பெரியார் குறித்த கருத்து: சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்த்

துக்ளக் ஆண்டு விழாவில் பெரியாரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தமிழக பாரதிய ஜனதா கட்சி ரஜினிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டில் நடந்ததாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.

"1971ல் சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.

இதனால், அப்போதைய தி.மு.க. அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை, மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். 'பிளாக்'கில் விற்றது. இப்படித்தான் கலைஞர் மிகப் பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே நம்முடைய 'பப்ளிசிடி மேனேஜர்' என சோ அட்டையிலேயே வெளியிட்டார்" என்று குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியார் விடுதலை கழகத்தினர் பல இடங்களில் காவல்துறையினரிடம் மனு அளித்துள்ளனர்.

"தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பார்த்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரது திரைப்படம் திரையிடப்படும் அரங்குகளுக்கு முன்னால் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு அனைவரும் தயாராக இருப்போம்," என பெரியார் விடுதலை கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் "சின்ன விஷயங்களுக்கெல்லாம் வழக்கு போடும் தமிழக அரசு தங்களுடைய இயக்கத்தின் மூலவராக கருதப்படும் பெரியார் மீது செய்யப்பட்ட இழிவுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாம் சில நாட்கள் கவனித்துப் பார்த்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக அவரது திரைப்படம் திரையிடப்படும் அரங்குகளுக்கு முன்னால் மறியல் ஆர்ப்பாட்டம் போன்ற நடவடிக்கைகளுக்கு அனைவரும் தயாராக இருப்போம்," என திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

"உண்மை சம்பவத்தை ரஜினி திரித்து கூறியிருப்பதாகவும், பெரியாரின் வாகனம் நோக்கி ஜன சங்கத்தினர்தான் செருப்பு வீசியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த திராவிடர் கழகத்தினர் அதே செருப்பை எடுத்து ஜனசங்கத்தினரின் வாகனம் ஒன்றில் இருந்த ராமர் படத்தை அடித்தனர்,"என அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவரும், தி.கவின் பொதுச்செயலாளருமான கலி.பூங்குன்றன் பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன்,"பெரியார் குறித்த தனது கருத்துக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்," என கருத்து தெரிவித்துள்ளார்.

அதே போல் திராவிட இயக்க தமிழ் பேரவையின் நிறுவனர் சுப.வீரபாண்டியனின் பேஸ்புக் பதிவு ஒன்றில், "சோ சார் தவறாக பரப்பிவிட்ட இந்த செய்தியைப் பிடித்துக் கொண்டு, 1971 பிப்ரவரி முழுவதும் தமிழ்நாடெங்கும் திமுக விற்கு எதிரான பரப்புரைகள் நடைபெற்றன. பெரியார் படத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். பெரியார் உருவ பொம்மையை எரித்தனர். அப்போது தந்தை பெரியார், 12.02.1971 அன்று, "பொறுமையாய் இருங்கள் தோழர்களே" என்று ஒரு தலையங்கம் எழுதினார். ராமரைக் காப்பாற்றவோ, நம்மை எதிர்க்கவோ இல்லை, தேர்தலில் திமுக வந்துவிடாமல் தடுக்கவே அவர்கள் இப்படியெல்லாம் செய்கிறார்கள். "என் உருவத்தை மட்டுமல்ல, என்னையே செருப்பால் அடித்தாலும், லட்சியமோ, கவலையோ கொள்ளாதீர்கள். இது நமக்குப் புதிதல்ல" என்று எழுதினார்.

இனமானம் காக்க, கொள்கை பரப்ப இந்த இழிவுகளையெல்லாம் தாங்கித்தான் ஆகவேண்டும் என்று தம் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். அந்த மாமனிதரின் உயரம் 'சோ சாருக்கும்' ரஜினி சாருக்கும் புரியவே புரியாது`` என தெரிவித்துள்ளார்.

சுப.வீரபாண்டியனின் இந்த பதிவுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலளித்து தமிழக பாஜக, "பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்று ஒரு முரசொலி வாசகனாக இருந்தால் போதாதா? அண்ட புளுகை அவிழ்த்து விட்டு ஒரு விடுதலை வாசகன் என நிரூபிக்க வேண்டுமா? இந்துக்களுக்கு எதிராக ஆடிய அட்டூழியங்களை ஒத்துக்கொள்ள திராணி இல்லையா? அறிவாலயம் போட்ட வாய்ப்பூட்டா," என தெரிவித்துள்ளது.

எனினும், சுப.வீரபாண்டியன் கூறியது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் எந்த தகவலையோ ஆதாரத்தையோ மேற்கோள்காட்டவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: