You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பயணத்தடை அறிவித்த நாடுகள் - விரிவான தகவல்கள்
கொரோனா வைரஸை உலகம் முழுவதும் பரவக்கூடிய தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் பல உலக நாடுகளும் வெளிநாட்டு பயணிகளுக்கு பயணத்தடையை அறிவித்து வருகின்றன.
இந்தியா
இந்தியர்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்து திரும்பினால் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படலாம் என இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தாலி, சீனா, இரான், கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியிலிருந்து பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பிறகு வந்தவர்கள் அனைவரையும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். இது வரும் மார்ச் 13-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்," என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தியர்கள் அவசியமில்லாத பயணங்களை ரத்து செய்ய கேட்டு கொள்ளப்படுகின்றனர். மேலும் வெளிநாட்டுக்கு பயணம் செய்து வருபவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர்," என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இலங்கை
சீனாவை சேர்ந்தவர்கள் இலங்கை வந்த பிறகு விசா வாங்கும் முறையை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது. இரான், இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து இலங்கை வந்த பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுவார்கள்.
நேபாளம்
சீனா, இரான், இத்தாலி, ஜப்பான் மற்றும் கொரியாவில் இருந்து நேபாளம் வரும் பயணிகள் விசா பதிவு செய்த பிறகு தான் பயணம் மேற்கொள்ள முடியும். ஹாங்காங்கில் இருந்து பயணம் மேற்கொள்பவர்களுக்கும் நாடு திரும்பிய பிறகு விசா வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மலேசியா
கடந்த இரண்டு வாரங்களாக சீனாவின் ஹூபே, சிஜியாங் மற்றும் ஜியாங்சு மாகாணங்களில் இருந்து மலேசியா வரும் பயணிகள் மற்றும் விமான சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மலேசியாவில் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த தடை மலேசிய குடிமக்களுக்கும், மலேசியாவில் வசிக்கும் பயணிகளுக்கும் பொருந்தாது.
இத்தாலியில் இருந்து வரும் விமானங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு விமான நிலையத்தை பயன்படுத்தும் ட்ரான்சிட் எனப்படும் விமான சேவையையும் இத்தாலி நாட்டு விமானங்களுக்கு வழங்கப்படாது என மலேசியா அறிவித்துள்ளது.
அமெரிக்கா
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பா செல்ல, மற்றும் அங்கிருந்து வர பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அமெரிக்கா.
ஐரோப்பா செல்லும் மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் அடுத்த 30 நாட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
எகிப்து
எகிப்திற்கு கத்தார் நாட்டு குடிமக்கள் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங் காங், இரான் , இராக், இத்தாலி, ஜப்பான், கொரியா, குவைத், மலேசியா, சிங்கப்பூர், ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபர்களை எகிப்தில் பரிசோதனைக்கு பின்னர் உடல் நிலை தேர்ச்சி குறித்த அட்டை வழங்கப்பட்டு , பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் வெளிநாட்டு பயணிகள் அனைவரும் 14 நாட்கள் பின்தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.
ரஷியா
சீனா மற்றும் இரான் நாட்டை சேர்ந்தவர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாடு தடை விதித்துள்ளது.
ஓமன்
சீனா, இத்தாலி, தென் கொரியா, இரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஓமன் நாடு தடை விதித்துள்ளது. இந்த நான்கு நாடுகளின் பயணம் மேற்கொண்டு 14 நாட்கள் தங்கியவர்களுக்கும் கூட இந்த பயணத் தடை அடங்கும். எகிப்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் ஓமன் நாடு தடை விதித்துள்ளது. ஓமன் நாட்டை சேர்ந்தவர்களும் தங்களின் தேசிய அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: