You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினிகாந்த் மீது குவியும் புகார்: பெரியார் குறித்த அவதூறான பேசியதாக குற்றச்சாட்டு
தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பொது வெளியில் தெரிவித்து, வதந்தி பரப்பி, பொது அமைதியை குலைக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திராவிடர் விடுதலை கழக உறுப்பினர்கள் சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடந்த ஜனவரி14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ல் சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்ற நிகழ்வு நடத்தப்பட்டது என பொய்யான தகவலை பேசியுள்ளார் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கூறுகிறார்கள்.
''தந்தை பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ரஜினிகாந்த் வதந்தியைப் பரப்புகிறார். அவர் குறிப்பிட்டது போன்ற ஒரு நிகழ்வு நடக்கவில்லை. அவர் பரப்பும் வதந்தி பொது அமைதியை குலைக்கும் நோக்கத்தில் இருப்பதால், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் செய்துள்ளோம்,'' என திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தெரிவித்தார்.
அதே போல கோவையிலும் ரஜினிகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் நேற்று திராவிடர் விடுதலை கழகத்தின் மாநகர தலைவர் நேருதாஸ் தலைமையில் அளிக்கப்பட்ட புகாரில், ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக திருப்பூரிலும் ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ரஜினி பேசியது என்ன?
கடந்த செவ்வாயன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.
"1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித்தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.
இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். 'பிளாக்'கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் மிகப் பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே நம்முடைய 'பப்ளிசிடி மேனேஜர்' என சோ அட்டையிலேயே வெளியிட்டார்" என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், "சின்ன விஷயங்களுக்கெல்லாம் வழக்கு போடும் தமிழக அரசு தங்களுடைய இயக்கத்தின் மூலவராக கருதப்படும் பெரியார் மீது செய்யப்பட்ட இழிவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாம் சில நாட்கள் கவனித்துப் பார்த்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரது திரைப்படம் திரையிடப்படும் அரங்குகளுக்கு முன்னால் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு அனைவரும் தயாராக இருப்போம்," என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
"உண்மை சம்பவத்தை ரஜினி திரித்து கூறியிருப்பதாகவும், பெரியாரின் வாகனம் நோக்கி ஜன சங்கத்தினர்தான் செருப்பு வீசியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த திராவிடர் கழகத்தினர் அதே செருப்பை எடுத்து ஜனசங்கத்தினரின் வாகனம் ஒன்றில் இருந்த ராமர் படத்தை அடித்தனர்,"என அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவரும், தி.கவின் பொதுச்செயலாளருமான கலி.பூங்குன்றன் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன்,"பெரியார் குறித்த தனது கருத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்," என கருத்து தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்