பிக் பாஸ் முகேன்: "சிறு வயது காதல் தோல்வியால் கோபப்படுகிறார்" - ரகசியம் உடைத்த நண்பர்

    • எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
    • பதவி, கோலாலம்பூர், பிபிசி தமிழுக்காக

மலேசியாவில் காவல்துறைப் பணியில் இருந்திருக்க வேண்டிய ஒருவர், தற்போது பிக்பாஸ் வீட்டில் தங்கியிருக்கிறார்.

முகேன் ராவ் என்ற பிக்பாஸ் போட்டியாளர் இன்று மலேசியாவில் மட்டுமல்ல, அகில உலகமும் நன்கறிந்த நட்சத்திரமாகி விட்டார். ஆனால் தங்கள் மகன் காவல்துறை பணியில் சேர வேண்டும் என்பதே அவரது பெற்றோரின் விருப்பமாக இருந்துள்ளது. முகேனுக்கோ இசையில்தான் அதிக நாட்டம்.

சிறு வயது முதலே இந்த ஆர்வத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார் முகேன். தந்தை பிரகாஷ் ராவ் நல்ல பாடகர், மேடை நாடக நடிகர் என்பதால் மகன் முகேனுக்கும் கலைத்துறையில் ஈடுபாடு ஏற்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

"ஒன்பது வயதிலேயே என்னுடன் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் முகேன். அவர் முதலில் பாடிய பாடல் 'காதல் வளர்த்தேன்... காதல் வளர்த்தேன்.. '. அதன் பிறகு மெல்ல மெல்ல தன்னைத் தானே மெருகேற்றிக் கொண்டார்," என்கிறார் பிரகாஷ் ராவ்.

13 வயதிலேயே சொந்தமாக பாடல்களும் எழுத ஆரம்பித்தாராம் முகேன். விடிய விடிய தன் மகன் பாடல் எழுதுவதைக் கண்டு ரசித்திருக்கிறார் பிரகாஷ் ராவ். சில சமயம் அதிகாலை வேளையில் கூட இவரைத் தூக்கத்தில் இருந்து எழுப்பி, தாம் எழுதிய பாடல்களைப் படித்தும் பாடியும் காட்டுவாராம்.

"தூக்கக் கலக்கமாக இருந்தாலும் முகேன் எழுதிய பாடல்களை கேட்கும் போது உற்சாகமாக இருக்கும். அவரது முதுகில் தட்டிக்கொடுத்து சபாஷ் என்று சொன்ன பிறகு தான் மீண்டும் தூக்கம் வரும். அவரும் என்னுடைய இந்த பாராட்டுக்காக காத்திருப்பார்."

"ஒரு தந்தையாக என் மகனுக்கு அனைத்து வகையிலும் முழு ஆதரவு அளித்தேன். இன்று அவர் கண்டுள்ள உயரத்துக்கு அவர் நிச்சயம் தகுதி பெற்றவர். முகேன் போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். என்னால் காவல்துறையில் பணிக்கு சேர முடியவில்லை. எனவே என் மூத்த மகனாவது போலீஸ் ஆக வேண்டும் என விரும்பினேன். முகேன் அந்த வேலையில் சேர முடியவில்லை என்றாலும், எனது இரண்டாவது மகன் போலீஸ் வேலையில் சேர்ந்துள்ளார்," என்கிறார் பிரகாஷ் ராவ்.

மலேசியாவைப் பொறுத்தவரை உள்ளூர் கலைஞர்கள் பிரபலமடைவதற்கு தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் அல்லது மேடை நிகழ்ச்சிகள் போன்ற தளங்களில் பயணித்திருக்க வேண்டியது அவசியம். இவற்றின் மூலமாகவே கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இன்றளவும் பலர் இந்த நான்கு தளங்களை குறிவைத்தே இயங்கி வருகின்றனர். ஆனால் இவற்றில் அதிகம் தடம் பதிக்காமல் சுயமாக தன்னைப் பிரபலப்படுத்திக் கொண்டுள்ளார் முகேன். சமூக ஊடகங்கள் மூலமாக அவர் நேரடியாக மக்களுடன் பேசினார். அதனூடே தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

"தனி இசைத் தொகுப்புகள், யூடியூப் தளத்தில் பல்வேறு சுவாரசியமான காணொளிப் பதிவுகள், சில தமிழ், மலாய் மொழித் திரைப்படங்களில் பங்களிப்பு என ஆயிரக்கணக்கான மலேசிய இளையர்களை தன்வசம் ஈர்த்துள்ளார் முகேன். அவரது பாடல்களை முணுமுணுக்காத மலேசியத் தமிழ் இளைஞர்கள் இல்லை எனுமளவுக்கு ரசிகர் கூட்டம் விரிவடைந்துள்ளது. இவரது பாப் பாடல்கள் அனைத்துமே துள்ளல் ரகம் தான். அதைக் கேட்கும் எவரும் நிச்சயம் ரசிப்பார்கள்" என்கிறார் மலேசிய இந்தியக் கலைஞர்கள் சங்கத் தலைவர் விஜய் எமர்ஜென்சி.

"தனது முயற்சியில் ஓரளவு பிரபலமான பிறகே தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் முகேன். பாடல் எழுதுவது, பாடுவது, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது, நடிப்பது என பன்முகங்கள் கொண்டவர் அவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மலேசிய கலை உலகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். இனி அடுத்தடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் நிச்சயமாக மலேசியாவைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் முகேனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்," என்கிறார் விஜய் எமர்ஜென்சி.

மேலும், முகேனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாக குறிப்பிடும் அவர், பெண் ரசிகைகளின் எண்ணிக்கைதான் அதிகம் என்று சொல்லிச் சிரிக்கிறார்.

"முகேன் மிக நன்றாகப் பாடுவார். அழகாகச் சிரிப்பார். அவருக்கு கோடம்பாக்கத்தில் வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, மலேசியா திரும்பியதும் குறைந்த பட்சம் மூன்று படங்களில் அவர் ஒப்பந்தமாவது நிச்சயம்," என்கிறார் விஜய்.

வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புலம்பாமல், வாய்ப்புகள் தேடி வரும் வகையில் செயல்பட வேண்டும் என்பதுதான் முகேன் இன்றைய இளைய சமுதாயத்துக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடம் என்கிறார்கள் மலேசிய கலைத்துறை பிரமுகர்கள்.

முகேனின் இளம் பருவம் அவ்வளவு மகிழ்ச்சிகரமானதாக இருந்தது என்று சொல்வதற்கில்லை. குடும்பம் சற்று ஏழ்மையான நிலையில் இருந்தபடியால் தனது பல விருப்பங்களை அவர் சுருக்கிக் கொண்டதாகச் சொல்கிறார்கள் நண்பர்கள். பெற்றோரை சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக தனது தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ள முயற்சிப்பாராம் முகேன்.

பொது இடங்களுக்குச் செல்லும் போது குளிர்பான டின்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடந்தால் அவற்றைச் சேகரித்து, பழைய பொருட்கள் வாங்கும் கடையில் கொடுத்து அதில் கிடைக்கும் காசை செலவுக்குப் பயன்படுத்தி உள்ளார். கால் டாக்சியும் ஓட்டியுள்ளார் என்று நினைவு கூர்கிறார் முகேனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பாஸ்கரன்.

"சுமார் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்புதான் முகேனை சந்தித்தேன். அந்தச் சமயத்தில் சிறுசிறு நிகழ்ச்சிகளை படைத்து வந்தார். ஒரு பெரிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்க வேண்டும் என அழைத்தேன். பெரிய நிகழ்ச்சி என்றதும் சற்று தயங்கினார். 'பயப்பட வேண்டாம்... உன்னால் முடியும். அதற்கான திறமை உன்னிடம் உள்ளது' என்று நம்பிக்கையூட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தேன். அதன் பிறகு மளமளவென முன்னேறிவிட்டார்."

"என்னைப் பொறுத்தவரை அவர் பாசக்கார தம்பி. என்னை அண்ணா என்றுதான் அன்பாகக் குறிப்பிடுவார். குடும்பம் சிரமத்தில் இருக்கிறது என்று அடிக்கடி வருத்தப்படுவார். என் காரில் அழைத்துச் சென்று அவர் வீட்டில் விடுவதாகச் சொன்னால் கூட வேண்டாம் என்று அவசரமாக மறுப்பார். வீட்டில் எந்த வசதியும் இல்லை என்று சொல்ல கூச்சப்படுவார். 'அதனால் என்ன... நீ என் தம்பி... உன் வீட்டுக்கு அண்ணன் தானே வருகிறேன்' என்று சமாதானப்படுத்தி முதன்முறை அவர் வீட்டுக்குச் சென்றேன்.

"அவர் சொன்னது உண்மை தான். அதிக வசதிகளற்ற வீடு. அங்கு பல இரவுகள் தங்கியுள்ளேன். அந்த நிலையில் இருந்து குடும்பத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் இருப்பார் முகேன்" என்று பாஸ்கரன் கூறுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அண்மைய சில நாட்களாகத்தான் முகேனை சுற்றி சில விஷயங்கள் நடக்கின்றன. சக போட்டியாளரான அபிராமியை நோக்கி நாற்காலியை தூக்கி அடிப்பது போல் முகேன் கோபப்பட்டது நேயர்களை அதிர வைத்தது. மற்றொரு சந்தர்ப்பத்தில் தன் கையால் கட்டிலில் ஓங்கி அடிக்க, அந்தப் பகுதி நொறுங்கிப் போனது.

முகேன் அவ்வளவு கோபக்காரரா?

"ஆமாம்...! ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்பட மாட்டார். அந்தக் கோபத்தின் பின்னணியில் நியாயமான காரணம் இருக்கும். அவர் இள வயதில் காதல் வயப்பட்டார். அது தோல்வியில் முடிந்ததால் ஏற்பட்ட விரக்தியில் அடிக்கடி கோபப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அப்போது வீட்டில் பலவற்றைப் போட்டு உடைத்திருக்கிறார்.

"அந்த சமயங்களில் அம்மா என்னை அழைத்து விவரம் சொல்வார். நானும் கூட 'ஏன் இப்படி கோபப்படுகிறாய்?' என்று கேட்டிருக்கிறேன். உடனே தன் வீட்டு நிலைமையைச் சொல்லி, 'நான் வளர்ந்து வந்த விதம் அப்படி. என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது' என்றெல்லாம் சொல்லி அழுதுவிடுவார்," என்கிறார் பாஸ்கரன்.

சிறந்த பாடகர், நடிகர், பாடலாசிரியர் என்பதையெல்லாம் மீறி நல்ல குணமும் மனிதநேயமும் கொண்ட பாசக்கார சகோதரர்

முகேனைப் போல் அன்பும் நட்பும் பாராட்டக் கூடிய ஓர் இளைஞரை, மிகுந்த பொறுமைசாலியைப் பார்க்க முடியாது என்கிறார் அவரது நெருங்கிய தோழியான ஹேமா ஜி.

இவர் முகேனுடன் இணைந்து தொலைக்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் பலவற்றில் தொகுப்பாளராகப் பணியாற்றி உள்ளார்.

இருவரும் கே.எல் முதல் கே.கே. வரை (கோலாலம்பூர் முதல் கோத்தாகினபாலு வரை) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக சுமார் 90 நாட்கள் இடைவிடாமல் மோட்டார் பைக்கில் மலேசியாவை வலம் வந்துள்ளனர்.

"மலேசியாவில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களை இந்நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினோம். அப்போது முகேனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ரொம்ப அன்பான பையன். எதையும் பொறுமையாக காது கொடுத்து கேட்பார். உண்மையில் நான்தான் அதிகம் கோபப்படுவேன். படப்பிடிப்பின் போது அவரை பலமுறை ஏசியிருக்கிறேன். ஆனால் எதற்காகவும் அவர் என் மீது கோபப்பட்டது இல்லை.

கூடுமானவரை என்னை சமாதானப்படுத்துவார். அதே சமயம் யாரேனும் அவரை தேவையின்றி சீண்டினாலோ, மனம் நோகும்படி நடந்தாலோ கோபத்தின் உச்சிக்கே போய்விடுவார். உணர்ச்சிவசப்பட்டு அழவும் செய்வார்.

ஒருமுறை வீட்டில் ஏதோ சண்டை ஏற்பட்ட போது கதவையே உடைத்துவிட்டதாகக் கூட சொல்லியிருக்கிறார். எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கோபப்பட்டார் என்றால் அதன் பின்னணியில் அவர் பக்கம் நியாயமான காரணம் நிச்சயம் இருக்கும்.

அவர் இப்போது யாரையும் காதலிப்பதாகத் தெரியவில்லை. அவர் தனது மாமா மகளுடன் சிறு வயது முதலே பழகி வருகிறார். அதே போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்ட பெண்ணும் கூட இன்றுவரை அவரது நெருக்கமான தோழி மட்டும்தான்.

முகேன் என்னை அக்கா என்று பாசத்துடன் அழைப்பதுதான் வழக்கம். படப்பிடிப்பின் போது ஒருமுறை அடர்ந்த காடு போன்ற பகுதியில் தங்கியிருந்தோம். மறுநாள் எனது பிறந்ததினம் என்பது எனக்கே மறந்துவிட்டது. ஆனால் முகேன் அதை நினைவில் வைத்திருந்து எங்கெல்லாமோ அலைந்து திரிந்து ஒரு சிறிய கேக் வாங்கி வந்து, எங்கள் குழுவில் இருந்த அனைவரையும் தூக்கத்தில் இருந்து எழுப்பி, சரியாக 12 மணிக்கு அந்த கேக்கை வெட்ட வைத்தார். அந்தளவு தான் நேசிப்பவர்கள் மீது அன்பு பொழியக்கூடியவர் முகேன்," என்கிறார் ஹேமா ஜி.

மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது மலேசியாவின் 14 மாநிலங்களிலும் இவரும் முகேனும் வலம் வந்துள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் முகேனுக்கு ரசிகர் கூட்டம் குவியுமாம். ஆடோகிராஃப் போடுவது, புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று பொறுமையாக யார் மனதும் நோகாமல் சிரித்தபடியே இருப்பாராம் முகேன்.

"ஒரு பிரபலமாக ஓரளவு உயர்ந்த நிலைக்குச் சென்றுவிட்டாலும், மிகவும் அடக்கமாக, பணிவாக நடந்து கொள்வார் முகேன். அவர் சிறந்த பாடகர், நடிகர், பாடலாசிரியர் என்பதையெல்லாம் மீறி நல்ல குணமும் மனிதநேயமும் கொண்ட பாசக்கார சகோதரர் என்பது தான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்," என்கிறார் ஹேமா ஜி.

சரி... முகேன் யாரைத்தான் காதலிக்கிறார்?

முகேன் காதல் வயப்பட்டுள்ளாரா? இல்லையா? என்பதை அறிந்து கொள்வதில்தான் அவரது ரசிகர் கூட்டத்தின் முதல் ஆவலாக உள்ளது.

அவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் பல இளம் பெண்கள் இது குறித்துதான் விசாரிக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் முகேன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகுதான் பதிலளிக்க முடியும்.

இது குறித்து அவரது குடும்பத்தார் சொல்வது என்ன?

"முகேன் தனது உறவுப் பெண்ணைக் காதலிப்பதாக, திருமணம் செய்யப் போவதாக கூறப்படுவது சரியல்ல. ஊடகங்களில் பலவிதமாக செய்தி வெளியிடுகிறார்கள். உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவது வருத்தம் அளிக்கிறது. அப்படி என் மகன் யாரையேனும் காதலித்தால் நிச்சயம் எங்களிடம் தெரிவிப்பார். எங்களது ஆசீர்வாதத்துடன் அவரது திருமணம் நடைபெறும்," என்கிறார் முகேனின் தந்தை பிரகாஷ் ராவ்.

முகேனின் பெற்றோர் பிரிந்து வாழ்கின்றனர். எனினும் இருவர் மீதும் அவர் மிகுந்த பாசம் கொண்டுள்ளார்.

பிரிந்து வாழ்வது உண்மை என்றாலும் விவாகரத்து செய்யவில்லை என்கிறார் பிரகாஷ் ராவ்.

"சில மன வருத்தங்கள் காரணமாக மனைவியைப் பிரிந்திருக்கிறேன். இது அண்மைய சில ஆண்டுகளில் ஏற்பட்ட பிரிவுதான். எனினும் ஒரு தந்தையாக எனது கடமையை ஆற்றியிருக்கிறேன்.

"இது குறித்து என் மகனே வெளிப்படையாக கூறியதாக அறிகிறேன். இது பற்றி அதிகம் பேச விரும்பவில்லை," என்றும் பிரகாஷ் ராவ் நம்மிடம் கூறினார்.

முகேனின் நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களும் இதுகுறித்துப் பேசுவதை தவிர்க்கின்றனர்.

மொத்தத்தில், உணர்வுப்பூர்வமான, சவால்கள் நிறைந்த பால்ய பருவத்தை போராடிக் கடந்த முகேன், இப்போது சாதனைகளை நோக்கி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

அவர் உச்சம் தொடுவது நிச்சயம் என்பதே அவரது நலன் விரும்பிகளின் வாழ்த்தாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: