பாராசைட்: 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படத்தின் உண்மை களம் இதுதான்

பட மூலாதாரம், CJENM/BBC
கேன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களின் அங்கீகாரத்தை தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அகாடமி அவார்ட்ஸ் நிகழ்வில், நான்கு ஆஸ்கர் விருதுகளை பெற்று திரைப்பட ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது தென்கொரிய திரைப்படமான 'பாராசைட்'.
இதன் மூலம் 92 ஆண்டுகால ஆஸ்கர் விருதுகள் வரலாற்றில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெறும் முதல் ஆங்கிலம் அல்லாத திரைப்படமாக பாராசைட் உருவெடுத்துள்ளது.
தென்கொரியாவின் சோல் நகரில், போதிய இடவசதியற்ற அடித்தள வீட்டில் வசிக்கும் ஏழை குடும்பத்தையும், அதே நகரில் ஆடம்பர வீட்டில் வசிக்கும் குடும்பத்தினரையும் ஒப்பிட்டு, ஒருவரது வாழ்க்கையில் பணம் ஏற்படுத்தும் தாக்கத்தை அரசியல் பின்னணியுடன் பாராசைட் விளக்குகிறது.
பாராசைட் திரைப்படம் வேண்டுமானால் கற்பனை கதையாக இருக்கலாம், ஆனால் அந்த படத்தில் மையப்படுத்தப்படும் வீடுகள் சோல் நகரத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது.

தென் கொரியாவின் தலைநகரான சோலில் ஆயிரக்கணக்கான மக்கள் பஞ்சிகா என்றழைக்கப்படும் சூரிய ஒளிப் புக முடியாத இந்த அடித்தள வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிபிசி கொரிய சேவையின் செய்தியாளர் ஜூலி யூன், சோல் நகரத்திலுள்ள சில பஞ்சிகா வீடுகளுக்கு சென்று, அங்கு வசிப்பவர்களின் கதையை இந்த கட்டுரையில் பட்டியலிடுகிறார்.
ஓ கீ-செயோலின் பஞ்சிகாவில் சிறு தாவரம் வளர்வதற்கு தேவையான சூரிய ஒளி கூட வருவதில்லை.
இவரது வீட்டை ஜன்னல்களின் வாயிலாக சாலையில் செல்பவர்கள் எளிதாக பார்க்க முடியும். இந்த பகுதி இளைஞர்கள் பொதுவாக இவரது வீட்டிற்கு வெளிப்புறம்தான் புகைப்பதுடன், எச்சிலும் துப்புவார்களாம்.
கோடைகாலங்களில் தாங்க முடியாத ஈரப்பதத்தாலும், அதன் காரணமாக உருவாகும் பூஞ்சைகளாலும் தான் பாதிக்கப்படுவதாக அவர் கூறுகிறார்.

வீட்டின் தரைப்பரப்பிலிருந்து அரை மீட்டர் உயரத்தில் இருக்கும் சிறிய கழிவறையில் நீர்த்தொட்டி எதுவும் இல்லை. அதுமட்டுமின்றி, கழிவறையின் உயரம் குறைவாக இருப்பதால், தலையில் இடித்து கொள்வதை தவிர்க்க, தாங்கள் இரு கால்களையும் அகல விரித்து நிற்க வேண்டியது அவசியம் என்று அவர் கூறுகிறார்,
"இந்த வீட்டிற்கு குடியேறிய புதிதில், சுவர்களில் அடிக்கடி தெரியாமல் இடித்துக்கொண்டு எனக்கு உடலின் பல பகுதிகளில் காயமும், சிராய்வுகளும் ஏற்பட்டன" என்று கூறும் 31 வயதாகும் ஓ தளவாடத் துறையில் பணிபுரிகிறார்.
ஆனால், இப்போது அனைத்தும் பழகிவிட்டதாக அவர் கூறுகிறார்.

புகழ்ப்பெற்ற இயக்குநர் போங் ஜோன்-ஹோ இயக்கிய பாராசைட் திரைப்படம், சமூகத்தின் இருவேறுபட்ட நிலைகளை சேர்ந்த குடும்பங்களை அவர்களது வீடுகளை முதலாக வைத்து விளக்குகிறது.
இதுபோன்ற பஞ்சிகாகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வசிக்கின்றனர். ஆனால், இது நவீனகால சோல் நகரத்தின் வடிவமைப்பை பிரதிபலிக்கும் ஒரு விடயமாக நினைத்துவிடாதீர்கள். இவற்றின் வரலாறு இரு கொரிய நாடுகளுக்கிடையே நடந்த சண்டையிலிருந்து தொடங்குகிறது.
1968ஆம் ஆண்டு வட கொரியாவின் கமாண்டோக்கள் தென் கொரியாவின் அப்போதைய அதிபர் பார்க் சங்-ஹீயை கொலை செய்யும் நோக்கத்துடன் சோல் நகரத்துக்குள் நுழைந்தனர்.
இந்த முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டாலும், இரு கொரிய நாடுகளுக்கிடையேயான பதற்றம் மென்மேலும் அதிகரித்தது. மேலும், ஆயுதமேந்திய வட கொரிய முகவர்கள் தென் கொரியாவில் ஊடுருவியதுடன், அதைத்தொடர்ந்து பல்வேறு பயங்கரவாத சம்பவங்களும் நடந்தன.

அதைத்தொடர்ந்து, தனது நாட்டின் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தென் கொரியா எடுக்க தொடங்கியது. குறிப்பாக, 1970ஆம் ஆண்டு சோல் நகரத்தில் இனி புதிதாக கட்டப்படும் அனைத்து கட்டடங்களிலும், அவசர காலத்தில் பதுங்கி குழிகளை போன்று செயல்படும் அடித்தளம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று தென் கொரிய அரசு உத்தரவிட்டது.
இந்த அறிவிப்பு அமலுக்கு வந்த சமயத்தில், பஞ்சிகாவை வாடகைக்கு விடுவது சட்டவிரோதமானதாக இருந்தது. ஆனால், 1980களில் சோலில் வீடுகளுக்கான பற்றாற்குறை ஏற்பட்டதால், பஞ்சிகாவை சட்டபூர்வமாக்கும் நிலைக்கு தென் கொரிய அரசு தள்ளப்பட்டது.
உலகின் 11ஆவது மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக தென் கொரியா விளங்கினாலும், அங்கு மலிவான வீட்டுவசதிக்கு நிலவும் பற்றாற்குறை இளைஞர்களுக்கும், வறியவர்களுக்கு மிகுந்த பிரச்சனையை ஏற்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை 2018ஆம் ஆண்டு வெளியிட்ட குறிப்பு ஒன்று கூறுகிறது.

கடந்த பத்தாண்டுகளில் பார்க்கும்போது, சோல் நகரத்தில் வசிக்கும் 35 வயதுக்கு உட்பட்டவர்களின் வருமானத்தில் சராசரியாக 50 சதவீதம் வீட்டு வாடகைக்கு சென்றுவிடுகிறது. எனவே, தொடர்ந்து அதிகரித்து வரும் வீடுகளின் வாடகையை சமாளிப்பதற்கு இதுபோன்ற அடித்தளங்களில் அமைந்துள்ள வீடுகளை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.
ஆனால், அதே சமயத்தில் பஞ்சிகாவில் வசிக்கும் பலரும் சமூகத்தில் இழிவுப்படுத்தப்படுகிறார்கள்.
"எனது வீடு எனக்கு முற்றிலும் போதுமானது. இதன் மூலம் நான் நிறைய பணத்தை சேமிக்க முடிகிறது. ஆனால், இதுபோன்ற வீட்டில் வசிப்பதால் என்னை சிலர் பரிதாபத்திற்குரியவனாக பார்ப்பதை என்னால் நிறுத்த முடியவில்லை" என்று ஓ கூறுகிறார்.
"கொரியாவில் ஒருவர் நல்ல காரையும், வீட்டையும் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதனால்தான், நான் வசிக்கும் இடம் என் மீதான சமூகத்தின் பார்வையை மாற்றுகிறது."
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













