You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கண்ணன் கோபிநாதன்: உ.பி விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி
- எழுதியவர், பிரதீப் குமார்
- பதவி, பிபிசி இந்தி
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற இருந்த கூட்டத்தில் உரையாற்ற சென்ற தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கண்ணன் கோபிநாதன் அந்நகர விமான நிலையத்திலேயே தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கண்ணன், "அலகாபாத் விமான நிலையத்தில் இருந்து நான் வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், டெல்லி விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டேன். பேச்சு சுதந்திரம் குறித்து யோகித் ஆதித்யநாத் மிகவும் பயப்படுகிறார்" என்று கருத்துத் தெரிவித்துள்ள அவர், உத்தரப்பிரதேச அரசு தனக்கு டெல்லிக்கு இலவச விமான பயணத்தை அளிப்பதாகவும், தான் விரைவில் மீண்டும் உத்தரப்பிரதேசம் வரவுள்ளதாகவும் அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அலகாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் சத்யார்த் அனிருத் பங்கஜ், "கண்ணன் கோபிநாதனிடம் அவரது வருகை அலகாபாத் நகரத்தின் சட்டம், ஒழுங்கிற்கு களங்கம் ஏற்படுத்தக் கூடும் என்று விளக்கினோம். முன்னாள் அரசு அதிகாரியான அவர் நாங்கள் கூறியதை புரிந்துகொண்டு திரும்பிவிட்டார்," என்று கூறினார்.
கண்ணன் கோபிநாதன் பேச இருந்த கூட்டத்தை நடத்தியது யார்? அதனால் உண்மையிலேயே சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டிருக்குமா?
இந்திய அரசால் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு உள்ளிட்டவற்றை எதிர்த்து, "குடியுரிமை, அரசமைப்பு, ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்" என்ற தலைப்பில் அலகாபாத்தில் நடைபெற இருந்த இந்த கூட்டத்துக்கு அகில இந்திய மக்கள் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிலையில், அலகாபாத் விமான நிலையத்தில் கண்ணன் கோபிநாதனுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அவர் டெல்லி விமானத்தில் திரும்பி அனுப்பப்பட்ட சம்பவம் குறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதன் மூலம் தெரிய வந்ததாக விமான நிலையத்தின் வெளியே அவரது வருகைக்காக காத்திருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான கமல் உஸ்ரி, "இந்த கூட்டத்துக்காக நாங்கள் பல நாட்களாக திட்டமிட்டு வந்தோம், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு முன்னதாகவே தெரிவித்து இருந்தோம். அலகாபாத் விமான நிலையம் வரை வந்த கோபிநாத்தால், கூட்டத்தில் பேச முடியாமல் போய்விட்டது," என்று கூறினார்.
இந்த கூட்டம் நடைபெற்றால் மக்களிடையே பதற்ற நிலை ஏற்படக்கூடும் என்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கையை எடுத்ததாக காவல்துறையினர் தெரிவிக்கும் நிலையில், மூடப்பட்ட அறையில் சுமார் 150 பேர் பங்கேற்பதாக இருந்த இந்த கூட்டத்தால் அப்படி எவ்வித பிரச்சனையும் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், நரேந்திர மோதியின் போட்டியிட்டு வெற்றிபெற்ற வாரணாசி தொகுதிக்கு நாளை மறுநாள் தான் செல்வதாகவும், ஜனநாயகம் குறித்து மோதி கூறிய கருத்தை யோகி ஆதித்யநாத் காது கொடுத்து கேட்கிறாரா, இன்னமும் இந்தியாவில்தான் உத்தரப்பிரதேசம் உள்ளதா என்றும் அவர் தனது மற்றொரு ட்விட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
யார் இந்த கண்ணன் கோபிநாதன்?
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தபோது, அரசின் முடிவுகளை செயல்படுத்துவதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்பட ஏராளமான அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, அரசின் முடிவால் அதிர்ந்து போய், தனது பதவியைத் தூக்கியெறிந்தவர்தான் தமிழகத்தை சேர்ந்த கண்ணன் கோபிநாதன்.
"நான் வெளிப்படையாகப் பேசுவதை தடுக்கும் இடத்தில் இருந்து வெளியேற விரும்புகிறேன். காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசவேண்டும் என எனக்குள் ஏதோ ஓர் அழுத்தம் இருக்கிறது. ஆனால் என் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாமல் என் அரசு வேலை என்னைத் தடுக்கிறது" என்று தனது பதவியை ராஜிநாமா செய்வதற்கு முன்பு பிபிசியிடம் பேசிய கண்ணன் கூறியிருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: