தமிழக அரசியல்: 'திமுக - காங்கிரஸ் இடையிலான ஊடல் முடிவுக்கு வந்துவிட்டது' - கே.எஸ்.அழகிரி

கடந்த இரண்டு வாரங்களாக திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவாலயத்தில் சந்தித்தார்.

அறிவாலயத்தில் நடந்த இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் அழகிரி, இருகட்சிகளுக்கு இடையிலான ஊடல் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதனிடையே திமுக-காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி குறித்த கருத்துகளை பொது வெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்க்கவேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும், பிளவும் இல்லை என்றும், பிரச்சனைகள் இருந்தால், அவற்றை தலைவர்கள் பேசி தீர்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தார். ''இரு கட்சிகளுக்கும் இருந்த ஊடல் முடிவுக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். அதனை விளக்கி பேசினோம். எங்கள் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை,'' என்றார் அழகிரி.

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்டிருத்த இடங்கள் குறித்து அதிருப்தி தெரிவிக்கும் அறிக்கையை அழகிரி முதலில் வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இருகட்சிகளில் உள்ளவர்கள் ஊடகங்களிடம் பேசும்போது, கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதை உறுதிசெய்யும் வகையில் பேசிவந்தனர். ஆனால் அந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சந்திப்பு அமைந்திருக்கிறது.

ஸ்டாலினுடன் நடந்த சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் அழகிரியுடன், காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி, முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, செயல் தலைவர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் இருந்தனர். காங்கிரஸ் தலைவர்களை, திமுக மூத்த தலைவர்கள் வெளியில் வந்து அழைத்துச் சென்றனர்.

ஸ்டாலினுடன் நடந்த சந்திப்பில் எவ்விதமான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது என கேட்டபோது, ''தர்பார் படத்தை பற்றி பேசினோம்,'' என வேடிக்கையாகப் பதில் அளித்தார் அழகிரி. பின்னர் ரஜினி முரசொலி குறித்து தெரிவித்த கருத்துகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, ''ரஜினி தானாக பேசியிருப்பாரா எனத் தெரியவில்லை. ஒன்று அவர் துக்ளக் படித்தால், அறிவாளி என்று சொல்லியதோடு நிறுத்தியிருக்கலாம். அல்லது முரசொலி படிப்பவர் திமுககாரர் என சொல்லியிருக்கலாம். இரண்டையும் தொடர்புபடுத்தி பேசியது சிக்கலாகிவிட்டது. படத்தில் பேசும்போது, அவருக்கு வசனம் எழுதி தரப்பட்டிருக்கும். அவர் தானாக பேசியதால், தவறுதலாகப் பேசிவிட்டார் என நினைக்கிறேன்'' என்றார் அழகிரி.

திமுக-காங்கிரஸ் இடையிலான விரிசல் தொடர்பாக அதிமுக தரப்பு விமர்சனம் செய்துள்ளதை குறித்து கேட்டபோது,'' திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சனை வந்தால் பேசித்தீர்த்துக்கொள்வோம். இதுபோன்ற நிகழ்வுகள் சாதாரணமானவை. ஆனால் அதிமுக-பாஜக கூட்டணி வேறு வகையானது. பாஜக கொண்டுவரும் திட்டங்களுக்கு எந்தவிதத்திலும் தனது எதிர்ப்பை அதிமுக பதிவு செய்வதில்லை. நீட் பிரச்சனை தொடங்கி, குடியுரிமை சட்டம் வரை எந்த பிரச்சனையிலும் அவர்கள் கருத்து சொல்வதில்லை. எல்லா விவகாரங்களிலும் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கும் கட்சியாக அதிமுக உள்ளது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளோம். எங்கள் கூட்டணி உறுதியான கூட்டணி. இந்திய நாட்டின் மனசாட்சியாக திகழும் கூட்டணி,'' என்றார் அழகிரி.

கூட்டணி பற்றி பொதுவெளியில் கருத்து சொல்வதை தவிர்க்க ஸ்டாலின் வேண்டுகோள்

திமுக-காங்கிரஸ் இடையிலான சந்திப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் இருகட்சிகளும் சுமூகமாகப் பேசித் தீர்த்திருக்க வேண்டிய தேர்தல் இடப் பங்கீடு குறித்து, அறிக்கை மூலம் காங்கிரஸ் தலைவர் அழகிரி பொது வெளிக்குக் கொண்டு சென்றதை சுட்டிக்காட்டி, இனி இருதரப்பும் பொது வெளியில் கூட்டணி தொடர்பாக பேசுவதை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொது வெளியில் பேசிய கருத்துகள் இரு தரப்பிலும் விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி வகுத்துள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ள ஸ்டாலின், ''கூட்டணி தொடர்பாக ஏதோ ஒரு சில இடங்களில் இருதரப்பிற்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன் வைத்து இரு தரப்புமே இந்த விவாதத்தை மேலும் பொதுவெளியில் நடத்திக் கொண்டிருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என்று ஏங்கித் தவிக்கும் "குள்ள நரி சக்திகளுக்கும்" "சில ஊடகங்களுக்கும்" மேலும் அசைபோடுவதற்கான செயலாக அமைவதை சிறிதும் விரும்பவில்லை,'' என்றும் விரும்பத்தகாத விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி இதுபோன்ற விவாதங்களை பொதுவெளியில் அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :