கவின் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினாரா? - கொந்தளிக்கும் ஆர்மி, டிரெண்டாகும் ஹாஷ்டேக்

இன்றைக்கு தமிழ்ச் சமூகம் #Nokavinnobigboss என்ற ஹாஷ்டேகுடன் தான் காலையில் விழித்தெழுந்தது.

பிகில் திரைப்படப் பாடல் வெளியிட்டின் போதே விஜய் ரசிகர்களை பின்னுக்கு தள்ளி முந்திய கவின் ரசிகர் படை, நேற்று இரவிலிருந்து மீண்டும் களத்தில் குதித்து 'கவின் இல்லையேல் பிக்பாஸ் இல்லை' என்ற ஹேஷ்டேகை டிரெண்டாக்கியது.

என்னதான் நடந்தது?

பிக்பாஸ் வீட்டில் நேற்று அனைவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதாவது, இப்போது யாரேனும் ஒருவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற விரும்பினால் அவருக்கு ஐந்து லட்சம் வழங்கப்படும் . ஐந்து லட்சம் வேண்டாமென்றால் அவர் தொடர்ந்து போட்டியிட்டு இறுதி வரை செல்லலாம் என்று பிக்பாஸ் அறிவித்தார்.

ஆனால், கவின் ஐந்து லட்சம் வாய்ப்பை தேர்ந்தெடுப்பது போல காட்சிகள் ஒளிபரப்பாகின. ஆனால், அதற்கு மேல் நடந்தது என்ன? என்பது இன்றைய நிகழ்ச்சியில்தான் தெரியும்.

"இறுதிப் போட்டியில் யாராவது ஒருவர் மட்டும்தான் 50 லட்சம் ஜெயிக்க முடியும், இந்த வார எலிமினேஷனும் இருக்கிறது. எனவே, யாராவது விரும்பினால் பெட்டியில் இருக்கும் 5 லட்சத்தை எடுத்துக்கொண்டு இப்பொழுதே வெளியேறலாம்" என்று பிக்பாஸ் அறிவித்தார்.

சட்டென்று எழுந்த கவின் நண்பர்கள் எதிர்ப்பை மீறி, "நான் ரெடி தல"னு சொல்வதோடு இன்றைய நாள் முடிகிறது.

இந்தக் காட்சிகளை பார்த்த 'கவின் படை' சமூக ஊடகத்தில் தனது 'அறச்' சீற்றத்தை வெளிப்படுத்தியது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாள் சென்னையில் டிரெண்டாவதற்கு முன்பே #Nokavinnobigboss ஹாஷ்டேகை டிரெண்டாக்கி கவின் மீதான 'தீரா அன்பை' வெளிப்படுத்தியது.

ஆனால், கவின் மீதான வெறுப்பும், விமர்சனமும் இல்லாமல் இல்லை. சேரன் பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய போது 'சேரப்பா'வின் ரசிகர்கள், 'எப்படி கவின் தப்பித்தார்? அவர்தானே வெளியேறி இருக்க வேண்டும்' என 'தவமாய் தவ'மிருந்தனர்.

கவின் மீதான வெறுப்பு குறித்து ஃபேஸ்புக்கில் மகாதேவன் என்பவர் 1,267 வார்த்தைகளில் ஒரு கட்டுரையே எழுதி இருந்தார்.

அனைத்தையும் சந்தேகி - இது மார்க்ஸ் கூறியது.

கவினுக்கு விழும் வாக்குகளைக் குறைக்க பிக்பாஸ் சூழ்ச்சி செய்வதாக 'சிம்ம குரலோன்' பிக்பாஸையே கவின்படை சந்தேகித்தது.

யார் இந்த கவின்?

திருச்சி கே,கே நகர் பகுதியை சேர்ந்த கவின், கனா காணும் காலங்கள், தாயுமானவன், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார்.

பீட்சா, 'இன்று நேற்று நாளை' படங்களில் கெளரவத் தோற்றத்திலும், சத்ரியன், 'நட்புன்னா என்னா தெரியுமா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி தொடருக்காக விஜய் தொலைக்காட்சி விருதையும் பெற்று இருக்கிறார்.

லொஸ்லியா குறித்து விரிவாக அறிந்துக் கொள்ள:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :