You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்பின் எல்லைச்சுவர் திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி மற்றும் பிற செய்திகள்
அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ இடையேயான எல்லைப்பகுதியில் சுவர் அமைக்கும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பின் கனவுத் திட்டத்தின் ஒரு பகுதிக்கு அனுமதியளித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம், அந்நாட்டின் தெற்கு எல்லையில் சுவர் அமைப்பதற்கு தேவையான இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்களை பென்டகனின் நிதியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
முன்னதாக, எல்லைச்சுவர் திட்டத்திற்கு பென்டகனின் நிதியை பயன்படுத்துவதற்கு கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றம் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது இந்த எல்லைச்சுவர் திட்டத்தை முன்னிறுத்தியே டிரம்ப் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்திற்கு, அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி தொடக்கத்திலிருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம், அந்நாட்டின் கலிஃபோர்னியா, அரிசோனா, நியூ மெக்ஸிகோ ஆகிய மாகாணங்களை ஒட்டிய எல்லைப்பகுதியில் சுவர் கட்டப்படும்.
இது 'மிகப் பெரிய வெற்றி' என்று தெரிவித்து டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
38 ரன்களுக்குள் அயர்லாந்தை சுருட்டி வீசிய உலகக்கோப்பை 'சாம்பியன்'
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸில், 38 ரன்களில் அயர்லாந்தை சுருட்டிய இங்கிலாந்து, 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியை விளையாடும் அயர்லாந்து இரண்டாவது இன்னிங்சில் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது.
ஆனால், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட்டின் சிறந்த பந்துவீச்சால் அயர்லாந்தின் கனவு தகர்ந்தது. வெறும் 38 ரன்களில் அந்த அணியின் வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்தனர்.
சட்டத்தில் திருத்தம் கோரும் இலங்கை முஸ்லிம் பெண்கள்
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் எல்லா முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும், நீதியையும் உறுதிப்படுத்தக்கூடிய வகையில் திருத்தப்பட வேண்டும் என முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுக்கின்றனர்.
முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய முஸ்லிம் பெண்கள் இந்த கோரிக்கையை விடுத்திருந்தனர்.
விரிவாக படிக்க:முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் கோரும் இலங்கை முஸ்லிம் பெண்கள்
ஏ.டி.எம்மில் நூதன கொள்ளை - ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி?
"எனது வங்கிக்கணக்கிலிருந்து எனக்கே தெரியாமல் யாரோ பணம் எடுத்துவிட்டார்கள்" என்று அதிர்ச்சியடைபவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 'ஸ்கிம்மிங் டிவைஸ்' எனும் கருவியை பயன்படுத்தியே இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் பெரும்பாலும் அரங்கேற்றப்படுகின்றன.
ஏ.டி.எம். கொள்ளைகளுக்கு அடிப்படையாக உள்ள கார்டு ஸ்கிம்மிங் டிவைஸ் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி? இழந்த பணத்தை திரும்ப பெற முடியுமா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இந்த கட்டுரை.
பாகிஸ்தான் ஜெனரல் முஷரஃபின் சதித்திட்டத்தை ஒட்டு கேட்டு முறியடித்த இந்திய உளவு அமைப்பு
1999 மே 26ஆம் தேதியன்று இரவு 9.30 மணியளவில் இந்தியாவின் ராணுவத் தலைவர் ஜெனரல் வேத் பிரகாஷ் மாலிக்கின் சர்வதேச தொடர்பு தொலைபேசியின் மணி அடித்தது. மறுமுனையில், இந்திய உளவுத்துறையான ரா-வின் செயலாளர் அரவிந்த் தவே இருந்தார். பாகிஸ்தானின் இரண்டு உயர் தளபதிகளிடையிலான உரையாடலை தனது துறையினர் பதிவு செய்துள்ளதை அவர் ஜெனரல் மாலிக்கிடம் தெரிவித்தார்.
அவர்களில் ஒருவர் பெய்ஜிங்கில் இருக்கும் தலைவருடன் பேசினார். அதில் உள்ளத் தகவல்கள் முக்கியமானதாக இருக்கும் என்று கருதியதால், அது குறித்த தகவலை ஜெனரல் மாலிக்கிடம் தெரிவித்தார்.
விரிவாக படிக்க:பாகிஸ்தான் ஜெனரல் முஷரஃபின் சதித்திட்டத்தை ஒட்டு கேட்டு முறியடித்த இந்திய உளவு அமைப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்