You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க இடைக்கால தேர்தல்: நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவம் எப்படி இருக்கிறது?
- எழுதியவர், ரியாலிடிசெக் டீம்
- பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்காவில் நவம்பர் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் இடைக்கால தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
அமெரிக்க காங்கிரஸ் என்பது செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது.
தற்போது அமெரிக்க மக்கள் தொகையில் 60 சதவிகிதமாக இருக்கும் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் 80 சதவிகித உறுப்பினர்கள் என்கிறது அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள்.
அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பாதியாக இருக்கும் பெண்களின் பங்களிப்பு அமெரிக்க காங்கிரஸில் வெறும் 20% மட்டுமே.
சிறுபான்மையின குழுக்களை சேர்ந்தவர்களில், ஹிஸ்பானிக், ஆசியர்கள், ஆஃப்ரிக்க அமெரிக்கர்களின் பிரதிநிதித்துவம் காங்கிரஸில் குறைவான அளவில் இருக்கிறது.
இந்த புள்ளிவிவரங்கள் ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ச்சி கவுன்சிலால் சேகரிக்கப்பட்ட சுயவிவரத் தரவிலிருந்து (profile data) பெறப்பட்டது. இதில், அமெரிக்க காங்கிரஸில் பல்வேறு மக்கள் குழுக்களின் தற்போதைய பங்களிப்பை காட்டுகின்றன.
பிரதிநிதித்துவத்தில் மாற்றம்
கடந்த சில தசாப்தங்களை கவனித்துப் பார்த்தால், இந்தக் குழுக்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த இரண்டு தசாப்தங்களில் பெண்களின் பங்களிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதும் தெரிகிறது.
சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஹிஸ்பானிக் அமெரிக்கர்களின் பிரதிநிதித்துவம் கணிசமாக அதிகரித்துள்ளது.
இனரீதியான சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு, வாக்களிக்கும் உரிமை வழங்கியது அல்லது தேர்தல் சட்டங்களை மாற்றியமைத்து அவர்களின் பங்களிப்பை எளிமையாக்கியதற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் அதிகரித்ததற்கும் வரலாற்று ரீதியான தொடர்பு உள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது 45 ஹிஸ்பானிக் அமெரிக்கர்கள் மற்றும் 48 ஆஃப்பிரிக்க அமெரிக்கர்கள் உள்ளனர்.
பராக் ஒபாமா, அமெரிக்க செனட்டின் ஐந்தாவது ஆஃப்ரிக்க அமெரிக்க உறுப்பினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டனில் பெண்கள்
1992இல், 54 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபோது காங்கிரஸில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்தது. இது அதற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது 69% அதிகம். தற்போது காங்கிரஸில் 107 பெண் உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், இதுவும் மொத்த மக்கள் தொகையின் விகிதாச்சாரத்துடன் ஒப்பிடும்போது குறைவான பிரதிநிதித்துவம் தான்.
2018 இடைக்கால தேர்தல்களில், இதுவரை, முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் 250 பெண்கள் போட்டியிடுகின்றனர்.
பங்கேற்பதில் தடைகள்
1965ஆம் ஆண்டு லிண்டன் ஜான்சன் அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது, வாக்களிக்கும் உரிமைகள் சட்டம் மற்றும் அதில் பிறகு அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அமெரிக்காவின் பாரபட்சமான வாக்களிப்பு நடைமுறைகளை முடிவுக்கு கொண்டுவந்தன. அதுமுதல் ஆஃப்பிரிக்க அமெரிக்கர்களின் பங்களிப்பு அமெரிக்க காங்கிரஸில் கணிசமாக அதிகரித்துள்ளது.
அதற்கு முன், காங்கிரஸில் உறுப்பினராவதற்கு பல்வேறு தடைகள் இருந்ததற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. சிறுபான்மையினர் தேர்தலில் போட்டியிடவும், சில குறிப்பிட்ட சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் வாக்களிக்கவும் தடைகள் இருந்தன.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 'ஆல் வொயிட் பிரைமரி எலக்ஷன்ஸ்' (All-white primary elections) வெள்ளை இனத்தவர் தேர்தலில் பங்கு பெறவும், ஆஃப்ரிக்க அமெரிக்கர்கள் மற்றும் ஹிஸ்பானிக் வேட்பாளர்கள் காங்கிரஸில் உறுப்பினராவதை தடுக்கும் வகையில், குடியரசு கட்சியினர் அமெரிக்காவின் தென்பகுதியில் சட்டங்களை வைத்திருந்தனர். இந்த தடைகள் 1940கள் வரை தொடர்ந்தன.
தேர்தல் நடைபெறும் இடங்களில் ஒரு பகுதியில் 5% வாக்களர்கள் சிறுபான்மையினராக இருந்தால்தான் அங்கு அவர்களின் சிறுபான்மையின மொழியில் வாக்குச்சீட்டு கொடுக்கப்படும் என்பதே 1975ஆம் ஆண்டுவரை இருந்த நிலைமை. அதற்கு பிறகே, வாக்களிக்கும் உரிமைகள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நிலைமைகள் மாறின. இது, ஸ்பெயின் மொழி பேசும் சமூகத்தில் பகுதியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி, ஹிஸ்பானிக் சிறுபான்மையின வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு வழிகோலியது.
சிறுபான்மைக் குழுக்கள், வாக்காளர்களாக பதிவு செய்வதில் இருக்கும் தடைகள் மிகவும் சர்ச்சைக்குரிய சிக்கலாகவே தொடர்கின்றன.
குடிவரவுச் சட்டத்தில், வாக்களிக்கும் உரிமை உட்பட ஆசியர்களின் குடியுரிமை உரிமைகள் 1952ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பிறகே, ஆசியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய அமெரிக்க சமூகத்தினர் முதல் முறையாக வாக்களிக்க முடிந்தது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது 16 ஆசியர்கள் (இந்திய மற்றும் பசிபிக் தீவுகளை உள்ளடக்கியவர்கள்) உறுப்பினர்களாக உள்ளனர்.
இன்று நடைபெறும் இடைக்காலத் தேர்தலில், ஆளுநர், மாநில மற்றும் உள்ளூர் நிலை வாக்காளர்களாக 60 ஆசிய அமெரிக்கர்கள் களம் இறங்கியுள்ளனர்.
பூர்வீக அமெரிக்கர்களின் பங்களிப்பு எப்படி இருக்கிறது?
1924 வரை அமெரிக்காவின் பூர்வ குடிகளுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. பிறகு மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகும் அவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. ஏனெனில் பூர்வ குடிகளுக்கு வாக்களிக்கும் உரிமையை மறுப்பதற்கான சட்டங்களை பல மாகாணங்கள் உருவாக்கின. பிறகு நாடு முழுவதும் பூர்வ குடிகளுக்கான வாக்குரிமை வழங்குவதற்கு மேலும் 40 ஆண்டுகள் ஆகின. இறுதியாக 1962 ஆம் ஆண்டு பூர்வ குடிகளுக்கும் வாக்குரிமை வழங்கிய மாகாணம் நியூ மெக்ஸிகோ.
இதுவரை 14 பூர்வகுடி அமெரிக்கர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்திருப்பதாக நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை அறிக்கை கூறுகிறது. ஓக்லஹோமாவில், சிக்காசாவ் பழங்குடியினத்தை சேர்ந்த டாம் கோல் மற்றும் செரோகி பழங்குடியினத்தை சேர்ந்த மார்க்வெய்ன் முலின் ஆகிய தற்போதைய இரு காங்கிரஸ் உறுப்பினர்களும் அந்த 14 பேரில் அடங்குவார்கள்.
2018 புதிய களத்தை உருவாக்குமா?
பெண்கள், ஹிஸ்பானிக், ஆசிய மற்றும் ஆஃப்ரிக்க அமெரிக்கர்களின் பிரதிநிதித்துவம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிகரிக்கும் என்பது உண்மை. இருந்தபோதிலும் தற்போதும்கூட, அமெரிக்க காங்கிரஸின் உருவாக்கம், அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்களையும் பிரதிபலிக்கத் தவறிவிட்டது.
அமெரிக்க காங்கிரஸில் உறுப்பினராக விரும்புபவர்களின் பன்முகத்தன்மையை அளவிடுவது கடினம் என்றாலும், தேர்தலில் பலரின் வெற்றி கேள்விக்குறியாக இருந்தபோதிலும், போட்டியிடும் பெண்கள் மற்றும் சிறுபான்மை குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :