சின்மயி எதிர்ப்பு: சினி டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட் சங்கத் தலைவராக ராதாரவி தேர்வு -விரிவான தகவல்

ராதா ரவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராதா ரவி

தென்னிந்திய சினி டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தின் தலைவராக ராதாரவி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சின்மயி இந்த அறிவிப்பை ஏற்க முடியாது என்று தெரிவித்ததோடு, இதனை சட்டப்படியாக எதிர்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

இந்த சங்கத்தின் தலைவராக, 2018-ஆம் ஆண்டு முதல் முதலாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சங்கத்தில் கிட்டத்தட்ட 1600 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் சங்கத்தில் தற்போதுள்ள நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் முடிவடைவதனால் சங்கத் தேர்தல் நடத்துவதற்கு டப்பிங் யூனியனைச் சேர்ந்த உறுப்பினர்கள் முடிவெடுத்திருந்தனர்.

இந்தத் தேர்தல் வருகிற பதினைந்தாம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ்.ரவி தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

ராதாரவி தலைமையில் போட்டியிடும் அணியை எதிர்த்து ராமராஜ்யம் என்கிற பெயரில் மற்றொரு அணி போட்டியிடுகிறது.

சின்மயி
படக்குறிப்பு, சின்மயி

இந்த அணி சார்பாக தலைவர் பதவிக்கு பாடகியும், டப்பிங் கலைஞருமான சின்மயி போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக, திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக சின்மயி சமூக ஊடகங்களில் தனது கருத்தை பதவிட்டதன் காரணமாக சங்க விதிகளை மீறியதாகக் கூறி அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கினர். அதனை எதிர்த்து சின்மயி தொடர்ந்த வழக்கில், டப்பிங் கலைஞர் சங்கத்தில் இருந்து நீக்கி பிறப்பிக்கிப்பட்ட உத்தரவுக்கு சென்னை 2வது உதவி உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்ற போது, சங்க சட்டவிதிகளுக்கு உட்பட்டு சின்மயி இந்தத் தேர்தலில் போட்டியிடத் தகுதியில்லை எனக் கூறி சின்மயின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து நேரடியாக தலைவர் பதவிக்கு போட்டியின்றி ராதாரவி தேர்வானதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

பொதுச்செயலாளர், துணைத் தலைவர் போன்ற பதவிகளுக்கான தேர்தல் வருகிற 15ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, சின்மயி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். "தேர்தலில் போட்டியிட தகுதியில்லை என்பது குறித்து என்னிடம் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. எதற்காக என்னை நீக்கினார்கள் என்பதும் எனக்குத் தெரியவில்லை. இதுவரை 42.5லட்சம் ரூபாய் வரைக்கும் வரவை விட அதிகம் யூனியன் செலவு செய்துள்ளதாகவும், டப்பிங் யூனியன் கட்டிடம் தொடர்பாக ஊழல் நடைபெற்றுள்ளது" என குறிப்பிட்டார் சின்மயி. மேலும், எந்த சலுகையும் அளிக்காமல் உறுப்பினர்கள் சம்பளத்திலிருந்து 10% எடுத்துக் கொள்கிறார்கள். இதனையெல்லாம் எதிர்த்து கேள்விகேட்டால் தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

"போட்டியின்றி ராதாரவி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டரீதியாக நிச்சயமாக இந்த விஷயத்தை முன்னெடுப்பேன். நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எந்த சட்ட விதிமுறையின்படி என்னை தகுதி நீக்கம் செய்தார்கள் என்பதற்கு முறையான விளக்கத்தை அவர்கள் நிச்சயம் அளிக்க வேண்டும்" என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: