You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்கார் - சினிமா விமர்சனம்
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
துப்பாக்கி, கத்தி வரிசையில் ஏ. ஆர்.முருகதாஸ் மற்றும் விஜய் ஆகிய இருவரும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் சர்கார். படம் வெளியாகும் முன்பு படத்தின் கதை தொடர்பாக நடந்த சர்ச்சை மற்றும் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு என அனைத்தும் சர்கார் திரைப்படம் குறித்து ஏராளமான எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருந்தது.
தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய அமெரிக்காவிலிருந்து வரும் விஜய், தனது வாக்கை வேறு யாரோ போட்டு விட்டார் என்று அறிந்தவுடன் தனது வாக்குரிமையை பெற நடத்தும் போராட்டமும், பின்னர், இதனை போல தங்களின் உரிமைகளை பெற மக்களை போராட தூண்டுவதும்தான் கதை.
அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை அதிகாரி என்று அறிமுகப்படுத்தப்படும் விஜய்,, எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்குள்ள போட்டி கம்பெனிகளை நிர்மூலமாக்கி விடுவார் என்ற பில்டப்பை ஆரம்பத்தில் கூறுகின்றனர்.
ஆனால், அதற்கு பிறகு எந்த காட்சியிலும் அவர் பெரிதாக சாஃப்ட்வேர் விஷயங்கள் எதுவும் பேசவில்லை. இந்தியாவுக்கு வரும் விஜய் எந்த கம்பெனியையும் மூடவில்லை. அதற்கு பதில் சில அதிகார வர்க்கத்தினருக்கு மூடுவிழா நடத்த அடுத்த அவதாரம் எடுக்கிறார்.
திரைப்படத்தில் விஜய்யின் ஸ்டைல் மற்றும் உடல்மொழி அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் விதமாக உள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் நவ நாகரீக இளைஞனாக தோன்றும் விஜய், தன் இரு கைகளையும் அகல விரித்தவாறு மேடையேறும் பாணி ஏராளமான கைதட்டல்களை பெறுகிறது.
பாடல்காட்சிகளில் அழகாக தோன்றும் கதாநாயகி கீர்த்தி சுரேஷ், குழந்தைகளுடன் காரில் அமர்ந்திருக்கும் காட்சியில் தனது காதலை செந்தமிழில் விஜய்யிடம் கூறும் பாணி அபாரம்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான். ஒரு சூப்பர் ஹீரோவாக விஜய் உருவெடுக்கும்போது காட்சிகளுக்கு உயிரூட்டுவது பின்னணி இசைதான்.
முதல்வர் மற்றும் ஆளுங்கட்சி தலைவராக வரும் பழ கருப்பையா படத்தின் பிரதான வில்லனாக காட்சிபடுத்தப்படுகிறார். ஆனால், அவரையும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டாம் நம்பர் என்றழைக்கப்படும் ராதாரவியையும் விட பழ கருப்பையாவின் மகளாக வரும் வரலட்சுமி சரத்குமார் அட்டகாசப்படுத்துகிறார்.
கார்ப்ரேட் கிரிமினல் என்று விஜய் தன்னை கூறிக்கொள்ள, அதற்கு தன்னை கருவிலேயே கிரிமினல் என்று வரலட்சுமி சரத்குமார் பதிலடி தருகிறார்.
விஜய்யின் கட்சி அலுவலகத்தில் தடாலடியாக நுழைந்து 'உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்' என மிடுக்காக கேட்பதாகட்டும், 'நாம இருக்கிறோமோ, இல்லையோ கட்சி இருக்கணும்பா என்று அதிக அளவு மாத்திரை தந்து தனது தந்தையை நிரந்தரமாக உறங்க வைக்கும் காட்சியிலும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் அடுத்த கட்டத்துக்கு செல்கிறார்.
'ஒரு ஆள் கூட்டமா மாறுவதும், ஒரு கூட்டம் ஒத்தை ஆளா மாறுவதும் இப்பல்லாம் ஒரேநாள்ல சர்வசாதாரணமா நடக்கும்' மற்றும் 'பொம்பளையாச்சேனு பார்க்குறேன் அடி தாங்க மாட்ட '' என்று கூறும் போலிஸிடம், 'நான் இரண்டு பிள்ளை பெத்தவ; நானா வலி தாங்கமாட்டேன்'' என்று பதிலளிக்கும் பெண் போன்ற ஓரிரு வசனங்களை தவிர ஜெயமோகன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள வசனம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.
படத்தில் நகைச்சுவை காட்சிகள் என்று பெரிதாக எதுவும் இல்லாத காரணத்தாலோ என்னவோ, ஆரம்ப காட்சிகளில் தன் வெளிநாட்டு பாதுகாவலர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடும் விஜய், ஓரிரு காட்சிகளில் அவர்களுடன் சுத்த தமிழில் உரையாட துவங்கிவிடுகிறார்.
ஆளுங்கட்சி அலுவலகத்தில் தனியாளாக செல்லும் விஜய் , அங்கு தன்னை தாக்கும் அடியாள்கள் அனைவரையும் தனியாளாக வீழ்த்துவதும், ஒரு பிளாஷ்பேக் சொல்லி தன்னை கலாய்க்கும் மக்களை தன்னுடன் போராட ஈர்ப்பதும் தமிழ் மசாலா திரைப்படங்களில் ஏற்கனவே பார்த்த காட்சிகள்தான். எல்லாம் மாறினாலும், இவை மாற இன்னும் எவ்வளவு நாட்களாகுமோ?
எல்லா பிரச்சனைகளையும் பற்றி பேசியே ஆகணும் என்ற கட்டாயம் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸுக்கு இருந்ததோ என்னவோ , ஜல்லிக்கட்டு, நீட்,, ஹைட்ரோ கார்பன் , கந்துவட்டி தற்கொலை என எல்லா விஷயத்தையும் படத்தில் கொண்டு வந்துவிடுகிறார். ஆனால், எந்த பிரச்சனையும் முழுமையாக பேசப்படவில்லை.
தேர்தல் காலகட்டத்தில் கன்டெய்னரில் கடத்தப்படும் பணம் போன்ற விஷயங்கள் அண்மை காலத்தில் கூறப்பட்ட சில குற்றச்சாட்டுகளை நினைவுபடுத்துவதாகஅமைந்துள்ளது.
மரம் வச்சா மழை வரும்னு சொல்றாங்க, அப்படினா கடல்ல எப்படி மழை பெய்யுது? இதை கேட்டா நான் முட்டாள்னு சொல்றாங்க என்று ஆளுங்கட்சி தலைவர் ஒருவர் பேசுவது நடப்பு அரசியலில் யார் குறித்த குறியீடு என்று தெரியவில்லை.
'உங்க ஊரில் தியாகம் செஞ்சது யாரு மற்ற மாநிலங்களில் கேட்டா, 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தைத்தான் சொல்வாங்க, ஆனா தமிழ்நாட்டில தான் போன மாசம் நடந்த போராட்டம் பற்றி பேசுவாங்க, இது வேதனையா இருந்தாலும் பெருமையா இருக்கு என்ற வசனத்துடன் திரைப்படம் முடிகிறது. படம் முடியும்போது ஆரம்பிக்கும் அரசியல் கருத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்