You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிக்காசோ ஓவியத்தால் சிறை தண்டனை பெற்ற 83 வயது கோடீஸ்வரர்
ஏலத்தில் விற்பதற்காக பிக்காசோ ஓவியம் ஒன்றை கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்பெயின் கோடீஸ்வரர் ஒருவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் சட்டப்படி 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் தேசிய சொத்தாக கருதப்படும்.
எனவே இந்த பொருட்களை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லும்போது, அதற்கான அனுமதியை, அவற்றின் உரிமையாளர்கள் அரசிடம் பெற வேண்டும்.
அதன்படி 1906-ஆம் ஆண்டு பிக்காசோவால் வரையப்பட்ட "த ஹெட் ஆஃப் ய யங் உமன்" (The Head of a Young Woman) என்ற ஓவியம் தேசிய சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறை தண்டனை பெற்றுள்ள 83 வயதாகும் செல்வந்தர் ஜேமி போடின், இந்த ஓவியத்தை 1977-ஆம் ஆண்டு வாங்கினார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் ஜேமிக்கு சொந்தமான உல்லாசப் படகிலிருந்து இந்த ஓவியம் கைப்பற்றப்பட்டது. லண்டனில் நடைபெற இருந்த ஏலத்தில், இந்த ஓவியத்தை விற்க அவர் முயற்சி செய்தார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து கலாசார பொருட்களை கடத்துதல் மற்றும் தேசிய சொத்துகள் பட்டியலில் இருந்த ஓவியத்தை அனுமதியில்லாமல் வேறு நாட்டுக்கு கொண்டு சென்றது ஆகிய பிரிவுகளின் கீழ் ஜேமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜேமி போடின் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதிகள், அவருக்கு 18 மாத சிறை தண்டனை மற்றும் 58 மில்லியன் அமேரிக்க டாலர்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.
ஜேமியின் வயது மற்றும் குற்றத்தின் தீவிரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, அவருக்கு சிறை தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிகிறது.
தற்போது அரசுடமையாக்கப்பட்டுள்ள பிக்காசோவின் ஓவியம், மாட்ரிட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 29 மில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: