You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டைனோசர் எலும்பு: 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக இருக்கலாம் என தகவல்
பிரான்ஸின் தென் மேற்கு பகுதியில் உள்ள விஞ்ஞானிகள் அகழ்வாராய்ச்சி பகுதி ஒன்றில் மிகப்பெரிய டைனோசர் எலும்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
டைனோசரின் தொடை பகுதி எலும்பாக இருக்கும் என கருதப்படும் அந்த எலும்பு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக படிமமாக மண்ணில் புதைந்து கிடந்துள்ளது.
சுமார் இரண்டு மீட்டர் (6.6 அடி) இருக்கும் அந்த எலும்பு தாவரங்களை உண்ணும் நீண்ட கழுத்துடைய டைனோசர் எலும்பாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டைனோசர் காலத்தின் பிந்தைய பகுதியில் இந்த தாவரங்களை உண்ணும் டைனோசர்கள் அதிகமாக காணப்பட்டன. அவை நிலத்தில் வாழும் மிருகங்களில் மிகப்பெரிய மிருகமாகவும் கருதப்பட்டது.
படிம ஆராய்ச்சி நிபுணர்கள், இந்த எலும்புகள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த விதம் ஆச்சரியமளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
"இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு" என பாரிஸில் உள்ள தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை சேர்ந்த படிம ஆய்வாளர் ரோனன் அலைன் தெரிவித்துள்ளார்
இம்மாதிரியான டைனசர்கள் 140 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்த அலைன், இந்த டைனோசர்களின் எடை 40 டன்னிலிருந்து 50 டன் வரை இருக்கலாம் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இதேபோன்றதொரு தாவர வகை டைனோசரின் எலும்பு இதே இடத்தில் 2010ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 2.2 மீட்டர் நீளம் இருந்த அந்த எலும்பின் எடை 500 கிலோ என்று கூறப்பட்டது.
தற்போது எடுக்கப்பட்ட எலும்பு முழுமையாக மண்ணில் இருந்து பிரிக்கப்பட்ட பிறகு 500 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால் அதனை மண்ணில் இருந்து பிரித்து எடுக்க குறைந்தது ஒரு வாரம் ஆகலாம்; அதற்கு க்ரேனின் உதவியும் தேவைப்படலாம்.
காங்நாக் என்ற இந்த நகரில் திராட்சை தோட்டங்களில் புதைந்துள்ள அந்த தளத்தில் 70 விஞ்ஞானிகள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
2010ஆம் ஆண்டிலிருந்து சுமார் 40 வகை இனங்களின் 7,500க்கும் மேற்பட்ட படிமங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனால் அந்த இடம் ஐரோப்பாவின் முக்கிய இடமாக கருதப்படுகிறது.
ட்ராகன்கள் போன்ற டைனோசர்களின் எலும்புகள் மற்றும் ஆஸ்ட்ரிச் டைனோசர்களின் எலும்பு ஆகியவற்றையும் இதற்கு முன்னர் கண்டறிந்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்