You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சசிகாந்த் செந்தில் ராஜிநாமா: "ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன”
கர்நாடக மாநிலத்திலுள்ள தக்ஷின கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையராக பணியாற்றி வந்த, தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஐஏஸ் அதிகாரி எஸ்.சசிகாந்த் செந்தில், தனது பதவியை இன்று(வெள்ளிக்கிழமை) ராஜிநாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு குறிப்பில், "இந்த தருணத்தில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த ராஜிநாமா முடிவு நான் சுயமாக எடுத்தது. நான் தற்போது வகித்து வரும் துணை ஆணையர் பதவிக்கு தொடர்பில் நான் பதவியை ராஜிநாமா செய்யவில்லை," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பிலிருந்து பாதியில் விலகியதற்காக தக்ஷின கன்னடா மக்களிடம் மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்ட சசிகாந்த், அம்மாவட்ட மக்கள் மிகவும் அன்புடன், கனிவுடனும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பு சமரசம் செய்யப்பட்டுள்ளதால், மேற்கொண்டு இந்த பதவியில் தான் தொடர்வது நெறியற்றது என்று குறிப்பிட்டுள்ள சசிகாந்த், இனி வரக்கூடிய காலங்களில் நாட்டின் அடிப்படை கட்டமைப்புகள் மிகக் கடினமான ஒரு சூழலை எதிர்கொள்ளும் என்பதை தான் தீர்க்கமாக நம்புவதாகவும், அதனால் ஐஏஎஸ் பணியைவிட்டு விலகி வெளியிலிருந்து மக்களின் நலனுக்காக உழைக்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
யார் இந்த சசிகாந்த் செந்தில்?
40 வயதாகும் சசிகாந்த் செந்தில், தமிழ்நாட்டின் திருச்சியை பூர்விகமாக கொண்டவர். 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் தக்ஷின கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையராக பதவியேற்று கொண்டார். அவர் திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினியரிங் கல்லூரியில் படித்தவர். 2009ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான அவர், 2009லிருந்து 2012ஆம் ஆண்டு வரை பெல்லாரியில் துணை ஆணையராக இருந்தார்.
கண்ணனை தொடர்ந்து சசிகாந்த்
கடந்த ஆகஸ்ட் மாதம், தாதரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
ராஜிநாமா முடிவு குறித்து பிபிசியிடம் பேசிய அவர், ''காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசவேண்டும் என எனக்குள் ஏதோ ஓர் அழுத்தம் இருக்கிறது. ஆனால் என் கருத்துகளை வெளிப்படுத்த முடியாமல் என் அரசு வேலை என்னைத் தடுக்கிறது. எளிமையான மக்களின் உரிமைகளுக்காக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் ஐஏஎஸ் பணியில் சேர்ந்தேன்.
ஆனால், நாட்டில் ஒரு பகுதியில் வாழும் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல், என் வேலையை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அது சரியானது அல்ல என என் மனம் சொல்கிறது,'' என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்