You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க இடைக்கால தேர்தல்: ஜனநாயக கட்சி வெற்றி - டிரம்ப்புக்கு பின்னடைவு
அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இடைக்கால தேர்தலில் வென்றதன் மூலம் ஜனநாயக கட்சி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டின் கீழவையை கைப்பற்றியுள்ள ஜனநாயக கட்சிக்கு இந்த வெற்றி அதிபர் டிரம்பின் முயற்சிகளை முறியடிக்கும் வாய்ப்பாக அமையக்கூடும்.
ஆனால், அதே வேளையில் செனட் சபையில் தனது பலத்தை அதிகரிக்க குடியரசுக் கட்சி முயலும்.
அமெரிக்க காங்கிரஸ் என்பது செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது.
செவ்வாய்கிழமை நடந்த தேர்தல் வாக்கெடுப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்பட்டது.
தேர்தல் சக்கரத்தில் பெண்களுக்கான ஆண்டு என்று கூறப்பட்ட நடப்பு ஆண்டில் பெண் வேட்பாளர்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தல்களில் இம்முறைதான் மிக அதிக அளவு வாக்குப்பதிவு நடந்திருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடக்கம் முதலே, இந்த இடைக்கால தேர்தலில் மிக அதிக அளவில் வாக்குப்பதிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முன்னதாக, இந்த இடைக்கால தேர்தல்களில், தனது கட்சியான குடியரசு கட்சிக்கு ஆதரவு சேகரிக்கும் கடைசி கட்ட முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டார்.
''நாளைய தேர்தல் நம் சாதனைகள் அனைத்துக்கும் பதில் கூறுவதாக அமையும்'' என்று டிரம்ப் கடைசியாக நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
இந்த இடைக்கால தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் கொண்ட செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
அமெரிக்க காங்கிரஸ் என்பது செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது.
தற்போது அமெரிக்க மக்கள் தொகையில் 60 சதவிகிதமாக இருக்கும் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் 80 சதவிகித உறுப்பினர்கள் என்கிறது அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள்.
அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பாதியாக இருக்கும் பெண்களின் பங்களிப்பு அமெரிக்க காங்கிரஸில் வெறும் 20% மட்டுமே.
சிறுபான்மையின குழுக்களை சேர்ந்தவர்களில், ஹிஸ்பானிக், ஆசியர்கள், ஆஃப்ரிக்க அமெரிக்கர்களின் பிரதிநிதித்துவம் காங்கிரஸில் குறைவான அளவில் இருக்கிறது.
இந்த புள்ளிவிவரங்கள் ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ச்சி கவுன்சிலால் சேகரிக்கப்பட்ட சுயவிவரத் தரவிலிருந்து (Profile data) பெறப்பட்டது. இதில், அமெரிக்க காங்கிரஸில் பல்வேறு மக்கள் குழுக்களின் தற்போதைய பங்களிப்பை காட்டுகின்றன.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது 45 ஹிஸ்பானிக் அமெரிக்கர்கள் மற்றும் 48 ஆஃப்பிரிக்க அமெரிக்கர்கள் உள்ளனர்.
பராக் ஒபாமா, அமெரிக்க செனட்டின் ஐந்தாவது ஆஃப்ரிக்க அமெரிக்க உறுப்பினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய முரண்பாடுகள்
அமரிக்க காங்கிரசின் பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் டிரம்பின் சட்டமியற்றும் திட்டங்களுக்கு அந்தக் கட்சி முட்டுக்கட்டைகள் போட முடியும் என்கிறார் பிபிசி செய்தியாளர் அந்தோனி ஜர்ச்சர்.
முக்கியமான குழுக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும். டிரம்பின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்கு ரஷ்யா உதவியதான குற்றச்சாட்டு குறித்து அவர்களால் தற்போது விசாரிக்க முடியும். டிரம்பின் தனிப்பட்ட நிதி நிலையும் தற்போது அவர்களது விசாரணைக்குள் வரும் என்கிறார் அந்தோனி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: