டெல்லி சட்டமன்ற தேர்தல்: முற்றுகையிட்ட தமிழ் மக்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியது என்ன?

சாதிச் சான்றிதழ் பிரச்சனைகளை சரி செய்ய டெல்லியில் பா.ஜ.க ஆட்சி வரவேண்டும்
    • எழுதியவர், பா.காயத்திரி அகல்யா
    • பதவி, பிபிசி தமிழ்

வரும் பிப்ரவரி 8-ஆம் தேதியன்று டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அங்கு பல கட்சித்தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

News image

டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு பா.ஜ.க, காங்கிரஸ் , ஆம் ஆத்மி என பல கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.டெல்லியில் தமிழர்கள் வாழும் கரோல் பாக், மயூர் விஹார், திரிலோக்பூரி, ஆர்.கே. புரம், ஜனக்புரி, ரோஹிணி, கல்யாண்புரி, லாஜ்பத் நகர், ஜல் விஹார், விகாஸ்புரி, தில்ஷாத் கார்டன் என பல பகுதிகளில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரசாரத்தின்போது அந்தந்த தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிக்கும் தமிழக அரசியல் தலைவர்களிடம், டெல்லி வாழ் தமிழ் மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். கல்வி, வேலை வாய்ப்பு போன்ற முக்கிய விஷயங்களை மக்கள் முன்வைத்தனர்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் டெல்லி வாழ் தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையாக சாதிச் சான்றிதழ் உள்ளது. குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு சாதிச் சான்றிதழ் மிகவும் அவசியம் என பிரச்சாரத்திற்கு வரும் அரசியல் தலைவர்களிடம் தங்கள் கோரிக்கையாக முன்வைத்தனர்.

புது தில்லியின் திரிலோக்புரி பகுதியில் பிற மாநிலங்களை சேர்ந்த தமிழ், தெலுங்கு, கன்னட மக்கள் பலர் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க வின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், திரிலோக்புரியின் பா.ஜ.க வேட்பாளர் கிரண் வைத்யாக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் நடிகை குட்டி பத்மினி , பா.ஜ.க வில் சமீபத்தில் இணைந்த எம்.பி. சசிகலா புஷ்பா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

சாதிச் சான்றிதழ் பிரச்சனைகளை சரி செய்ய டெல்லியில் பா.ஜ.க ஆட்சி வரவேண்டும்

பட மூலாதாரம், BBC

அப்போது பல ஆண்டுகளாக டெல்லியில் வாக்குரிமையோடு வசிக்கும் தமிழ் மக்கள் பலர், தங்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் தங்கள் குழந்தைகளை பள்ளி கல்லுரிகளில் சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எந்த அடையாளமும் இன்றி அங்கு வாழ்வதாக கூறி வாக்கு சேகரிக்க வந்த அனைத்து பா.ஜ.க பிரமுகர்களையும் முற்றுகையிட்டனர்.

பெண்கள் பலர் கூடி சாதிச் சான்றிதழ் விவகாரம், தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை என்று பல பிரச்சனைகளை கூறியபோது, அனைத்தையும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் பொறுமையாக கேட்டுவிட்டு, பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மட்டுமே உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தான் நமக்கு விடிவு காலம் என பதிலளித்தார்.

அதற்கும் கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் குறுக்கிட்டு ''நீங்க தான் நாலு வருசமா இருந்தீங்களே! ஏன் அப்போதும் எங்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை'' என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பொன்.ராதா கிருஷ்ணன், ''மத்தியிலும், டெல்லியிலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால் மட்டுமே உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும், இப்போது ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டு, பா.ஜ.க வை தேர்ந்தெடுங்கள். பிறகு அனைவரும் அமர்ந்து இருக்கும் பிரச்சனைகளுக்கு என்ன முடிவு செய்யலாம் என்பதை பேசி முடிவெடுப்போம்'' என விவரித்தார்.

சாதிச் சான்றிதழ் பிரச்சனைகளை சரி செய்ய டெல்லியில் பா.ஜ.க ஆட்சி வரவேண்டும்

மூவாயிரம் கிலோ மீட்டருக்கு தொலைவில் இருந்து டெல்லிக்கு வந்து நான் பிரசாரம் மேற்கொள்வதற்கு காரணம், நம் மக்கள் அனைவருக்கும் படிப்பு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் பிரச்சாரத்தில் உரையாற்றினார்.

சாதிச் சான்றிதழ் விவகாரம் டெல்லி வாழ் தமிழர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. திரிலோக்புரியில் வசிக்கும் பொதுபொன்னம்மாள் தமிழகத்தில் பிறந்து அங்கு படித்து பட்டம் பெற்றவர். அவருக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழ் தமிழகத்தில் பதிவு செய்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு டெல்லியில் குழந்தை பிறந்துள்ளது,

இங்கு அதே பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழ் வாங்க முடியவில்லை. டெல்லியில் இது தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் எந்த விளக்கமும் தர முன்வரவில்லை. மேலும் OBC சான்றிதழ் வாங்குவதற்கான நடைமுறைகள் குறித்தும் இங்கு அதிகாரிகள் விளக்கம் தர மறுக்கிறார்கள் என பொது பொன்னம்மாள் கூறுகிறார். தங்கள் எந்த அடையாளமும் இன்றி டெல்லியில் வாழ்வதாக அவர் தெரிவித்தார்.

சாதிச் சான்றிதழ் பிரச்சனைகளை சரி செய்ய டெல்லியில் பா.ஜ.க ஆட்சி வரவேண்டும்

மேலும் வருமானத்தில் பின்தங்கியவர்களின் குழந்தைகளுக்கு டெல்லியின் அனைத்து தனியார் பள்ளிகளிலும் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் கரோல் பாக், மயூர் விஹார் பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு இந்த இட ஒதிக்கீட்டில் கொடுக்கும் முக்கியத்துவம், திரிலோக்பூரியில் உள்ள தமிழர்களுக்கு கொடுப்பதில்லை. மேலும் வருமானத்தில் பின்தங்கியவர் அல்லாதோர் குழந்தைகளுக்கு இந்த அரசாங்க இடஒதிக்கீட்டில் பள்ளி சேர்க்கை அளிப்பதாகவும். அதில் முறைகேடு நடப்பதாகவும் பொது பொன்னம்மாள் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தல் போல இங்கு தேர்தல் கொண்டாட்டமாக நடப்பதில்லை. காலையில் எங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, மாலை அனைவரும் சென்று வாக்களிப்போம் என்றும் கூறினார். வாக்குபதிவு நாளன்று பல்வேறு கட்சிகள் சார்பில் இலவசமாக ரிக்ஷா சேவை அளிக்கப்படும். அந்த ரிக்ஷாவில் பயணித்து அனைவரும் வாக்களிப்போம் என்றும் பொது பொன்னம்மாள் விவரித்தார்.

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு மாநிலத்தில் வழங்கப்படும் சாதிச்சான்றிதழ், டெல்லியில் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி, வேலைவாய்ப்பில் சாதி அடிப்படையிலான ஒதுக்கீடு கோருவதும் இவர்களுக்கு எட்டாத நிலையிலேயே உள்ளது.

திரிலோக்புரி போன்ற பகுதிகளில் வாழும் வாக்குரிமை பெற்ற தமிழர்கள், ராஜபாளையம், திருநெல்வேலி சிவகாசி போன்ற பகுதிகளில் இருந்து மூன்று தலைமுறைகளுக்கு முன்பே குடியேறியவர்கள். அதில் பலரும் தங்கள் வாழ்வாதாரத்துக்கு சிறு தொழில், வீட்டில் இருந்தபடியே உணவகம் நடத்தி வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: