You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விலங்குகள்: 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கரடி இனம் அழிய மனிதர்கள் காரணமா?
- எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஐரோப்பாவில் முற்கால மனிதர்களின் வருகையும், குகைக் கரடிகளின் அழிவும் சம காலத்தில் நடைபெற்றுள்ளது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கரடியை வேட்டையாடிய மனிதர்கள், குகைளில் இருந்து அவற்றை விரட்டி, அந்த இனம் அழிந்துபோக வழிவகுத்த வகையில் திறந்தவெளியில் விட்டுவிட்டதை புதிய சான்றுகள் சுட்டுகின்றன.
பனிக் காலத்தின் கடைசி பகுதியின் தொடக்கம், உணவு ஆதாரங்கள் குறைதல் போன்ற பிற காரணங்களாலும் இந்த உயிரினங்களின் வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது.
24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், குகைக் கரடி இனம் படிப்படியாக அழிந்தது.
"40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, குகைக் கரடியின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்து வந்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். இது ஐரோப்பாவில் நவீன மனிதர்கள் தோன்றி காலமாகும்," என்று இந்த ஆய்வை வழிநடத்திய சூரிச் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விரினா ஷுனேமன் கூறியுள்ளார்.
குகைக் கரடி இனம் அழிந்து போவதற்கு மனிதர்கள் முக்கிய பங்காற்றி இருக்கலாம் என்பதற்கு இது மிகவும் தெளிவான சான்றாக இருக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குகைக் கரடி என்பது என்ன?
குகைக் கரடி என்பது ஆசியா மற்றும் ஐரோப்பாவில் வாழ்ந்த கரடி வகைகளில் ஒன்றாகும். நவீன கால பிரவுண் கரடியும், முற்கால குகை கரடியும் பொதுவான மூதாதையரை கொண்டிருந்தன.
குகைக் கரடி மாமிசம் சாப்பிடாமல் காய்கறிகளை உண்டு வாழ்ந்தது. இந்த உயிரினத்தின் புதைபடிவங்கள் குகைகளில் பொதுவாக கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் தூக்கத்திற்கு மட்டுமல்லாமல் அதிக நேரம் இந்த விலங்குகள் குகைகளில் கழித்துள்ளது தெரியவருகிறது.
இந்த ஆய்வில் கண்டறியப்பட்டவை?
சுவிட்சர்லாந்து, போலந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி இத்தாலி மற்றும் செர்பியாவில் இருந்து சேகரிக்கப்பட்ட குகைக் கரடிகளின் எலும்புகளில் இருந்து எடுக்கப்பட்ட சைட்டோபிளாஸில் ஒரு கோள அல்லது நீளமான உறுப்பின் (மைட்டோகாண்ட்ரியல்) டி.என்.ஏ-வை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
இதன் காரணமாக, குகை கரடிகள் எங்கு வாழ்ந்தன, பூமியில் அதிக பாலூட்டிகள் வாழ்ந்தபோது அவற்றின் பன்முகத்தன்மை பற்றிய வரைவை அவர்களால் உருவாக்க முடிந்தது.
முன்னர் நினைத்ததைவிட அதிக எண்ணிக்கையில் குகைக் கரடிகள் காணப்பட்டதாகவும், இரண்டு பனிக் காலங்களையும், பல குளிரான நிகழ்வுகளையும் சகித்து வாழ்ந்த இவற்றின் எண்ணிக்கை, சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓரளவு நிலையான இருந்ததாகவும் தோன்றுகிறது.
குகைக் கரடிகள் அழிவதற்கு மனித பாதிப்புகள் முக்கிய பங்காற்றின என்கிற கருத்துக்கு இந்த ஆய்வு முடிவுகள் வலுசேர்க்கின்றன.
மனித தலையீடு, சுற்றுச்சூழல் மாற்றங்கள் அல்லது இவை இரண்டு கலந்த காரணங்கள் உள்பட இது பற்றிய விளக்கங்களோடு, குகைக் கரடியின் அழிவு என்பது பெரும் விவாதத்திற்குரிய விடயமாகும்.
‘சையின்டிஃபிக் ரிப்போட்‘ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட சமீபத்திய இந்த ஆய்வு இது பற்றிய ஆழமான பார்வையை அளிக்கிறது.
ஆனால், இந்த ஆய்வில் உள்ளபடி இதுதான் அந்தக் கரடி இனத்தின் அழிவுக்கு இறுதியான காரணம் என்பது மாறக்கூடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்