You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹிந்தி திவஸ்: "என் வரிப்பணத்தை நான் பேசாத இந்தி மொழிக்கு ஏன் செலவு செய்கிறீர்கள்?” - இணையத்தில் வைரலாகும் ஹாஷ்டேக்
ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி மொழியை மேம்படுத்தும் வகையில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தி திவாஸ் என்று அழைக்கப்படும் அந்நாளுக்கு சமூக ஊடகமான ட்விட்டரில் #WeDontWantHindiDivas என்ற ஹாஷ்டேக் மூலம் தற்போதே கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சபையால் இந்திய நாட்டின் அலுவல் மொழியாக இந்தி மொழி அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் இந்தி இலக்கியத்தில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு மத்திய அரசால் விருது வழங்கி கெளரவித்து வந்தது.
ஆனால், 2014ஆம் ஆண்டு இந்தியாவில் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்தி மொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
மேலும், 2015ஆம் ஆண்டில் மத்திய அரசு மத்திய அரசு சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி பெயர்களில் வழங்கி வந்த பெயர்களும் மாற்றப்பட்டன. ராஜ்பாஷா கிர்தி புராஸ்கார் விருது, ராஜ்பாஷா கெளரவ் புராஸ்கர் விருது என்ற புதிய பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டன.
இன்னும் இந்தி திவாஸ் நாளுக்கு 8 நாட்கள் இருக்கும் நிலையில், எங்களுக்கு இந்தி தினம் வேண்டாம் என்றும், இந்திய மொழிகளின் தினம்தான் வேண்டும் என்றும் தென்னிந்தியர்கள் பலர் ட்விட்டரில் தங்கள் கருத்துகளை பதிந்து வருகின்றனர்.
இப்பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபாகரன் என்ற ட்விட்டர் பயனர்,"இந்தி பேசும் மாநிலங்களால்தான் இன்று மக்கள் தொகை பன்மடங்கு பெருகி இந்தியாவின் வளர்ச்சியை பின்நோக்கி தள்ளியுள்ளது. பிற மாநிலங்களுக்கு இந்தி பேசும் மாநிலங்கள் பெரும் சுமையாகவே இருக்கின்றன," என்று பதிந்துள்ளார்.
"உங்களுடைய இந்தி தினத்தை இந்தி பேசும் மாநிலங்களில் உங்களுடனேனே வைத்து கொள்ளுங்கள். எங்களுக்கென்று தனி அடையாளம் இருக்கிறது. அதைத்தான் நாங்கள் பெருமையாக கருதுகிறோம். உங்களுடைய இந்துஸ்தான் தத்துவார்த்தத்துக்குள் எங்களை திணிக்க வேண்டாம்," என்று கேட்டு கொண்டுள்ளார் பாஸ்கர் முனியப்பா.
"நாங்கள் செலுத்தும் வரியை கொண்டு நாங்கள் பேசாத ஒரு மொழியை கொண்டாட பயன்படுத்தும் நடைமுறை உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறது," என்கிறார் தல்சானியா பரத்.
இந்தி தினத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் சிலர் அதற்கு ஆதரவான கருத்துகளையும் பதிந்து வருகின்றனர். குறிப்பாக தென்னிந்தியர்களின் கருத்துகளுக்கு இந்தி பேசுபவர்கள் ட்விட்டரில் பதிலும் தந்து வருகின்றனர்.
"இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை எங்கு குறைகிறதோ அங்கு இந்துகளின் மதமாற்றமும், நாட்டில் துரோகிகளும் அதிகரிக்கிறார்கள்," என்று கிர்த்தி பாகோரியா தெரிவித்துள்ளார்.
Iran oil Tanker - இந்திய கேப்டனுக்கு மில்லியன் டாலர் பணத்தாசை காட்டிய அமெரிக்கா
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்