You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா அச்சுறுத்தல்: தஞ்சை பெரிய கோயில் மூடப்பட்டது Corona Tamil nadu Update
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் மூடப்பட்டுவரும் நிலையில், தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் மூடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மால்கள், திரையரங்குகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், புராதன சின்னங்கள், சுற்றுலாத் தலங்கள், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களையும் மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோயில் தொல்லியல் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளதாலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடம் என்பதாலும் அந்தக் கோயிலை மார்ச் 31ஆம் தேதிவரை பக்தர்களின் வருகைக்கு தடை விதித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.
பெருவுடையார் ஆலயத்திற்கு நடந்த குடமுழுக்கிற்குப் பிறகு, அங்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில நாட்களாக கோவிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது.
இன்று காலையில் கோயில் வழக்கம்போல திறக்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் வந்த நிலையில், பூஜைகளும் நடத்தப்பட்டன. ஆனால், காலை பத்து மணியளவில் கோவிலை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவிலில் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டு, கோவிலின் வாசல் மூடப்பட்டது.
கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டாலும், பூஜைகள் தொடர்ந்து நடக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பிற கோவில்கள் மூடப்பட்டவில்லை. அவற்றில் வழக்கம்போல வழிபாடுகள் நடந்துவருகின்றன.
137 புற நோயாளிகள்
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவுக்கு நேற்று (மார்ச் 17) 137 புற நோயாளிகள் வந்ததாக ட்வீட் பகிர்ந்துள்ளார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் பாஸ்கர்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: மலேசியாவில் இருவர் பலி : சர்வதேச விமான சேவைகளை நிறுத்தியது 'கோ ஏர்'
- கொரோனா: இத்தாலியில் பிழைக்க வாய்ப்பு இருந்தால் மட்டுமே சிகிச்சை - மருத்துவர்கள் கதறல்
- கொரோனா: யார் யார் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்? அமைச்சர் விளக்கம்
- கொரோனா: இலங்கையில் 43 பேருக்கு பாதிப்பு, நாடு முழுவதும் முடங்கப் போகிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: