச்சை அளிக்காமல், உயிர் பிழைக்க வாய்ப்புள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முடிவை இத்தாலியின் மருத்துவ அமைப்பு மட்டும் மேற்கொண்ட முடிவாகப் பார்க்க முடியாது. இவ்வாறான அவசர சூழ்நிலையில், மருத்துவர்கள் நீண்ட நேரம் பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் நிலவும்போது, தங்களின் பணி மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு பரவலாக எல்லோராலும் ஏற்கப்படும்.
இத்தாலியில் ஏற்கனவே ஒரே நேரத்தில் 5,200 நோயாளிகள் ஒரே நேரத்தில் தங்கி சிகிச்சை பெற முடியும். ஆனால் அங்கு குளிர்காலம் என்பதால் பலருக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ ஊழியர்கள் இந்த பேரழிவுக் காலத்தில் பணிபுரியும்போது பல கடுமையான சோதனைகளை எதிர்கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் மனதளவில் வலிமையை இழந்து அழுது விடுகின்றனர் என்று டாக்டர் சளரொளி கூறுகிறார். தலைமை பொறுப்பில் உள்ள மருத்துவரில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு மருத்துவராக பொறுப்பேற்றவர் வரை அனைவருக்குமே ஒரே விதமான மன அழுத்தம்தான். 30 வருடம் செவிலியராகப் பணியாற்றிய ஒருவர் கூட கதறி அழுததை பார்த்ததாக மருத்துவர் சளரொளி கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: