சர்கார்: அதிகரிக்கும் சர்ச்சை - நீக்கப்படுகிறதா காட்சிகள்?

சர்கார் திரைப்படத்தில் சில காட்சிகள் மக்களுக்கு விலையில்லா பொருட்கள் அளிப்பதையும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் மோசமாக சித்தரிப்பதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

திரைப்படத்தில் விஜய்க்கு சவால் விடும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் பெயர் கோமலவள்ளி. இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் என்றும் இது ஜெயலலிதாவை கேவலப்படுத்தும் செயல் என அதிமுக போராட்டத்தில் இறங்கி உள்ளது.

அது மட்டுமல்லாமல், மக்களுக்கு விலையில்லா பொருட்கள் அளிப்பது ஒரு மக்கள் நல அரசின் செயல். அதை கேவலப்படுத்துவதுபோல சித்தரிப்பது உள்நோக்கம் கொண்டது என்கிறார்கள் செயற்பாட்டாளர்கள்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திரைப்படம் ஓடும் திரையரங்குகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் திரைப்படத்திற்காக வைக்கப்பட்டுள்ள பதாகைகளும் அகற்றப்பட்டுள்ளன.

தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, "வளர்ந்துவரும் நடிகர் விஜய்க்கு இது தேவையற்ற செயல்" என்று விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, இதுபோல திரைப்படம் எடுக்க தைரியம் இருந்ததா என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

அமைச்சர் சி.வி.சண்முகமோ படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் மட்டுமல்லாமல், படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீது கூட வழக்கு பதியப்படும் என்று கூறி உள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சர்காருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்." என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான சூழ்நிலையில் சில காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

படம் வெளிவருவதற்கு முன்பே, சர்கார் படத்தின் கதை வருண் என்கிற உதவி இயக்குநரின் கதை என்ற பிரச்சனை ஏற்பட்டது. தென் இந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் இதில் தலையிட்டது, அதன் அப்போதைய தலைவர் பாக்கியராஜ் வருணின் கதையும், முருகதாஸின் கதையும் ஒரே மாதிரி உள்ளது என்றார். பின் இது நீதிமன்றம் வரை சென்று, திரைப்பட டைட்டில் கார்டில் வருணின் பெயரும் குறிப்பிடப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: