வட கொரியா தென் கொரியா நெருக்கடி: 300 சொற்களில் புரிந்துகொள்ளுங்கள்

பட மூலாதாரம், Reuters
அடிக்கடி அணுஆயுத சோதனைகளை நடத்தியும், அணுஆயுத போரை ஆரம்பிக்கப்போவதாக அச்சுறுத்தியும் வரும் வட கொரியா தனது நிலைப்பாட்டில் மிகப் பெரிய மாற்றங்களை செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில், பல ஆண்டுகாலமாக நிலவி வரும் இந்த பிரச்சனை குறித்த அடிப்படை விடயங்களை காணலாம்.
வட கொரியா ஏன் அணு ஆயுதங்களை விரும்புகிறது?
இரண்டாம் உலகப்போருக்கு பின்பு கொரிய தீபகற்பம் இரண்டாக பிரிந்தது. கம்யூனிச நாடான வட கொரியா ஸ்டாலின் உருவாக்கிய சர்வாதிகார அமைப்பை ஏற்றுக்கொண்டு கட்டமைக்கப்பட்டது.
உலக மேடையில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தனது நாட்டை அழிக்க நினைக்கும் மற்ற உலக நாடுகளிலிருந்து தன்னை தற்காத்து கொள்வதற்கான ஒரே வழி அணுஆயுதங்கள்தான் என்று அந்நாடு கூறுகிறது.
அணு ஆயுதத் தாக்குதலை வட கொரியாவால் நடத்த முடியுமா?

பட மூலாதாரம், AFP
ஒருவேளை நடத்தலாம், ஆனால் வாய்ப்பு இல்லை.
வட கொரியா இதுவரை ஆறு அணுசக்தி தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதில் ஒன்று ஹைட்ரஜன் குண்டு சோதனை என்று அது கூறுகிறது.
தொலைதூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணையில் பொறுத்தக்கூடிய அளவுக்கு சிறிய ரக அணுகுண்டை உருவாக்கியுள்ளதாக வட கொரியா கூறினாலும் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
வட கொரியாவிலிருந்து அமெரிக்காவை தாக்கும் பாலிஸ்டிக் ரக ஏவுகணையையும் அந்நாடு கொண்டுள்ளதாக வல்லுநர்கள் நம்புகின்றனர்.
வட கொரியாவின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்றவை பலவிதமான தடைகளை விதித்துள்ளன.
கிம்மை பதவியிலிருந்து நீக்க முடியாதா?

பட மூலாதாரம், Getty Images
தென் கொரியா மற்றும் ஜப்பானை குறிவைத்தே வட கொரியா தனது ஏவுகணைகளை தயாரிக்கிறது. வட கொரியாவின் தற்காப்பு தாக்குதல் பேரழிவை உருவாக்கும் பதிலடியை உண்டாக்கலாம். அதன் காரணமாக எண்ணற்ற வட கொரியர்கள் உயிரிழக்க நேரிடலாம்.
ஆசிய கண்டத்தின் மிகப் பெரிய சக்தியாக விளங்கும் சீனா கொரிய நாடுகளுக்கு இடையே நிலவும் சூழ்நிலையை எண்ணி கவலையடைந்துள்ளது. அதாவது, கொரிய நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏதாவது ஏற்பட்டு இரு கொரிய நாடுகளும் இணையும் பட்சத்தில், தற்போது தென் கொரியாவில் இருக்கும் அமெரிக்க படைகள் தனது எல்லைப்பகுதியை நோக்கி வரக்கூடும் என்று சீனா நினைக்கிறது.
முன்னெப்போதும் இல்லாத அபூர்வமான மாற்றமா?
இதற்கு முன்பு நடந்த ஆயுத குறைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் தோல்வியையே சந்தித்துள்ளன.

பட மூலாதாரம், AFP
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தையை நடத்திய வட கொரியா, அதன் பிறகு தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றது.
அதன் பின்னர், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயார் என்று வட கொரியா விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், தாங்கள் அணுஆயுத குறைப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைளை ஆதரிப்பதாக தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் இடையிலான சந்திப்பு குறித்த தகவல்கள், திட்டம் மற்றும் காலநேரம் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












