You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஜினி முதல் பா.ரஞ்சித் வரை - சர்கார் சர்ச்சையில் சொன்னது என்ன?
சர்கார் திரைப்படம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சில சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறது. கதை திருட்டு சர்ச்சையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வருணுடன் படதயாரிப்பு நிறுவனமும் இயக்குநர் முருகதாஸும் சமரசமாக போயினர்.
இந்நிலையில் கடந்த தீபாவளி தினத்தன்று படம் வெளியானதும், அதில் இடம்பெற்றிருக்கும் சில வசனங்கள், கருத்துக்கள் சமூக வலைதளங்களில் முக்கிய பேசுபொருளாயின.
திரைப்படத்தில் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவச பொருள்கள் முதல் அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை மறைமுகமாக தாக்கும் வண்ணம் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தினார்கள்.
அமைச்சர்கள் தரப்பில் நேரடியாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் சர்கார் சர்ச்சை குறித்து சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள்.
''முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்'' என ட்விட்டரில் எழுதியிருக்கிறார் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தலைவருமான கமல்ஹாசன்.
''சர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ ஜனநாயகம் அழிந்து/இழந்து போய்விட்டது என்று!!!'' என ட்வீட் செய்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.
''தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்'' என ரஜினிகாந்த் சர்கார் திரைப்பட குழுவுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார்.
''தணிக்கைக் குழு தணிக்கை செய்த திரைப்படத்தை தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம். பிறகு ஏன் தணிக்கை துறை தேவை?'' என கொந்தளித்துள்ளார் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி .பிரகாஷ்.
''தணிக்கை துறை ஒப்புதல் அளித்த ஓர் திரைப்படத்தின் இயக்குநரின் சுதந்திரம் மீது தலையிட்டு வன்முறையை கட்டவிழ்த்து விடும் உரிமையை இவர்களுக்கு வழங்கியது இது. அவர்கள் எவ்வளவு பயந்துபோயிருக்கிறார்கள் அற்ப எண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை தமிழக குண்டர்களின் செயல்கள் காட்டுகின்றன '' என நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.
''மன்னனை எதிர்த்து கேள்வி கேட்ட வரலாறும், புலவர்கள் வஞ்சப்புகழ்ச்சி செய்த இலக்கியமும் தமிழில் உண்டு. அரசை கேள்வி கேட்பதும் கேலி செய்வதும் எப்போதும் இருந்ததே! இப்போது இல்லாமல் போனது சகிப்புத்தன்மை! ஆயிரம் கைகள் மறைத்தலும் ஆதவன் மறைவதில்லை. தமக்கான ஆதவனை மக்கள் தேர்வுசெய்வர்'' என்கிறார் நடிகர் பிரசன்னா.
நேற்றைய தினம் தேவராஜன் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்காக இயக்குனர் முருகதாஸ் வீட்டிற்கு காவல்துறை சென்றதாக சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
அதன்பின்னர், ஏ.ஆர். முருகதாஸ் தனது ட்வீட் ஒன்றின் வாயிலாக ''தாம் வீட்டில் இல்லாததால் தனது வீட்டுக்கு நள்ளிரவில் வந்த போலீசார் வீட்டு கதவை பலமுறை தட்டியபிறகு சென்றுவிட்டதாக என்னிடம் கூறப்பட்டுள்ளது'' தெரிவித்திருந்தார்.
இன்று காலை முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பம் தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையில் சர்கார் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட படக்குழு சம்மதம் தெரிவித்ததையடுத்து தணிக்கை துறை காட்சிகளை நீக்க அனுமதி அளித்து அறிக்கை வெளியிட்டது.
அதன்படி தீயில் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவற்றை தூக்கி எறியும் காட்சி நீக்கப்பட்டுளள்து.
கோமளா, பொதுப்பணித்துறை மற்றும் 56 வருடங்கள் போன்ற வார்த்தைகள் இடம்பெறும் காட்சிகளில் ஒலி துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஒருபுறம் காட்சிகள் நீக்கப்பட்டிருந்தாலும் அமைச்சர் செல்லூர் ராஜு ''ஜெயலலிதா கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை சர்கார் படத்தில் எரிக்கும் காட்சியில் விஜய் நடித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம். ஜெயலலிதா இருக்கும்போது மக்கள் நல திட்டங்களை வாழ்த்தி பேசிய நடிகர் விஜய், தற்போது அதனை எதிர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. சர்கார் திரைப்படத்தை திரையிட்டுள்ள திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்'' என செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகமான நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: