ஏ.டி.எம்மில் நூதன கொள்ளை - ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி? #TechBlog

    • எழுதியவர், சாய்ராம் ஜெயராமன்
    • பதவி, பிபிசி தமிழ்

"எனது வங்கிக்கணக்கிலிருந்து எனக்கே தெரியாமல் யாரோ பணம் எடுத்துவிட்டார்கள்" என்று அதிர்ச்சியடைபவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 'ஸ்கிம்மிங் டிவைஸ்' எனும் கருவியை பயன்படுத்தியே இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் பெரும்பாலும் அரங்கேற்றப்படுகின்றன.

அதாவது, இந்தியா முழுவதும் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை (ஏ.டி.எம்) மையமாக கொண்டு நடத்தப்பட்ட நூதன கொள்ளைகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்த புகார்களின் எண்ணிக்கை 2017-18 நிதியாண்டில் 911ஆக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் அது 980ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2018-2019 நிதியாண்டில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை மையமாக கொண்டு நடந்த நூதன கொள்ளைகளின் மூலம் சுமார் 21.4 கோடி ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், கடந்த நிதியாண்டை பொறுத்தவரை, 233 புகார்களுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 179 புகார்களுடன் டெல்லி இரண்டாமிடத்திலும், 147 புகார்களுடன் தமிழ்நாடு மூன்றாமிடத்திலும் உள்ளது. கடந்தாண்டு தமிழ்நாட்டில் மட்டும் 3.6 கோடி ரூபாய் தானியங்கி பணம் எடுக்கும் மையங்களை முதலாக கொண்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி மேலும் கூறுகிறது.

இந்நிலையில், ஏ.டி.எம். கொள்ளைகளுக்கு அடிப்படையாக உள்ள கார்டு ஸ்கிம்மிங் டிவைஸ் என்றால் என்ன? அது எப்படி செயல்படுகிறது? ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி? இழந்த பணத்தை திரும்ப பெற முடியுமா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இந்த கட்டுரை.

ஸ்கிம்மிங் கருவி என்றால் என்ன?

தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் அட்டை (டெபிட் கார்டு) அல்லது கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) சொருகும் இடத்தில் கூடுதலாக பொருத்தப்பட்டு, அதன் மூலம் குறிப்பிட்ட அட்டையின் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை ஒருவருக்கு தெரியாமலே பதிவு செய்துக்கொள்ளும் கருவியே ஸ்கிம்மிங் கருவியாகும்.

ஸ்கிம்மிங் கருவியின் மூலம் வங்கி அட்டையின் எண், தனிப்பட்ட குறியீட்டு எண் (சிவிவி) போன்றவை சேகரிக்கப்படும் நிலையில், ஒருவரது கடவுச்சொல் பணம் எடுக்கும் இயந்திரத்தின் தட்டச்சு செய்யும் இடத்தில் மிகச் சிறிய கேமரா பொருத்தப்பட்டு அதன் மூலம் கண்டுபிடிக்கப்படும். மிகவும் அரிதான நேரங்களில், பணம் எடுக்கும் இயந்திரத்தின் கடவுச்சொல் பதிவிடும் இடத்தில் அதே வடிவமைப்பை கொண்ட உறை மேலே விரிக்கப்பட்டு அதன் மூலம் கடவுச்சொல் திருடப்படும்.

ஸ்கிம்மிங் கருவியை கண்டுபிடிப்பது எப்படி?

தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தின் வங்கி அட்டையை சொருகும் இடத்தில்தான் ஸ்கிம்மிங் கருவி பொருத்தப்படுகிறது. அதாவது, நீங்கள் வழக்கமாக வங்கி அட்டை சொருகும் இடம் புதிதாக நீண்டு வளர்ந்ததை போன்றோ அல்லது அசாதாரணமாகவோ காட்சியளிக்கும்.

அப்படி உங்களுக்கு சந்தேகம் இருக்கும் அசாதாரணமான பகுதியை சிறிதளவு அசைத்து பார்த்தாலே அது இணைக்கப்பட்ட இடத்திலிருந்து பிரிய ஆரம்பிக்கும்.

அதே போன்று, நீங்கள் கடவுச்சொல் பதிவு செய்யும் இடத்திற்கு மேலே ஏதாவது புள்ளி அளவில் கேமரா தென்பட்டாலும் எச்சரிக்கையாக இருங்கள்.

சில சமயங்களில், ஏ.டி.எம் அட்டையின் கடவுச்சொல் தட்டச்சு செய்யும் பலகையின் மேலே அதே போன்ற மற்றொரு உறை ஒட்டப்பட்டு உங்களுக்கு தெரியாமலே கடவுச்சொல் பதிவுசெய்யப்படும். எனவே, நீங்கள் கடவுச்சொல் தட்டச்சு செய்யுமிடத்தில் வழக்கத்துக்கு மாறாக ஏதாவது தென்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள்.

திருடிய தகவலை வைத்து என்ன செய்வார்கள்?

பெரும்பாலான வேளைகளில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களில் ஸ்கிம்மிங் கருவி மற்றும் கேமராவை வைக்கும் திருடர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் கழித்து வந்து அவற்றை எடுத்து, அதில் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஒப்பீடு செய்து அதேபோன்றதொரு போலியான கார்டை தயார் செய்கின்றனர்.

பின்பு, அவற்றை பயன்படுத்தி வேறுபட்ட தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களிலிருந்து வங்கி கணக்கின் உரிமையாளருக்கு தெரியாமலே பணம் எடுத்து துடைத்துவிடுக்கின்றனர். இந்த முறையில் பணம் எடுப்பவர்களை கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தி காவல்துறையினர் பிடித்துவிடுகின்றனர்.

இந்நிலையில், காவல்துறையினரிடம் சிக்குவதை தவிர்க்கும் வகையில், ஓர் இயந்திரத்தில் பொருத்தப்படும் ஸ்கிம்மிங் கருவியின் விவரங்களை உடனுக்குடன் இணையதளம் மூலம் தெரிந்துகொண்டு அதை பயன்படுத்தி இணையம் மூலமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

பணம் போனால் திரும்ப கிடைக்குமா?

பொதுவான காந்தத்தை அடிப்படையாக கொண்ட வங்கி அட்டைகளை கொண்டுள்ள வாடிக்கையாளர்களே இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்குவதாக வங்கிகள் தெரிவிக்கின்றன. இந்த பிரச்சனைகளை களையும் பொருட்டே, மேம்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இஎம்வி (EMV) எனும் சிப் ரக கார்டுகளை வைத்திருப்பதை இந்திய ரிசர்வ் வங்கி இந்தாண்டு தொடக்கம் முதல் கட்டாயப்படுத்தியது.

அதாவது, இந்த புதிய இஎம்வி ரக அட்டையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப்பரிமாற்றத்துக்கும் தனியே கிரிப்டோகிராம் (Cryptogram) எனும் மறையாக்கம் (Encryption) செய்யப்பட்ட எண்கள் ஒதுக்கப்படும். எனவே, இந்த ரக கார்டை ஸ்கிம்மிங் செய்து புதிய கார்டை உருவாக்க முடியாது என்று வங்கிகள் உறுதியளிக்கின்றன.

இருந்தபோதிலும், இந்தியாவிலுள்ள சுமார் இரண்டு லட்சம் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களில் பாதிகூட இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்படவில்லை என்று கூறுகிறார் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான வெங்கடாச்சலம்.

"நாடுமுழுவதும் சரியான கட்டமைப்பு, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாவலர்கள், மேம்பட்ட தொழில்நுட்பம் போன்ற எதுவுமே இல்லாத பணம் எடுக்கும் மையங்கள் பெருமளவில் இருக்கின்றன. அவற்றின் தரத்தை உயர்த்தி, பிரச்சனைகளை களையாமலே புதிய தொழில்நுட்பங்களை கொண்ட வங்கி அட்டைகளை மட்டும் பயன்படுத்துவதில் பயனில்லை" என்று அவர் கூறுகிறார்.

நூதனமான வழிகளின் மூலம் பணத்தை இழந்தவர்களுக்கு அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி பணத்தை திரும்ப கொடுக்குமா? என்று அவரிடம் கேட்டபோது, "கண்டிப்பாக கொடுக்காது. பணத்தை இழந்தவர்கள் அதுகுறித்த விவரங்களை வங்கியிடம் தெரிவித்து தக்க பாதுகாப்பு நடவடிக்கை (வங்கி அட்டை அல்லது இணையதள கணக்கின் பயன்பாட்டை நிறுத்துவது) எடுத்துவிட்டு, பிறகு காவல்துறையிடம்தான் முறைப்படி புகார் அளிக்க வேண்டும். இதுவே பணம் எடுக்கும் இயந்திரம் மற்றும் பிற வங்கி சார்ந்த காரணங்களினால் பறிபோன பணம் தொடர்பாக சரியான ஆதாரம் கொடுக்கும் பட்சத்தில் வங்கிகள் பணத்தை திரும்ப வழங்கிவிடும்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :